பதிவு செய்த நாள்
18
ஏப்
2016
03:04
ஆன்மீகச் சிந்தனைக்கு அடையாளமாய் அமைந்துள்ள இவ்விந்தியத் திருநாட்டில் உலக நலனை, உயர்வை விரும்பி எத்தனையோ மஹநீயர்கள் தோன்றினார்கள். போதனைகள் மூலம் மக்களை புனிதமடையச் செய்து பரமாத்ம தத்துவத்தினை போதித்து வந்துள்ளனர். கர்ம, பக்தி, ஞானயோகமார்கங்களில் முறையாக ஆன்மீக சம்பத்தினை அளித்துள்ளனர். அப்படிப்பட்ட மஹநீயர்களில் தாள்ளபாக்க அன்னமய்யாவும் ஒருவர். தாள்ளபாக்க அன்னமய்யா பத கவிதை பிதாமஹர். சங்கீர்த்தனை ஆசாரியர். தென் இந்தியாவில் சங்கீர்த்தனை ஆசாரியர். சம்பிரதாயத்திற்கு பதக்கவிதை நடைக்கு சொந்தக்காரர். வைஷ்ணவ பக்தர். சங்கீர்த்தனையில் பக்தி இலக்கியம், சங்கீதம் அகப்பாடல் (ச்ருங்காரம்) பாவணையில் திருமலை திருவேங்கடவனையும், அகோபில நரசிம்மனையும் மேலும் திவ்விய க்ஷேத்திரங்களில் உள்ள தேவதைகளையும் கீர்த்தித்து 32 ஆயிரத்திற்கும் மேலாக கீர்த்தனைகளை அருளிச் செய்தார். சந்தமாம ராவே ஜாபில்லி ராவே, ஜோ அச்யுதானந்த ஜோ ஜோ முகுந்தா. என்று தன் பாடலில் தெலுங்கு பண்பாட்டிற்கு மதிப்பளித்து. மக்களின் மதிப்பளித்து. மக்களின் மனதில் பதியும்படி சங்கீர்த்தனை பாண்டாகாரத்தை அருளிச்செய்த பதக்கவிதை பிதாமகர் தாள்ள பாக்க அன்னமய்யா.
நந்தவரீக பிராம்மணர்: அன்னமய்யா நந்தவரீக பிராம்மண குடும்பத்தினை சார்ந்தவர். பாரத்வாஜ கோத்திரர். ஆஸ்வலாயன சூத்திரர். நந்தவரீகர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் காசியிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு குடிபெயர்ந்த சுத்த வைதீக பிராம்மணர். கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை தாலுக்கா பொத்திபி நாடு மண்டலத்தில் சென்னகேசவ ஸ்வாமியின் கருணைக்கு இலக்கான தாள்ள பாக்கம் கிராமம் அவரது ஊர். தாள்ளபாக்க கிராமம் பெயரே அன்னமய்யா வம்சத்தவர்களுக்கு வீட்டு பெயர் ஆனது. இவர்களில் நாராயணய்யா அன்னமய்யாவின் தாத்தா. படிப்புவராமல், குருவின் இம்சையை தாங்க இயலாமல் நாராயணய்யா இறந்து போக எண்ணினார். ஊரில் கிராம தேவதை சிந்தலம்மா கோயில் அருகில் விஷப்பாம்பின் புற்றினிலே கை வைத்தார். அப்பொழுது தாயார் எதிரே தோன்றி அவருடைய வம்சத்தில் மூன்றாவது தலைமுறையில் ஹரி வம்சத்தில் ஒரு பாலகன் பிறப்பான் என்று கூறினாளாம். இந்த நாராயணய்யா குமாரரே நாராயணசூரி. பரத்வாஜ ருஷிநாராயணய்யா - விடலய்யா -நாராயணய்யா - விடலர் - நாராயணர் - நாராயணசூரி - அன்னமய்யா - இது இவர்களது வம்ச பரம்பரை.
அன்னமய்யா தந்தை நாராயணசூரி சிறந்த கவி, பண்டிதர் நாராயணசூரி தர்மபத்னி லக்கமாம்பா, மாபெரும் பக்தை, பாகவதசேவா திலகமான நாராயணசூரி, லக்கமாம்பா சந்தானம் வேண்டி ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டனர். முடிப்புகளையும் கட்டிக் கொண்டனர். இருவரும் திருமலைக்குச் சென்றனர். அந்த தம்பதிகள் திருமலையை தரிசித்துக்கொண்டு, துவஜ ஸ்தம்பம் எதிரே சாஷ்டாங்கமாக வணங்கிய போது ஒரு திவ்வியமான ஒளி லக்கமாம் பாவின் கர்ப்பத்தில் நுழைந்தது. வேங்கடேஸ்வர ஸ்வாமி தான் அணிந்திருக்கும் நந்தகம் என்னும் வாளினை (கட்கம்) அவரிடம் அளித்தார். லக்கமாம்பா கர்பவதியானார் வைகாசிமாதம் விசாகம் நட்சத்திரத்தில் ஒரு சுப லக்னத்தில் மூன்று கிரகங்கள் உச்சக்கட்டத்தில் இருக்க நாராயணசூரி, லக்கமாம்பாவிற்கு நந்தகத்தின் அம்சமாக சர்வதாரி வருடம் வைகாசி சுத்த பவுர்ணமி அன்று (மே 9, 1408) அன்னமய்யா அவதரித்தார். நாராயண சூரி அந்த சிசுவிற்கு ஆகம முறைப்படி நாமகரணம் செய்தார். அவருடைய 8-ஆம் அகவையில் அன்னமய்யாவிற்கு அவருடைய குரு கணவிஷ்ணு தீட்சையை வழங்கி, அன்று முதல் அன்னமய்யா பெயர் நிலைபெற்றது. அன்னம் ப்ரஹ்மேதி வ்யஜனாத் என்னும் ச்ருதியின்படி நாராயணசூரி பரபிரம்ம வாய்மொழியாக தன் புத்திரருக்கு அன்னமய்யா என்று நாமகரணம் பண்ணினார். அன்னமய்யாவுக்கு அன்னமய்யங்கார், அன்னமா சார்யார், அன்னமய்ய குரு, அன்னயார்ய, கோனேடி அன்னமய்யங்கார் என்னும் வேறு பல பெயர்களும் உண்டு.
அன்னமய்யாவின் குழந்தைப் பருவம்: அன்னமய்யாவின் சிறு சிறு புண்ணகைகள் வேங்கடவனுக்கு செய்யும் பூஜைகள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. வேங்கடவனுக்கு தாலாட்டு பாடாமல் உறங்கமாட்டார் அன்னமய்யா. நாராயணசூரி காவிய பிரவசனங்களுக்கு தானும் தலையசைப்பார். இங்ஙனே அன்னமய்யா. குழந்தைப் பருவத்திலிருந்து வேங்கடவன் மீதே பற்று கொண்டிருந்தார்.
அன்னமய்யாவிற்கு ஐந்து வயது நிரம்பின. நாராயணசூரி, உபநயனம் செய்வித்தார். அன்னமய்யா ஏக சந்தா கிரஹி அவரின் திறமையைக் கண்டு ஆசாரியர்கள் ஆச்சர்யப்படுபவர். பேசும் பேச்செல்லாம் அமுதக்காவியமாகியும், பாடியதெல்லாம் பரம கானமாயும் சிறுபிராயத்திலிருந்து வேங்கடவன் மீது விந்தை விந்தையாக சங்கீர்த்தனைகள் பாடுவார். அன்னமய்யா சென்ன கேசவனை புஜ்ஜி கேசவன் என அழைப்பார். சிறு பிள்ளையின் முத்தான பேச்சில் மயங்கி சென்னகேசவன் புண்ணகைப் புரிவானாம்.
அன்னமய்யா எப்பொழுதும் ஆடலிலும் பாடலிலும் மூழ்கியிருப்பவர். அன்னமய்யா பேச்சானாலும் பாடலானாலும் அந்த ஊர் ஆனந்தத்தில் ஆழ்ந்து போகும். அன்னமய்யா சிறுவயதில் தாய் தந்தையர் அண்ணி சொல்லும் பணிகளனைத்தையும் செய்து முடிப்பார். ஆனால் எப்பொழுதும் மாலையை அணிந்து பாட்டு பாடி காலத்தை கழிப்பதாக அன்னமய்யாவை வீட்டில் உள்ளோர் சாடுவார். அவருடைய தந்தை நாராயணசூரியும் வைவார்.
திருமலை பயணம்: திருமலைக்குச் செல்லும் யாத்திரிகர்கள் கூட்டத்தில் தான் சேர்ந்து சென்றனர். அன்னமய்யா. யாத்திரிகர்களோடு திருப்பதியை அடைந்து திருப்பதி எல்லையில் உள்ள கிராம தேவதை தாள்ளபாக்க கங்கம்மாவை சேவித்தார். அதன் பின்னர் அன்னமய்யா திருமலையை காலணி அணிந்து மலை ஏறி அலுத்துப்போய் ஒரு மூங்கில் புதரில் உறங்கினார். அப்பொழுது அவருக்கு கனவில் அலர்மேல் மங்கை தரிசனமளித்தாள். சக்கரைப் பொங்கல் பிரசாதித்தாள். காலணி அணிந்து செல்லாமல் மலை ஏறும்படி அறிவுறுத்தினாள். அப்பொழுது அன்னமய்யா அலர்மேல் மங்கையை கீர்த்தித்து ஸ்ரீவேங்கடேஸ்வர சதகத்தை இயற்றினார். திருமலையை சென்றடைந்த அன்னமய்யா ஸ்வாமி புஷ்கரணியில் ஸ்நானம் பண்ணி ஆதிவராஹ ஸ்வாமியை தரிசித்துக் கொண்டார்.
கோயிலின் பெரிய கோபுரம் உள்ளே நுழைந்து, புளிய மரத்திற்கு பிரதக்ஷிணம் பண்ணி வணங்கி, கருட ஸ்தம்பத்தினை வணங்கினார். பாஷ்யகாரரான ராமானுஜசார்யரை துதித்தார். யோக நரசிம்மரை தரிசித்து கொண்டார். ஜனார்த்தனனை சேவித்து மடப்பள்ளியில் வகுளமாதாவை நமஸ்கரித்தார். யாகசாலையை கீர்த்தித்து, ஆனந்த நிலைய விமானத்தை வணங்கினார். கல்யாண மண்டபம், தங்க கருட சேஷ வாகனங்கள், ஸ்ரீபண்டாரம், உண்டியில் தன் வேட்டியின் முனையில் முடிந்து வைத்திருந்த காசுகளை சமர்ப்பித்தார். தங்க வாயில் அருகே சென்று, திவ்விய திருவடிகளோடு, கடிவரத ஹஸ்தங்களுடன் சகலாபரண பூஷிதரான திவ்வியமங்கள மூர்த்தியை தரிஷித்துக் கொண்டார். தீர்த்த பிரசாதங்களைப் பெற்று, சடகோப ஆசிர்வாதம் பெற்று, அன்றிரவு ஒரு மண்டபத்தில் ஓய்வெடுத்தார்.
அதன் பின்னர் அன்னமய்யா மலைமீது குமாரதாரை, ஆகாசகங்கை, பாபவிநாசனம் முதலான தீர்த்தங்களை தரிசித்தார். அவருக்கு அவர் இயற்றிய கீர்த்தனைகளினால் அபூர்வமான ஆதரவு கிடைத்ததால் கோயில் மீதே ஸ்வாமியை கீர்த்தித்து இருந்தார். கண விஷ்ணுவு என்னும் முனி அன்னமய்யாவை ஆதரித்தார். வைஷ்ணவ சம்ப்ரதாயத்திற்கு ஏற்றப்படி வேட்டி, தீட்சை அளித்தார். குருவிடம் வைஷ்ணவ தத்வத்தை தெரிந்துகொண்டு, ஆழ்வார்களின் திவ்விய பிரபந்தங்களை அத்யயனம் பண்ணி, வேங்கடவனை கீர்த்தித்து திருமலையிலேயே அன்னமய்யா வாழ்க்கையை கழிக்க நினைத்தார்.
விவாஹம் (திருமணம்): அன்னமய்யா திருமலையில் உள்ளார் எனத் அறிந்த தாய் தந்தையர்கள் திருமலைக்குச் சென்று அவரை வீட்டிற்கு திரும்பி வருமாறு கெஞ்சினர். நிராகரித்தார். அன்னமய்யா குருவின் பேச்சைக் கேட்டு தாள்ளபாக்கம் திரும்பி வந்தார். ஆனால், நிரந்தரம் ஸ்வாமியை கீர்த்தித்து இருப்பார். திம்மக்கா, அக்கம்மாவுடன் அன்னமய்யாவுக்கு விவாஹம் நடத்தினர். பின்னர் தன் இரு மனைவிகளோடு வந்து திருமலையை தரிசித்து அன்னமய்யா திருவேடங்கடவனுக்கு நாளுக்கு ஒரு சங்கீர்த்தனை பாட எண்ணினார். அன்றிலிருந்து அன்னமய்யா கூறின சங்கீர்த்தனைகளை சீடர்கள் கானம் பண்ணி பணஓலையில் எழுதுவர். பின்னர் அன்னமய்யா தன் மனைவிமார்களோடு தீர்த்த யாத்திரை பண்ணி தானும் தரிசித்து க்ஷேத்திரங்களை அந்த தேவதைகளை கீர்த்தித்து சங்கீர்த்தனைகளை வெளியிட்டார். அகோபில மட நிறுவன ஆசார்யரான ஆதிவண் சடகோப யதியிடத்திலே அன்னமய்யா சகல வைஷ்ணவாகமங்களை அத்யயனம் பண்ணினார்.
ராஜாச்ரயம் (அரசனை அடிப்பணிதல்): விஜயநகர ராஜ பிரதிநிதி, தண்ட நாதுடு முருராயர கண்ட சாளுவ நரசிங்கராயர் அன்னமய்யாவை ஆதரித்தார். தன் ஆஸ்தானத்திற்கு அழைத்தார். பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு அவ்வரசன் அன்னமய்யாவை தன் மீது ஒரு சங்கீர்த்தனையை எழுதப்பணித்தார். அதற்கு அன்னமய்யா நிராகரித்ததினால் அரசன் அன்னமய்யாவை சிறைச் சாலையில் அடைத்தார். இறுதியில் ராஜஸ் தானம் தனக்கு தகாதது என்று அன்னமய்யா திருமலையைச் சென்றடைந்து, தன் இறுதிக்கால வாழ்க்கையை ஸ்வாமி சன்னிதியில் சங்கீர்த்தனை தீட்சையில் கழித்தார். வேங்கடாசலத்திற்கு சமீபத்தில் உள்ள மருலுங்கு என்னும் அக்ரஹாரத்தில் நிவசித்தார். இச்சமயத்திலே புரந்தரதாசர் திருமலையில் அன்னமய்யாவினை சந்தித்து உங்கள் சங்கீர்த்தனைகள் பரம மந்திரங்கள். நீங்கள் சாக்ஷாத் வேங்கடபதி அவதாரமே என்று பாராட்டினார். 95 வருடங்கள் பரிபூரண வாழ்க்கையை கழித்த அன்னமய்யா துந்துபி நாம வருடத்தில் பல்குண பகுள துவாதசி அன்று பிப்ரவரி 1503 அன்று பரமபதித்தார்.
நந்தகம் என்னும் வாளின் அம்சமான அன்னமய்யா பதகவிதா பிதாமஹர், சங்கீர்த்தனா சார்யார் பஞ்சமாகம சார்வ பவுமர் திரவிடாகம சார்வ பவுமர் எனப் புகழ் பெற்றார். அன்னமய்யாவின் கீர்த்தனைகள்: அன்னமய்யா தெலுங்கில் மட்டுமின்றி சமஸ்கிருதத்திலும் நூற்றுக்கணக்கான கீர்த்தனைகளை இயற்றினார். தமிழ், கன்னட பதங்களோடு கூடிய தெலுங்கு நடை அவருடைய பாஷையாகும். யோக வைராக்ய ச்ருங்கார சரணி மொத்தம் 32,000 சங்கீர்த்தனைகள், சங்கீர்த்தனை இலட்சணம் உள்ள சமஸ்கிருத நூல், மஞ்சரீ த்வீபதத்தில் ச்ருங்கார மஞ்சரி என்னும் காவியம் மற்றும் 12 சதகங்கள் எழுதினதாக தெரிகிறது. ஆனால் இவற்றில் சிலது கிடைப்பது அரிது. அதிவோ அல்லதிவோ ஹரி வாசமு, அலா சஞ்சலமைன ஆத்மலந்துண்ட நீயலவாடு சேசெ நீ உய்யால ஸ்ரீராப்தி கன்யககு மஹாலக்ஷ்மிக்கினி நீரஜாலயமுநகு நீராஜனம் போன்ற எத்தனையோ கீர்த்தனைகள் இன்றைக்கும் மக்களின் மனதில் நடையாடுகின்றன.