பதிவு செய்த நாள்
02
செப்
2016
11:09
சென்னை: உடலில் எதையும் தாங்குவது பாதம்தான். அதற்கு அதீத சக்தி உண்டு. குரு பாத பூஜைக்கு தனி மகத்துவம் உள்ளது, என, செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழாவில், கர்நாடக இசைக் கலைஞர் மதுரை ஜி.எஸ்.மணி தெரிவித்தார். செம்பை வைத்தியநாத பாகவதர் இசை விழா சென்னை, தி.நகர், கிருஷ்ணகான சபாவில், கடந்த மூன்று நாட்களாக நடந்தது. நிறைவு நாள் விழா, நேற்று நடந்தது. விழாவில் இசை விமர்சகர் சுந்தரம்; மிருதங்க வித்வான் உமையாள்புரம் கே.சிவராமன்; கஞ்சீரா வித்வான் தாயுமானவன், கர்நாடக இசைக் கலைஞர் மதுரை ஜி.எஸ்.மணி ஆகியோருக்கு, திரைப்பட பின்னணி பாடகர் கே.ஜெ.ஜேசுதாஸ் பாதபூஜை செய்து, விருது வழங்கி கவுரவித்தார்.
விழாவில் விருது பெற்ற இசை விமர்சகர் சுந்தரம் பேசுகையில், பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர், இசை அரங்கிற்கு வருவதற்கு முக்கிய காரணம் செம்பை வைத்தியநாத பாகவதர்தான். அவரின் மாணவராகிய ஜேசுதாஸ் நடத்தும் இந்த குருவந்தனம் மிகவும் வரவேற்கத்தக்கது, என்றார். மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் பேசுகையில், அக்காலத்தில், பெரியவர்களின் பாதங்களை கழுவி, மலர் துாவி ஆராதனை செய்யும் வழக்கம் இருந்தது. மிகவும் பிரபலமாக இருக்கும் ஜேசுதாஸ், அதேபோல பாதபூஜை செய்வது மிகவும் மகிழ்ச்சியோடு நெகிழ்ச்சி அளிக்கிறது. மூத்த கலைஞர்களுக்கு செய்யும் மரியாதையை, இன்றைய இளம் கலைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், என்றார்.
கஞ்சீரா வித்வான் தாயுமானவன் பேசுகையில், குரு அனுக்கிரஹம் கிடைக்காவிட்டால், வாழ்க்கையில் எதுவும் கிடைக்காது. ஆனால், இப்போது குருவை யாரும் மதிப்பதில்லை. இது மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இந்த குரு மரியாதை விழா, கலைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும், என்றார். வாய்ப்பாட்டுக் கலைஞர் மதுரை ஜி.எஸ். மணி பேசியதாவது: அக்காலத்தில், குருநாதர் முன் சிஷ்யர்கள் அமர்வது இல்லை. ஒரு கலை கற்றுக்கொள்ள ஒரு குரு தேவை. சாஸ்திரத்தில் பாத பூஜை பற்றி மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது. உடலில் எதையும் தாங்குவது பாதம்தான். அதற்கு அதீத சக்தி உண்டு. அந்த பாதத்தில் இருந்து சக்தியை மற்றவர்களுக்கு கொடுக்க முடியும். ராமாயணத்தில் பரதன், ராமனிடம் பாதுகை கேட்டதும் இதற்குதான். எனவே, குரு பாதத்திற்கு அவ்வளவு மதிப்பு உள்ளது. இங்கு பாதபூஜை நடத்தி குருநாதரின் அருளை ஜேசுதாஸ் பெற்றுவிட்டார். இவ்வாறு அவர் பேசினார். இறுதி நாள் விழாவில், கே.ஜே.ஜேசுதாஸ்; டி.வி.கோபாலகிருஷ்ணன்; பாலக்காடு கே.எஸ்.நாராயணசுவாமி; ஜெய விஜயா குழுவினர்; நெய்வேலி சந்தானகோபாலன்; மல்லாடி சகோதரர்கள்; ஷோபனா விக்னேஷ் ஆகியோரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது.