நெரும்பூர் திருவாலீஸ்வரர் கோவிலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2016 12:09
திருக்கழுக்குன்றம்: பாழடைந்துள்ள நெரும்பூர் திருவாலீஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நெரும்பூரில், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 11ம் நுாற்றாண்டில் முதலாம் ராஜேந்திரன் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது; இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பழம் பெருமை வாய்ந்த இக்கோவில், 60 ஆண்டுக்கும் மேலாக பாழடைந்த நிலையில் கிடக்கிறது. கோவில் சுவர் மற்றும் ராஜ கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செடி, கொடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் கோவில் முழுமையாக சீரழிந்து விடும். எனவே, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இக்கோவிலை பார்வையிட்டு, புனரமைக்க முன்வரவேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.