பதிவு செய்த நாள்
29
டிச
2015
06:12
நம் உடம்பிலுள்ள இவ்வேழு சக்கரங்களிலே நம்முடைய மூச்சு சுற்றிக் கொண்டிருப்பதால், அதன் நடப்பையும் அவ்வவ் சக்கரத்திற்குரிய அதி தேவதைகளையும் உணர வேண்டும். மூலாதாரத்திற்கு அதிதேவதை விக்கினேஸ்வரரான கணபதி. அவருக்காக காலை 6 மணி முதல் 6 மணி 40 நிமிடங்கள் வரை 600 மூச்சுகள் (ஸட்ஸதம்) நம்முள்ளே மூலாதாரத்தில் நடந்து கணபதியின் பசியை ஆற்றி அவரைத் திருப்திப்படுத்தும், பிறகு அந்த மூச்சு சுவாதிஷ்டான சக்கரத்திற்கு சென்று அதன் அதிதேவதையான பிரஜாபதி எனும் பிருமதேவருக்காக காலை மணி 6.41 முதல் பகல் 1.20 மணி வரை ஆறாயிரம் மூச்சுகளாக (ஷட்ஸஹஸ்ரமாக) நடந்து அவருடைய பசியை ஆற்றி அவரைத் திருப்திப்படுத்தும் - பிறகு மூச்சு அந்த இடத்திலிருந்து நாபி ஸ்தானத்திற்கு (கொப்பூழின் இடத்திற்கு) சென்று அங்குள்ள மணிபூரகச் சக்கரத்தினுள் நுழைந்து,அதன் அதிதேவதையான மகாவிஷ்ணுவிற்காக பகல்மணி 1.20 முதல் இரவு 8 மணி வரை ஆறாயிரம் மூச்சுகள் நடந்து அவருடைய பசியை ஆற்றி அவரைத் திருப்தி செய்யும். பிறகு அந்த மூச்சு அவ்விடத்திலிருந்து இருதய கமலமான அனாகதச் சக்கரத்திற்கு சென்று அதன் அதிதேவதையான ருத்திரருக்காக இரவு 8--1 முதல் இரவு மணி 2-40 வரை ஆறாயிரம் மூச்சுகள் நடந்து அவரைத் திருப்திப்படுத்தும். பிறகு மூச்சு அவ்விடத்திலிருந்து கண்ட ஸ்தானத்திலுள்ள விசுத்தி சக்கரத்திற்கு சென்று அதன் அதி தேவதையான மகேஸ்வரருக்காக இரவு மணி 2-41 முதல் 3-46 வரை ஆயிரம் மூச்சுகளாக (ஸஹஸ்ரமாக) நடந்து அவரைத் திருப்திப்படுத்தும். பிறகு மூச்சு அவ்விடத்திலிருந்து புருவங்களின் மத்தியிலுள்ள ஆக்ஞேய சக்கரத்திற்கு சென்று அதன் அதிதேவதையான ஜீவன் அல்லது ஈஸ்வரனுக்காக இரவு 3-47 முதல் 4.53 வரை ஆயிரம் மூச்சுகள் நடந்து அவரை திருப்தி செய்யும். பிறகு மூச்சு அவ்விடத்திலிருந்து தலையின் பிரம கபாலத்திலுள்ள ஸஹாஸராரச் சக்கரத்திற்கு சென்று அதன் அதிதேவதையான பரமாத்மாவிற்காக காலை மணி 4.54 முதல் 6 மணி வரை ஆயிரம் மூச்சுகள் நடந்து அவரைத் திருப்தி செய்யும், பிறகு அந்த மூச்சு மறுபடியும் மூலாதாரத்திலுள்ள கணபதியைத் திருப்தி செய்யச் செல்லும். இவ்வாறு வாழ்நாள் தோறும் நடந்து கொண்டிருக்கும்.
நம் உடம்பிலுள்ள இந்த ஏழுச்சக்கரங்களையும் சுட்டிக் காட்டுவதற்கே ஸ்ரீரங்கத்திலுள்ள கோயிலுக்கு ஏழு சுற்றுப் பிரகாரங்கள் கட்டப்பட்டதாகக் கூறுவார்கள். திருப்பதியை ஏழுமலை என்பதும் நம்முள் இருக்கும் இவ்வேழு சக்கரங்களைச் சுட்டிக் காட்டுவதற்கேயாகும். மேலும் சிவத்தலங்களான காஞ்சி, திருவண்ணாமலை, ஐம்புகேச்வரம். காளஹஸ்தி, சிதம்பரம், காசி, மதுரை, என்னும் க்ஷேத்திரங்களை நம் உடம்பினுள்ளே முறையே மூலாதாரம் சுவாதிஷ்டானம். மணிபூரகம் அநாகதம் விசுத்தி, ஆக்ஞேயம். ஸஹஸ்ராரம் என்னும் ஏழு சக்கரங்களிலும் காணலாம் என்றும் கூறுவார்கள்.
மூன்று மண்டலங்கள்
1. அக்கினி மண்டலம்: 2. ஆதித்த (சூரிய) மண்டலம் 3. சந்திர மண்டலம், இவற்றை தமிழில் முறையே தீமண்டிலம், ஞாயிற்று மண்டிலம் திங்கள் மண்டிலம் என வழங்கலாம். இவை நம் உடலிலேயே இருப்பவை.
அக்கினி மண்டலம், மூலாதாரத்திற்கு இரண்டு விரலளவு மேலே பிருதிவியும் அப்பும் (மண் தத்துவமும் நீர்த்தத்துவமும்) கூடின இடத்தில் முக்கோணமாய் நான்கு இதழ் கமலமாக இருக்கும்.
ஆதித்த (சூரிய) மண்டலம் - உந்திக்கு மேலே, இருதய கமலத்தில் அறுகோணமாய் எட்டு இதழ்க் கமலமாக இருக்கும். இது வாழைப் பூப்போல கீழ்நோக்கியிருக்கும்.
சந்திரமண்டலம் - மூலாதாரம் முதலாக ஒவ்வொரு எழுத்தை முன்னிட்டுக் கொண்டு தலையின் நடுவே, அக்கினி, மண்டலத்தை நோக்கியவாறு கோடிக் சந்திரர்கள் உதித்ததுபோல் பிரகாசத்தோடு நிலையாக இருக்கும். இதை அமிர்தகலை என்றும் சொல்வார்கள். அமிர்தம் மேல் நோக்கியும் அக்கினி கீழ்நோக்கியும் சரியாக இருக்கும். இதன் மத்தியில் பராசக்தி வீற்றிருப்பாள்.
நாடிகள் 10-----( தசநாடிகள்)
1. இடைகலை; 2. பிங்கலை; 3. சுழுமுனை; 4. சிகுவை; 5. புருடன்; 6. காந்தாரி; 7. அத்தி; 8. அலம்புடை; 9. சங்கினி; 10. குகு. இவற்றைத் தமிழில் முறையே, 1. இடது மூச்சு அல்லது இடப்பக்க நரம்பு; 2. வலது மூச்சு அல்லது வலது பக்க நரம்பு; 3. நடுமூச்சு அல்லது நடுநரம்பு; 4. உள் நாக்கு நரம்பு; 5. வலக்கண் நரம்பு; 6. இடக்கண் நரம்பு; 7. வலச் செவி நரம்பு; 8. இடச் செவி நரம்பு; 9. கருவாய் நரம்பு; 10. மலவாய் நரம்பு என வழங்குவார்கள்.
இடைகலை - இடது மூக்கில் நடக்கும் மூச்சு, இதைச் சந்திர நாடி என்றும் சக்தி நாடி என்றும் சொல்வதுண்டு.
பிங்கலை - வலது மூக்கில் நடக்கும் மூச்சு, இதைச் சூரிய நாடி என்றும், சிவன் நாடி என்றும் சொல்வதுண்டு, இந்த நாடியும் இடைகலை நாடியும் நெற்றிச் சக்கரம் முதல் மூலாதாரம் வரை வலம் இடமாக வியாபித்து அதன் மத்தியின் சழுமுனையை அனுசரித்து திரியும். புருவ மத்தியில் இவை இருந்து கொண்டு வலது நாசி இடது நாசிகளில் பிராணவாயுவை உஸ்வாஸ நிஸ்வாஸங்களாக நடத்திக் கொண்டிருக்கும்.
சுழுமுனை - இதை ஸுஷும்னா நாடி என்றும் சொல்வார்கள்; இது மூலாதாரம் (மலவாயான குதஸ்தானம்) முதல் தலையிலுள்ள பிரம்ம கபாலம் வரையில் திரிந்து கொண்டிருக்கும் நாடி.
இவை மூன்று நாடிகளும் மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங்களிலும், மூன்று மண்டலங்களிலும் ஊடுருவி முட்டி நிற்கும். இடைகலை, பிங்கலை இரண்டும் சுழுமுனையிலே இயங்கிக் கத்திரிக்கோலின் பாகமாகி வீணாத்தண்டு என்னும் வில்லிற்கு நாணிட்டதுபோல் கபாலத்தை முட்டிக் குதிரை முகமாய் மூக்களவு வரை பற்றி நிற்கும். இவ்விரண்டும் மாறும் இடமான புருவங்களின் நடுவே நெற்றிடத்தில் தாமரைக் கொடியிலுள்ள நூல்போல் சின்னஞ்சிறு ரந்திரம் உண்டு. அது தான் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் கலக்குமிடமான திரிவேணி சங்கமமாகும் அதுதான் சச்சிதானந்தம் (மெய்யறிவின்பம்) இருக்கும் இடம்.
சிகுவை ( உள் நாக்கு நரம்பு) இந்நாடி மூலாதாரத்தில் தொடங்கி, உண்ணாக்கிலே நின்று அன்னபானங்களை விழுங்கச் செய்யும்.
புருடன் (வலக்கண் நரம்பு) இந்த நாடி மூலாதாரத்தில் தொடங்கி வலது கண் வரை வந்து நிற்கும்.
காந்தாரி (இடக்கண் நரம்பு) இந்த நாடி மூலாதாரம் தொடங்கி இடக்கண் வரை வந்து நிற்கும்.
காந்தாரி, ஹஸ்தி, ஜிஹ்வா என்னும் இரண்டு நாடிகளும் கண்களில் இருந்து கொண்டு பொருட்களைத் தெரியச் செய்யும். இருதயத்திலிருந்து மேலே வியாபித்திருக்கும்.
அத்தி: இந்த நாடி மூலாதாரம் தொடங்கி வலது காது வரை வந்து நிற்கும்.
அலம்புடை - இந்த நாடி மூலாதாரம் முதல் இடது காது வரை வந்து நிற்கும். அலம்புஷா என்ற இந்த நாடியும் பூஷா என்னும் நாடியும் செவி ஸ்தானத்திலிருந்து பற்பல சப்தங்களைக் கேட்கச் செய்யும்.
சங்கினி இது மூலாதாரம் முதல் கருவாய் (ஆண் பெண் இனக்குறி) வரை வந்து நிற்கும்.
குரு - இது மலவாய் வரை வந்து நிற்கும். குகு எனப்படும் இந்த குகு நாடியும் சிநீவாலி என்னும் நாடியும் மலஜலங்களை விடச் செய்து அநாகதச் சக்கரம் முதல் லிங்க குத ஸ்தானம் வரை வியாபித்திருக்கும்.
ரக்தவியானன் என்னும் நாடி அநாகதம் (இருதயம்) முதல் சுவாதிஷ்டானம் (லிங்கம்) வரை வியாபித்து இனக் குறியான மர்மஸ்தானத்தில் குரு நாடியோடு கலந்து ஆண் பெண் இன்பச் சுரப்புகளான சுக்கில சோணிதங்களை அதிகமாய் வெளியே தள்ளச் செய்யும்.
வாயுக்கள் 10 (தச வாயுக்கள்)
1. பிராணன்; 2. அபானன்; 3. வியானன்; 4. உதானன்; 5. சமானன்; 6. நாகன்; 7. கூர்மன்; 8. கிருகரன்; 9. தேவதத்தன்; 10. தனஞ்சயன், இவை தமிழில் முறையே 1. உயிர்க் காற்று 2. மலக்காற்று; 3. தொழிற் காற்று 4. ஒலிக் காற்று; 5. நிரவுக் காற்று; 6. விழிக் காற்று; 7. இமைக்காற்று; 8. தும்மல் காற்று; 9. கொட்டாவிக் காற்று; 10. வீங்கல் காற்று என வகுப்பட்டு பத்து வளிகள் என வழங்கப்படும் முதல் ஐந்தும் பிரதான வாயுக்கள், மற்ற ஐந்தும் உபவாயுக்கள்.
1. பிராண வாயு இது இருதய ஸ்தானத்திலிருந்து நாசி (மூக்கு) ரேந்திரங்களின் வழியாக மேல் நோக்கி உஸ்வாஸமாக (ரேசகமாகச்) சஞ்சரித்து பசி தாகங்களை உண்டாக்கி உண்ணும் உணவுகளை ஜீரணிக்கச் செய்யும் இது லலாட மத்தியிலே தோன்றி சந்திர நாடியிலே விழுந்து மூலாதாரத்திலே ஓம் என்று உதித்து நாபியிலுள்ள மணிபூரகச் சக்கரத்தில், ரீம் என்று முட்டி இடைகலை பிங்கலைகளிலே ஓடி. கபாலத்தைச் சுற்றி மூக்கு வழியாகப் புறப்பட்டு, நான்கு விரற்கடையளவு கழிந்து சென்று எட்டு விரற்கடை பிரமாணமீந்துதான் நின்ற ஸ்தானத்திலேயே தாக்கும் என்றும் கூறுவார்கள்.
2. அபானன் - மலக் காற்று. இது குதத்தையும் (மலவாயையும்) குய்யத்தையும் (கருவாயையும் ; மர்மக் குறியையும்) பற்றி நின்று மலமூத்திரங்களையும் ஆண் பெண் இன்பச் காப்புகளான சுக்கில சோணிதங்களையும் வெளியே தள்ளும்படி செய்து நிஸுவாஸ ரூபமாக (பூரக வடிவமாகச்) சஞ்சரிக்கும்.
3. வியானன் - தொழிற் காற்று, இது உடலின் பாகங்கள் அனைத்திலும் வியாபித்து ஸ்பரிசங்களை கிரகித்துணர்த்தி கலைகளை நிறைவிக்கும் மேலும் உண்ட சோற்றைத் திப்பி வேறு சாறு வேறாகச் செய்து கொண்டிருக்கும்.
4. உதானன் - ஒலிக் காற்று இது உதாரக்கினியை எழுப்பி, கண்ட ஸ்தானத்திலிருந்து அன்னத்தை விழுங்கி, அதன் சாரத்தை நாடிகளுக்கு வியாபிக்கச் செய்து ஓசையோடு கலந்து குரல் ஒலி எழுப்பும் தூங்கும்போது கண், மூக்கு வாய், காது, மேல்தோல் என்னும் ஐம்பொறிகளையும் அஞ்ஞானம் (அறியாமை) எனும் இருளில் அழுந்தச் செய்து தூங்கி எழுந்தவுடன் அந்தந்தப் பொறிகளை அதனதன் ஸ்தானத்தில் இருக்கம்படி செய்யும்.
5. சமானன் (நிரவுக் காற்று) - இது நாபி ஸ்தானத்தில் இருந்து உதான வாயுவினால் அனுப்பப்படும். உணவின் சாரத்தை நாடி (நரம்பு)களுக்கு சமமாகப் பங்கிட்டு நிரவலாக்கி உடலை வளர்க்கும்.
இவை ஐந்தும் உடலில் சஞ்சரிப்பதால் தான் மனிதன் உயிரோடு சஞ்சரிக்கிறான். அதனால் இவை பஞ்ச பிராணன்கள் எனப்படும்.
6. நாகன் - விழிக் காற்று, இது கண்டத்தில் இருந்து வாந்தியை உண்டு, பண்ணும் கண்களினால் பார்க்கச் செய்யும் முக்கல், சோம்பல், திமிரல் முதலானவற்றையும் உண்டாக்கும்.
7. கூர்மன் - இமைக்காற்று, இது கண்களிலிருந்து திறக்கவும் மூடவும் செய்யும் மயிர்க் கூச்சல், புளகம், சிரிப்பு, முகலட்சணம் முதலானவற்றை உண்டாக்கும்.
8. கிருகரன் - தும்மற்காற்று இது மூக்கிலிருந்து குருகுருத்து தும்மலை உண்டாக்கி அழவைத்துத் திரியும்.
9. தேவதத்தன் - (கொட்டாவிக் காற்று) இது மார்பில் இருந்து கபத்தை சேர்த்துக் கட்டித் கொட்டாவியையும் விக்கலையும் உண்டாக்கும்.
10. தனஞ்சயன் - வீங்கல் காற்று, இது கருப்பத்திலுள்ள பிண்டலத்தை வெளியே தள்ளும். பிராணன் போய் மனிதன் மாண்ட பிறகும் இது அவனுடைய உடலை விடாமல் பற்றி நின்று உடம்பை வீங்கச் செய்தும் விரிவித்தும் புழுவித்தும் நாற்றமெடுக்கும்படி செய்தும் தகனம் செய்யும் வரை உடம்பிலேயே இருந்து இறுதியில் கபாலத்தைப் பிளந்து கொண்டு போகும்.
இப்பத்து வாயுக்களும் பத்து நாடிகளில் திரிந்து கொண்டிருக்கும்.
இவற்றோடு வயிரவன், முக்கியன், அந்தரியாமி, பிரவஞ்சனன் என்னும் நான்கு வாயுக்களையும் சேர்த்து பதினான்கு வாயுக்கள் என்றும் கூறுவார்கள்.
11. வயிரவன் - கால் எலும்பும் கதிரெழும்பும் கூடியிருக்கும் இடத்திலே நின்று உடலில் அவஸ்தைகளை உண்டாக்கி ஈளை இருமல் முதலான பிணிகளை உண்டாக்கும்.
12. முக்கியன் - கை எலும்புகள் இரண்டும் கதிரெழும்பும் கூடிய இடத்தில் நின்று உடலின் யாக்கைகளைச் சிறக்க நிறுத்தும்.
13. அந்தரியாமி - ஜீவிதனுக்கு வாகனமாய் இருந்து பிராண வாயுவைத் தோற்றுவிக்கும்.
14. பிரவஞ்சனன் - பிரணவத்திற்கு இருப்பிடமாக இருக்கும். இந்தப் பிரவஞ்சனனும் மேற்கூறிய அந்தரியாமியும் உடலுக்கு அடையாணியாகவும் அச்சாணியாகவும் விளங்குவன.
அவத்தைகள் - 5. (பஞ்சாவஸ்தைகள்)
1. சாக்கிரம் 2. சொப்பணம் ; 3. சுழுத்தி (ஸுஷுப்தி) 4. துரியம்; 5. துரியாதீதம். இவை தமிழில் முறையே 1. நனவு; 2. கனவு; 3. உறக்கம்; 4. பேருறக்கம் (நிட்டை); 5. உயிர்ப்படக்கம் என வகுக்கப்பட்டு ஐவகை நிலைகள் என வழங்கப்படும்.
1. சாக்கிரம் (நனவு) புருவ மத்தியில் சதுரங்க பலத்துடன் ராஜாவைப் போல் கொலு வீற்றிருப்பது சுவை, ஒளி முதலான ஐம்புலன்கள் வாக்கு முதலான ஐந்து கருமேந்திரியங்களின் செயல்கள்; மனம் முதலான நான்கு அந்தக்கரணங்கள் (அகக் கருவிகள் ) இவற்றோடு பராசக்தியின் அருளால் சுகதுக்கங்களை அறிந்து நிற்கும் போது சாக்கிரம் எனப்படும்.
கண்டன ஐந்தும் கலந்த வோரைந்தும்
உண்டன நான்கும் ஓங்கியது உணர்ந்துபின்
பண்டைபினாதி பரந்தது சாக்கிரம்
அண்டமும் தானாய் அமர்ந்தது காணே.
திருமந்திரம்
3. சொப்பனம் (கனவு) - புருவ மத்தியில் நடுச் சக்கரத்தில் இரண்டங்குலப் பிரமாணத்திலே இருப்பது. பஞ்சேந்திரியங்களும் ஐந்து காமேந்திரியங்களும் கண்டத்திலே நிற்கும் கனவு நிலையே சொப்பனமாகும்.
3. சுழுத்தி (உறக்கம்) - அந்தக்கரணங்கள் நான்கும் கழுத்தியோடு ஜீவாத்மாவைக் கூடி சுவாச இருதயத்திலே நின்று. கண்டவை, கேட்டவை எதுவும் பிறருக்குச் சொல்லப் புலப்படாத நித்திரை நிலையே சுழுத்தியாகும்.
ஆன மனமும் அறிகின்ற புத்தியும்
ஊனையிழந்து நின்றுள்ளே உயிர்ப் பெய்தி
தானமிழந்து தயங்கியவாறு போல
ஊனையிழந்த சுழுத்தியதாமே திருமந்திரம்
4. துரியம் (பேருறக்கம்) இது நிஷ்டை நிலையாகும். சுழுத்தியை விட்டுக் கரணம் ஒன்றுடனே ஜீவாத்மா நாபிஸ்தானத்தில் நிற்கும் போது உஸ்வாஸ நிஸ்வாச மூச்சுகள் உண்டாகும். ஆகையால் இதற்குத் துரியம் என்று பெயர்.
தானத்தெழுந்து திரியுந் துரியதானம்
வானத்தெழுந்து போய் வையம் பிறக்கிட்டுக்
கானத்தெழுந்து கருத்தின் தலையிலே
ஊனைத் தவிர்த்து ஒளிந்திருந்தானே! திருமந்திரம்
5. துரியாதீதம் இந்திரியங்கள் பத்தும் அந்தக்கரணங்கள் நான்கும் பற்றற்று ஜீவாத்மா தானே மூலாதாரத்தில் சென்றோங்கி மலம் மதம், மாயை, ஸ்பரிசங்கள் எதையும் அறியாமல் நிற்கும் உயிர்ப் படக்க நிலையே துரியாதீதமாகும்.
இவற்றில் முன் நான்கு அவத்தைகளும் ஒன்றோடு ஒன்று கலந்து மேலும் பதினாறு அவத்தைகளாக வழங்கப்படும்.
1. சாக்கிரத்தில் சாக்கரம் - வார்த்தைகளைக் கேட்கும் போதாவது, விஷயத்தில் ஈடுபடும் போதாவது, மனதை வெளிவியவகாரங்களில் சிறிது கூடப் போக விடாமல் நிலையாக நிறுத்தி, சொற்களைச் சிரத்தையுடன் கேட்டு அவற்றை மறவாதிருத்தல்.
2. சாக்கிரத்தில் சொப்பணம் சரியாகக் கவனிக்காமல் மனதை இடையிடையே அலைய விடுவதால் சில மட்டும் நினைவில் தங்கியும் சில மறைந்து மறந்தும் போய்விடும் நிலை.
3. சாக்கிரத்தில் சுழுத்தி விஷயங்களில் மனதை நிலை நிறுத்தாமல் முற்றிலும் வேறு பக்கம் அலைய விடுவதால் விஷயங்கள் முற்றிலும் மறந்து போய் விடும் நிலை.
4. சாக்கிரத்தில் துரியம் - விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்கும் நிலை.
5. சொப்பனத்தில் சாக்கிரம் - கனவு கண்டு எழுந்த பிறகு கனவில் கண்டது முழுவதையும் ஒன்று கூட விடாமல் பிறருக்குச் சொல்லும் நிலை.
6. சொப்பனத்தில் சொப்பனம் - கனவில் கண்டனவற்றில் சில மட்டும் நினைவில் தங்கியும் சில மறந்தும் போய் இருக்கும் நிலை.
7. சொப்பனத்தில் சுழுத்தி - கனவில் கண்டனவற்றை முற்றிலும் மறந்திருக்கும் நிலை.
8. சொப்பனத்தில் துரியம் - கனவில் கண்டனவற்றை எல்லாம் ஆராய்ந்து பார்த்து ஆனந்தப்படாமலும் துக்கப்படாமலும் இவையெல்லாம் மனதின் வியாபாரங்கள் எனத் தெளிந்துணர்ந்து ஆத்ம ஞானத்தை விசாரித்திருக்கும் நிலை.
9. சுழுத்தியில் சாக்கிரம் - உறங்கியெழுந்த பிறகு அந்த உறக்கத்தின் சுகம் முதலான தன்மைகள் இவ்விதமெனப் பிறருக்கு எடுத்துரைக்கும் நிலை.
10. சுழுத்தியில் சொப்பனம் உறங்கியெழுந்த பிறகு அந்த உறக்கத்தின் தன்மை இன்னதெனத் தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் ஐயுறவு நிலை.
11. சுழுத்தியில் சுழுத்தி - உறங்கியெழுந்த பிறகு உறக்கத்தின் சுகம் முற்றிலும் மறந்து போய்விடும் நிலை.
12. சுழுத்தியில் துரியம் - உறங்கியெழுந்த பிறகு உறக்கத்தின் தன்மை அஞ்ஞான விஷயம் என்றும் அதற்குச் சாட்சியான ஆத்மாவே சத்தியம் என்றும் தெரிந்து கொள்ளும்.
13. துரியத்தில் சாக்கிரம் நிஷ்டையில் இருக்கும்போது சாக்கிர வியவகாரங்களான பிரபஞ்ச விருத்தி உண்டாதல்.
14. துரியத்தில் சொப்பனம் - நிஷ்டையில் இருக்கும்போது பிரபஞ்ச விருத்தி தோன்றியும் தோன்றாமலும் இருத்தல்.
15. துரியத்தில் சுழுத்தி - நிஷ்டையில் இருக்கும்போது எவ்வித எண்ணங்களும் ஏற்படாமல் இருத்தல்.
16. துரியத்தில் துரியம் - மேற்கூறிய பதினைந்து அவஸ்தைகளும் இல்லாமல் அகண்ட பரிபூரணமான பரப்பிரம்மமே நான் என்று அறிந்துணர்ந்து தானாகவே இருத்தல், இதுவே எல்லாவற்றிற்கும் மேலான உன்னத நிலை என்பதைத் தெளிந்துணர்ந்தால் எல்லாம் பிரம்ம மயம் என்பதைக் காணலாம்.
மூன்று உடல்கள் ( சரீரத் திரயம்)
1. ஸ்தூல சரீரம் 2. சூக்ஷ்ம சரீரம் 3. காரண சரீரம் இவை தமிழில் முறையே 1. பருவுடல்; 2. நுண்ணுடல், 3. காரண உடல் என வழங்கப்படும்.
பருவுடல்- கண்களுக்குப் புலனாகும் மாமிச உடல் இது ஆதி பிருதிவியினால் (மண்ணியல்பால்) உருவானது.
நுண்ணுடல்: பருவுடலுக்குள் கண்ணிற்குப் புலப்படாமல் நுட்பமாய் அமைந்திருப்பது ஞானேந்திரியங்கள் ஐந்தும், கர்மேந்திரியங்கள் ஐந்தும் அந்தக்கரணங்கள் நான்கும் பிராண வாயு ஒன்றும் கூடியதே நுண்ணுடல் இதை லிங்க சரீரம் என்றும் கூறுவார்கள்.
காரண உடல்: பருவுடல் நுண்ணுடல் ஆகிய இரண்டிற்கும் காரணவித்தாக விளங்குவது இதைச் சஞ்சீத கன்மம் ( தொகை வினை) என்று கருதலாம்.
பற்றுகள் மூன்று (மூவேடணை)
1. அர்த்த வேடணை (பொருட்பற்று); 2. புத்திர வேடணை (புதல்வர் பற்று); 3. லோக வேடணை (உலகப் பற்று). வேறு சிலர் தாரேஷணை (மனைவி மீது ஆசை). புத்திரரேஷணை (தன் மக்கள் மீது ஆசை). தனேஷணை (பொருளாசை) என்று கூறுவார்கள்.
பஞ்சாசயங்கள்
1. அமர்வாசயம்; 2. பகிர் வாசயம் ; 3. சலவாசயம்; 4. மல வாசயம்; 5. சுக்கிலவாசயம் இவை தமிழில் முறையே 1. இரைக்குடல் 2. செரிக்குடல் 3. நீர்க்குடல்; 4. மலக்குடல்; 5. வெண்ணீர்க்குடல் என வகுக்கப்பட்டு ஐந்து குடல்கள் என வழங்கப்படுகின்றன.
மாயைகள் மூன்று
1. சுத்த மாயை; 2. அசுத்த மாயை; 3. பிரகிருதி மாயை. இவை தமிழில் முறையே 1. தூமாயை; 2. தூவாமாயை; 3. பகுதிமாயை என வகுக்கப்பட்டு மாயைகள் மூன்று என வழங்கப்படுகின்றன.
கர்மங்கள் மூன்று
1. சஞ்சித கன்மம்; 2. பிராரத்த கன்மம் ; 3. ஆகாமிய கன்மம், இவை தமிழில் முறையே, 1. தொகை வினை, இருப்பு வினை 2. துவக்க வினை, நுகர் வினை; 3. நிகழ்வினை என வகுக்கப்பட்டு கர்மங்கள் மூன்று என வழங்கப்படுகின்றன.
கன்மேந்திரிய விஷயங்கள்
1. வசந்தம்; 2. கமநம்; 3. தாநம்; 4. விசர்ச்சனம்; 5. ஆநந்தம் இவை தமிழில் முறையே 1. சொல்லல்; 2. நடத்தல் 3. கொடுத்தல்; 4. விடுதல்; 5. மகிழ்தல் என்று வகுக்கப்பட்டு தொழிலுறுப்புக்களின் செயல்கள் என வழங்கப்படுகின்றன.
இருகன்மங்கள்
1. புண்ணியம்; 2. பாவம். இவை தமிழில் முறையே 1. நல்வினை; 2. தீவினை என வகுக்கப்பட்டு இரு வினைகள் என்று வழங்கப்படுகின்றன.
வாக்குகள்
1. வைகரி வாக்கு; 2. மத்திமை வாக்கு ; 3. பைசந்தி வாக்கு; 4. சூக்குமை வாக்கு. இவை தமிழில் முறையே. 1. செவியோசை; 2. மிடற்றோசை; 3. நினைவோசை; 4. நுண்ணோசை என வகுக்கப்பட்டு வாக்குகள் என்று வழங்கப்படுகின்றன.
சக்திகள்
1. பரிக்கிரகசக்தி; 2. திரோதான சக்தி , (ஆதி சக்தி;) 3. இச்சா சக்தி; 4. ஞான சக்தி; 5. கிரியா சக்தி; 6.சிற் சக்தி; இவை தமிழில் முறையே. 1. வைப்பாற்றல்; 2. மறைப்பாற்றல்; 3. விழைவாற்றல்; 4. அறிவாற்றல்; 5. செயலாற்றல். 6. அறிவாற்றல் என வகுக்கப்பட்டு. ஆற்றல்கள் என வழங்கப்படுகின்றன.
சுத்தவித்தியா தத்துவங்கள்
1. காலம்; 2. நியதி 3. கலை; 4. வித்தை; 5. அராகம்; 6. புருடன், 7. மாயை இவை தமிழில் முறையே 1. காலம் 2. பிறழா நிகழ்ச்சி; 3. கலை; 4. நினைப்பு; 5. விருப்பு 6. மகன்; 7. மாயை என வகுக்கப்பட்டு ஏழு உணர்வு நிகழ்ச்சிப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன.
ஓம் என்னும் மகாமந்திரம்
ஓம் என்னும் மகாமந்திரம் பிராணிகளை பரமாத்ம சொரூபத்தில் லயிக்கச் செய்யும் சாமர்த்தியம் கொண்டிருப்பதால். அது பிராணவ மந்திரம் என்றும் சொல்லப்படும். ஏகாட்சரமான ஓம் என்பதில் அ , உ, ம் என்ற மூன்று ஒலிகளும் சேர்ந்துள்ளன. அந்த அகார, உகார மகாரங்களை மாத்திரைகள் என்றும் சொல்லுவார்கள். அம்மூன்றைத் தவிர நான்காவது மாத்திரையாக அ மாத்திரை என்று ஒரு அர்த்த மாத்திரையும் உள்ளடங்கியிருக்கிறது.
அ என்றால் சூரியன் உ என்றால் சந்திரன். ம் என்றால் அக்கினி. அதாவது ஓம் என்பது எல்லாப் பிரகாசங்களும் உள்ள பொருட்களின் சுயவடிவாகும்.
இந்த அகாரம் உகாரம் மகாரம் மூன்றும் முறையே ஸ்தூலம் (பருஉடல்) சூட்சுமம் (நுண்ணுடல்), காரணம் (லிங்க உடல்) என்னும் மூன்று உடல்களாக இருந்தும் பெண், ஆண், அலி என்னும் மூன்றுமாக இருந்தும் ருக்வேதம், யஜுர் வேதம், சாம வேதம் என்னும் மூன்று வேதங்களாக இருந்தும் கார்ஹபத்யாக்னி, தக்ஷிணாக்னி, ஆஹவனீயாக்னி, என்னும் மூன்று அக்கினிகளாக இருந்தும் ஹரஸ்வம், தீர்க்கம் ப்லுதம் என்னும் மூன்று ஸ்வரங்களாக இருந்தும் பாதம், நாபி, சிரசு என்னும் மூன்று ஸர்வ அவயவங்களாக இருந்தும் புத்தி, மனம், அஹங்காரம் என்னும் மூன்று ஸர்வ அந்தக்கரண ஸமஷ்டியாக இருந்தும் ரஜோகுணம் ஸத்வ குணம் தமோ குணம் என்னும் மூன்று குணபேதங்களாக இருந்தும், சிவப்பு, கபிலம், கறுப்பு, என்னும் மூன்று வர்ணங்களாக இருந்தும் பூரகம், கும்பகம் ரேசகம் என்னும் மூன்று பராணாயாமாப்பியாசமாக இருந்தும். நாதம், பிந்து. களை என்னும் மூன்றுமாக இருந்தும் கிரியா, சக்தி, பிந்து, ஞானசக்தி என்னும் மூன்றுமாகவும், ப்ராஹ்மணீ, வைஷ்ணவீ, ரௌத்ரி என்னும் மூன்றுமாக இருந்தும் பிரும்மா, விஷ்ணு, ருத்திரன், என்னும் திரிமூர்த்திகளாக இருந்தும், சென்ற காலம், நிகழ்காலம், எதிர்காலம், என்னும் மூன்று காலங்களாக இருந்தும், ஜீவாத்மா, அந்தராத்மா, கூடஸ்தன் என்னும் மூன்றுமாக இருந்தும். விராட் புருஷன் ஹிரண்யகர்ப்பன். ஈஸ்வரன் என்னும் மூன்றுமாக இருந்தும் எல்லாம் ஓம் என்பதில் அடங்கும் என்பதைக் குறிக்கும்.
ஐந்தெழுத்து (பஞ்சாட்சரம்)
இது சிவயநம அல்லது நமசிவய என்பதாகும். இவ் எழுத்துக்களில் ய என்னும் மந்திரம் ஜீவனாக இருக்கிறது. நம் உடலில் ய போல் அடிபெருத்து நுனி சிறுத்து லிங்க வடிவாய் இருப்பது மூக்குத் தண்டு ஆகும். அந்த மூக்குத் தண்டில் சிவபெருமான் ஜீவனாக நின்று சிவயநம என்னும் ஐந்தெழுத்தையே (பஞ்சாட்சரத்தையே) தம் திருவுருவமாகக் கொண்டு ஆத்மாக்களின் பிறவியறுக்கத் தக்க யோக நிலையை நடனம் செய்து காட்டுகிறார்.
இதன் மந்திரங்கள்: ய என்னும் ஜீவனால் மூக்கின் வழியே நம என்னும் மந்திரத்தை மூச்சுடன் சேர்த்து உள்ளுக்கிழுத்து மூச்சை வெளிவிடாமல் சிறிது நேரம் உள்நிறுத்தி மறுபடியும் மூச்சை வெளியிடும்போது சிவ என்னும் மந்திரத்தை மூச்சுடன் சேர்த்து வெளிவிட வேண்டும்! இதுதான் நமசிவ என்னும் மந்திரங்களை ஜெபிக்கும் முறையாகும். இந்தப் பஞ்சாட்சர மந்திரமே பிருதிவி (நிலம்) அப்பு (நீர்), தேயு (நெருப்பு) வாயு (காற்று) ஆகாயம் (விசும்பு) என்னும் ஐம்பூதங்களாகும். இவையே பிரும்மா, விஷ்ணு ருத்திரர், மகேசுவரர் சதாசிவம் இந்த ஐவரும் முறையே நம் உடலிலுள்ள சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம் விசுத்தம், ஆக்ஞேயம் என்பனவற்றிற்கு அதிதேவதைகளாக இருந்து மூச்சை நடத்திக் கொண்டு வருகிறார்கள். பிருதிவி (நிலம் அல்லது பூமி) என்பது நகாரம். இந்த மகாரமே விஷ்ணு). தேயு (நெருப்பு அல்லது அக்கினி) என்பது சிகாரம். இந்த சிகாரமே ருத்திரர், வாயு (காற்று) என்பது வகாரம். இந்த வகாரமே மகேசுவரர். ஆகாயம் (விசும்பு அல்லது வெளி) என்பது யகாரம். இந்த யகாரமே சதாசிவம்.
பஞ்ச முத்திரை
1. கேசரி; 2. பூசரி, 3. மத்திய லக்ஷணம்; 4. ஷண்முகீ; 5. சாம்பவீ.
1. கேசரி - விழிகளை நடுவில் நிறுத்தி மேல் நோக்கி சிதாகாசத்தை (அருள் வெளியை) பார்த்துக் கொண்டிருத்தல்.
2. பூசரி - விழிகளை அசைக்காமல் தன் மூக்கு நுனிக் குறியில் நோக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல்.
3. மத்திய லக்ஷணம் - கண்களை அரைப் பார்வையோடு மூடிக் கொண்டு மூக்கு மத்தியில் நோக்கை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருத்தல்.
4. ஷண்முகீ - காதுகளையும், கண்களையும், மூக்கையும், வாயையும், விரல்களால் மூடி, வெளிப்பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பிக் கண் விழிகளை நடுவே நிறுத்தி நாத (பிராணன்), பிந்து, (மனம்) களை (புத்தி) என்பனவற்றை ஒன்றாய் சேர்த்தல்.
5. சாம்பவீ - விழிகளை இமை கொட்டாமல் திறந்து பார்வையை அருள் வெளியான சிதாகாசத்தில் நிறுத்தி அங்குள்ள விந்தை மண்டலங்களைப் பார்த்துச் சொக்கியிருத்தல்.
பஞ்ச சிவ தத்துவங்கள்
1. சுத்த வித்தை: 2. ஈசுரம்; 3. சாதாக்கியம் ; 4. சக்தி; 5. சிவம். இவை தமிழில் முறையே. 1. தூய நினைவு; 2. தலைமை; 3. அருள் நிலை; 4. அன்னை; 5. அத்தன் என வகுக்கப்பட்டு ஐந்து சிவநிலைய பொருள்கள் என வழங்கப்படுகின்றன.
அட்டமா சித்திகள்.
1. அணிமா; 2. மகிமா; 3. கரிமா; 4. இலகிமா; 5. பிராப்தி; 6. பிராகாமியம்; 7. ஈசத்துவம்; 8. வசித்துவம் இவை தமிழில் முறையே 1. நுண்மை (அணுத்தன்மை) 2. பருமை; 3. விண்டன்மை 4. மென்மை ; 5. விரும்பிய தெய்தல் 6. நிறைவுண்மை 7. ஆட்சியனாதல்; 8. கவர்ச்சி; என வகுக்கப்பட்டு எண்பெரும் பேறுகள் என வழங்கப்படுகின்றன.
மோட்சம்
ஞானேந்திரியங்கள் ஐந்து: கர்மேந்திரியங்கள் ஐந்து; தன்மாத்திரைகள் ஐந்து: பிராணங்கள் ஐந்து; அந்தக்கரணங்கள் நான்கு ஆக இருபத்தி நான்கு தத்துவங்களும் சேர்ந்திருப்பது உடல், அந்த உடலினுள் வசிக்கும் ஜீவன் 25 வது தத்துவமாகும். 26 வது தத்துவம் பரப்பிரும்மம் ஆகும். அந்தப் பரப்பிரும்மத்தில் ஜீவாத்மாவைச் சேர்ப்பித்து இரண்டற ஒன்று கலந்து ஒன்றிப்பதே மோட்சமாகும். அதாவது மோட்சமென்றால் விடுதலை.