பதிவு செய்த நாள்
14
டிச
2015
03:12
சர்வ வியாபியான மகாவிஷ்ணுவைப் பற்றி விஷ்ணு புராணத்தில் விசோதாதோ; ப்ரவேசனாத் என்று ஒரு ஸ்லோகம் வருகிறது. எங்கும், எப்பொழுதும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாவிஷ்ணுவைப் பற்றி எல்லாரும் உணரவேண்டும் என்பதற்காகவும் தனது பக்தனைக் காக்கவும் மகாவிஷ்ணு சுவாதி நட்சத்திரத் திருநாளில் நரசிம்ம அவதாரத்தை எடுத்தார். நரசிம்மரை ஆழ்வார்கள் பலவாறு போற்றி வழிபட்டுள்ளனர். அதில் குறிப்பாக ஆண்டாள்.
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கை
வைத்து
பொரிமுகம் தட்டக் கனாக் கண்டேன்
தோழி
என்றும்
திருமங்கையாழ்வார்.
தூணா யதனூடரியாய் வந்து தோன்றி
பேணா வவுண னுடலம் பிளந்திட்டாய்!
சேணார் திருவேங்கட மாமலைமேய
கோணா கணையாய் குறிகொள்ளெனை
நீயே!
என்றும்;
மகரம் வளருமளவில் பௌவம் அடையவுற்ற லைத்தனை
வடிவு கமடமென வமர்ந்து கிரிதனைத்
தரித்தனை
மலியும சுரனுரமிடத்து வசுதையைப்
பெயர்த்தனை
வலிகொ ளவுணனுடல் பிளந்து மதலை
மெய்க்குதித்தினை
என ஸ்ரீவேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைணவச் சான்றோர் பாடியுள்ளனர்.
நரசிம்ம அவதாரத்தின் கதை அனைவரும் அறிந்ததே, அதாவது இரண்ய கசிபு என்பவன் ஓர் கொடிய அசுரன். அவனது மகன் பிரகலாதன் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தன் இரண்ய கசிபு மகாவிஷ்ணுவைத் தனது பரம எதிரியாகக் கருதியவன் பிரம்மா தந்த வரத்தால் உலகையே ஆட்டிப்படைத்தான். தேவர்களைக் கொடுமைப்படுத்தியவன்; பல பாவ காரியங்களைச் செய்தவன்; மகாவிஷ்ணுவை வணங்கிய தனது மகனையே கொல்ல முற்பட்டவன் தனது பரம பக்தனைக் காக்க, மகாவிஷ்ணு சிங்கமுகத்துடன் மனித உருவில் வந்து இரண்ய கசிபுவை அழித்தார். இப்படிப்பட்ட செய்திகளைச் சொல்லலாம்
இந்தக் கதையை மேலோட்டமாகப் பார்க்கும்போது. நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் என்பது துஷ்ட சம்ஹாரமும்; சிஷ்ட பரிபாலனமும் எனத் தெரியும். ஆனால் இந்தக் கதையில் உண்மையை சற்று புதிய கோணத்தில் ஆராய்ந்த பார்த்தோமானால் நான்கு முக்கிய காரணங்கள் புலப்படும்.
துன்பத்திலும் இறைவனிடம் வைத்திருக்கும் நம்பிக்கை. தீயதைச் செய்தால், அவன் சக்கரவர்த்தியாக இருந்தாலும் இறைவனிடம் தண்டனை நிச்சயம். பக்தனை இறைவன் என்றும் கைவிட மாட்டார். இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதாகும். முதலாவதாக, இரண்ய கசிபு தனது எதிரியான மகாவிஷ்ணுவை தனது மகன் துதித்ததால் அவனை பலவகையில் கொடுமை செய்தான். ஒரு கட்டத்தில் கொல்லவே துணிந்தான். இப்படியாகப் பல சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கும் நேரத்திலும் பிரகலாதன் தனது முடிவில் சற்றும் மாறாமல் திருமாலை தொடர்ந்து துதித்தவண்ணம் இருந்தான். இந்த செயலைப் போற்ற வேண்டும். காரணம், பொதுவாக தொடர்ந்து துன்பத்தை அனுபவிக்கும்போது, இறைவன் நம்மைக் காக்கவில்லையே என்று வெறுப்புண்டாகும். நாத்திக வாதம் வெளிப்படும்.
அங்ஙனமின்றி பிரகலாதன் தூய பக்தியுடன் திருமால்மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தான். இந்த மனப்பாங்கை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நரசிம்ம அவதாரம் காட்டுகிறது. இரண்டாவதாக, இரண்ய கசிபு தனது அரச பதவியையும் பிரம்மா கொடுத்த வரத்தையும் ஒரு சுவாசமாகக் கொண்டு பல அக்கிரமங்களைச் செய்தான். பூமியெங்கும் தனது பெயரைத்தான், இறைவன் பெயர் போன்று உச்சரிக்க வேண்டுமென கட்டளையிட்டான். மகாவிஷ்ணுவை தனது முதல் எதிரியாகவே பாவித்தான். தேவர்களையும் மக்களையும் பல வகையில் துன்புறுத்தினான். இப்படியாகப் பல அதர்மச் செயல்களையே செய்தது. மட்டுமின்றி தனது மகனையே கொல்லத் துணிந்தான். தர்மநெறியைத் தவறி நடக்கும். நபர்கள் தங்களின் பதவி, அந்தஸ்து பட்டம் போன்றவற்றைக் கொண்டு தண்டனையிலிருந்து தப்பிக்க முயலுவதுண்டு அங்ஙனமின்றி தவறு யார் செய்தாலும் தண்டனை நிச்சயம் என்பதை அசுர குலத்தின் அரசனான இரண்ய கசிபுவைக் கொன்ற தன் மூலம் நிருபித்தார். அனைவரும் அற வழியில்தான் செல்லவேண்டும். என்பதை உணர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது நரசிம்ம அவதாரம்.
மூன்றாவதாகத் தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களை, சகல பாவங்களிலிருந்தும் துன்பத்திலிருந்தும் இறைவன் காப்பாற்றுவான் என்பது நிரூபிக்கப்படுகிறது. இதையே கண்ணன் பகவத் கீதையில் சொல்லுகிறான்.
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி
மா சச//
( எல்லா தர்மங்களையும் விட்டு, என் ஒருவனையே சரணமாக அடைவாயாக நான் உன்னை சகல துன்பத்திலிருந்தும், பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.)
நான்காவதாக, மகாவிஷ்ணு தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளார். இதைத் தான் பாரதியார் தனது கவிதையில்.
சொல்லடா ஹரி யென்ற கடவுளெங்கே? சொல்லென்று
ஹிரணியன்தான் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வான் - தூணிலுள்ளான்
நாராயணன் துரும்பிலுள்ளன் என்றான்!
வல்லப் பெருங்கடவுளிலா அனுவொன்றில்லை!
என பாடியுள்ளார். தனது பக்தன் பிரகலாதனின் வாக்கை நரசிம்மர் மெய்பித்துக் காட்டினார். இதே போன்று ஓர் சம்பவம் சங்கரரின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. சங்கரரை காபாலிகன் ஒருவர் பலிகொடுக்க முற்பட்டபோது. சங்கரரின் சீடரான பத்மபாதர் தமது இஷ்ட தெய்வமான நரசிம்மரை வேண்டவே உக்கிரமான வடிவில் நரசிம்மர் தோன்றி காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காப்பாற்றினார். எங்கெங்கும் வியாபித்திருப்பவர் மகாவிஷ்ணு என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. நரசிம்ம அவதாரம். இப்படியாக, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனின் ஒவ்வொரு அவதாரத்தையும், திருவிளையாடல் நிகழ்வையும் ஏதோ கதை என்றோ, கற்பனை என்றோ பாராமல் அந்த நிகழ்வின் மூலம் சொல்லவரும் கருத்தையும் காரணத்தையும் அறிந்துகொள்வது அவசியம். அதுமட்டுமின்றி அதில் புதைந்திருக்கும் தத்துவ உண்மையின்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.