பதிவு செய்த நாள்
08
மார்
2016
11:03
சிதம்பரம்: மகா சிவ ராத்திரியை முன்னிட்டு, சிதம்பரத்தில் இரண்டு இடங்களில் நாட்டியாஞ்சலி துவங்கியது. கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் டில்லி மத்திய அரசின் இந்திய பண்பாட்டுத் துறை, டில்லி சங்கீத நாடக அகாடமி, சென்னை தென்னிந்திய கலாசார மையம், என்.எல்.சி., நிறுவனம் மற்றும் சிட்டி யூனியன் வங்கி சார்பில், 35ம் ஆண்டு நாட்டியாஞ்சலி, சிதம்பரம் தெற்கு வீதி ராஜா அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கியது. துவக்க விழாவில், நாட்டியாஞ்சலி செயலர் சம்மந்தம் தலைமை தாங்கினார். தலைவர் நடராஜன் வரவேற்றார். சிட்டி யூனியன் வங்கித் தலைவர் கும்பகோணம் பாலசுப்ரமணியன் துவக்கி வைத்து, பேசி னார். பத்மபூஷண் விருது பெற்ற நடனக் கலைஞர்கள் தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், புதுச்சேரி டாக்டர் சுந்தரம், வங்கி மேலாளர் ராம்நாத் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டி நாட்டியாஞ்சலி: பொது தீட்சிதர்கள் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில், 2ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் அருகில், துவங்கியது. பொது தீட்சிதர் செயலர் சர்வேஸ்வர தீட்சிதர் தலைமை தாங்கினார். அறக்கட்டளைச் செயலர் அய்யப்பன் தீட்சிதர் வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக் கழக துணைவேந்தர் மணியன் துவக்கி வைத்து வாழ்த்திப் பேசினார். இரு நாட்டியாஞ்சலி விழாக்களும், வரும் 11ம் தேதி வரை நடக்கின்றன.