அத்ரி மகரிஷியே! நான் ஒரு பெரிய யக்ஞம் நடத்த விரும்புகிறேன். அதை நீங்கள்தான் நடத்தி தர வேண்டும் என வேண்டினான் மன்னன் ரதவீதி. அதை ஏற்ற அத்ரி மகரிஷி, மகனே அர்ச்சளாளிசா! உன் புதல்வன் சியாவாச்வனோடு புறப்படு. நாம் ரதவீதிக்காக ஒரு மாபெரும் வேள்வி நடத்த வேண்டியிருக்கிறது என உத்தரவிட்டார். யாகம் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. பட்டத்தரசியும், ராஜகுமாரியும், அரசரின் உறவுப் பெண்களும் யாகப் புகையை சுவாசிக்கவும், மந்திர ஒலியைக் கேட்கவும் யாகத்தருகே அமர்ந்திருந்தனர். அத்ரி முனிவரின் பேரனான சியாவாச்வன் கட்டிளங்காளை, அதோடு, பேரழகுடையவன். நற்குண வித்தகன். அவன் சவுந்தர்யவதியான இளவரசி தனக்கு மனைவியாக வேண்டுமென விரும்பினான். அர்ச்சளாளிசரும் அரசிளங்குமரி தன் புத்திரனுக்கு துணைவியாக வந்தால் அவன் வாழ்வு சிறக்குமென்று எண்ணினார்.
தமது ஆசையை வேள்வி பூர்த்தியானதும் கொற்றவனிடம் தெரிவித்தார் அர்ச்சளாளிசர். அரசர், என் மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார். ராணியிடம் இதுபற்றிக் கலந்தாலோசித்தபோது, அரசே! நான் வேத மந்திரங்களைக் கண்ட ராஜரிஷியின் வம்சத்தில் வந்தவள். எனது மருமகனாக வருபவரும் அப்படிப்பட்டவராக இருக்க இதுவேண்டுமென்று விரும்புகிறேன். அத்ரி முனிவர், அர்ச்சளாளிசரைப் போல சியாவாச்வர் வேத மந்திர தேவதைகளைக் கண்டவரில்லை. நம் புதல்வியை அவருக்கு எப்படித் தருவது? என்று மறுத்து விட்டார் அரசி. அரசன் அர்ச்சளாளிசரிடம் இதைத் தெரிவித்தான். பாட்டனாரிடம் இதைக் கூறி வருந்தினான் பேரன். ஒன்றைக்கண்டு ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதைப் பெறத் தகுதியுடையவனாகத் தம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும் என உபதேசித்தார் அத்ரி. சிரத்தையாக வேத மந்திரங்களை ஓதினார் சியாவாச்வர். மருத் கணங்கள் பொற்கவசங்களை அணிந்து ஒரே வயதுடையவர்களாக அவருக்குக் காட்சியளித்தனர். வேத தேவதைகளைக் கண்ட சியாவாச்வருக்குப் புளகாங்கிதம் ஏற்பட்டது. மருத் கணங்களைப் போற்றிப் பாடி, பாட்டனாரைப் போல் மந்திர திரஷ்டா வானார்.
இரவின் தேவதையான ஊர்மியாவை மந்திரங்களால் அழைத்தார். ஊர்மியாவிடம், நான் மந்திர தேவதைகளைத் தரிசித்ததை ரதவீதி தம்பதியரிடம் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஊர்மியா இதை ரதவீதியிடம் கூற அவர், அர்ச்சளாளிசரே, தாங்கள் என் புத்திரியை மருமகளாகக் கேட்ட போது நான் மறுத்ததை மனதில் கொள்ளாமல் சிறப்பாகத் திருமணம் நடத்த உத்தரவு தர வேண்டும் என்று பணிந்து வேண்டினார். சியாவாச்வரின் சந்தோஷம் சொல்லி முடியாது. ஒரு சுபமுகூர்த்த நாளில் வெகு விமரிசையாக விவாகம் நடந்தேறியது. இன்றும் ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த அந்தணர்கள் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து, அபிவாதனம் சொல்லும்போது அத்ரி, அர்ச்சளாளிசர், சியாவாச்வர் ஆகிய மூன்று மகரிஷிகளைக் கூறுவது வழக்கத்தில் உள்ளது.