பெரியாழ்வாரின் திருமகளாய்ப் பிறந்து பெரிய பெருமாளை ஒருபோதும் பிரியாத தன்மை பெற்றவள் ஆண்டாள் நாச்சியார். ஆண்டாள் பாடிய திருப்பாவை பாசுரங்களிலேயே மிகவும் ஈடுபாட்டுடன் விளங்கியதாலேயே ராமானுஜருக்கு திருப்பாவை ஜீயர் என்ற பெயரும் அமைந்துவிட்டது. மேலும் ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கும் ஓர் காரியத்தை அவர் செய்து முடித்தமையால் ஆண்டாளுக்குத் தமையன் என்ற பேறையும் அடைந்தார்.
நாறு நறும் பொழுதில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடா.
என்ற பாசுரத்தில், ஆண்டாள் திருமாலிருஞ்சோலை பெருமானுக்கு நூறு தடாக்கள் வெண்ணெயும் (ஒருவிதமான பாத்திரம்), நூறு தடாக்களில் அக்கார அடிசிலும் (சர்க்கரைப் பொங்கல்) சமர்ப்பிப்பதாகவும், அதனை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொன்றையும் ஆயிரம் தடாக்கள் அளவிலே சமர்ப்பிப்பதாகவும் சொல்லுகிறாள். ஆனால், சொன்னதை நிறைவேற்றாமலே அரங்கனோடு ஐக்கியமாகிப்போனாள்.
அப்படியானால் ஆண்டாள் சொன்ன வாக்கை தவறியவளாகிவிடுவாளே! சிந்தித்த ராமானுஜர், திருமாலிருஞ்சோலை நம்பிக்கு ஆண்டாள் சொன்னபடி செய்து காட்டினார். அதாவது, ஆண்டாளின் வாக்கை நிறைவேற்றினார். இதை முடித்துக் கொண்டு அவர் ஆண்டாளின் தரிசனத்திற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். திருக்கோயிலில் நுழையும் போதே ஆண்டாளின் அருள்வாக்கு அவரை, வாரும் என் அண்ணாவே என்று அழைத்தது. அதனால் ஆண்டாள் காலத்துக்குப் பிற்பட்ட காலத்தவராயினும் ராமானுஜரை ஆண்டாளின் அண்ணனாகவே வைணவம் மதித்துப் பெருமைப்படுத்தியது. இதனால் மார்கழி மாதம் பாவை பாராயணம் நடக்கும் சமயத்தில், மாலோ மணிவண்ணா பாசுரத்தன்று (ஆண்டாளுக்கு நீராட்டு உத்ஸவ வைபவங்கள் நடந்து கொண்டிருக்கும்) ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் ஆண்டாளுக்கு விருந்து வைத்து சீர்வரிசை கொடுத்து ஆசிர்வதிக்கும் வைபவம் பிரதி வருடம் நடந்து வருகிறது.