ஸ்ரீநிவாச பெருமாளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து மாலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2016 12:10
முதுகுளத்துார்: தென்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் புரட்டாசி பூஜைக்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து அலங்கார மாலைகள் கொண்டு வரப்படுகிறது. ஆதங்கொத்தங்குடியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தென்திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது. இஸ்லாமிய படையெடுப்பின்போது இந்தியாவிலுள்ள கோயில்கள் சிதைக்கப்பட்டன. ஆதங்கொத்தங்குடி ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் மூலவர் விக்ரஹங்கள் அருகில் உள்ள திடல் எனும் மண்மேட்டில் புதையுண்டது. இந்த நிலையில், ஆதங்கொத்தங்குடி மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். இங்கிருந்த ஒருசில குடும்பத்தினர், புதையுண்ட விக்ரஹங்கள், தெய்வத்திருமேனிகளை எடுத்து வந்து, ராமநாதபுரம் மன்னர்களின் உதவியோடு ஸ்ரீநிவாச பெருமாளுக்கு கோயில் கட்டினர்.
திருப்பதிக்கு சென்று வழிபட இயலாத பக்தர்கள் ஆதங்கொத்தங்குடி தென்திருப்பதியில் பிரார்த்தனை, நேர்த்தி கடன் செலுத்துகின்றனர். வைகாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாளுக்கு அலங்காரம் செய்வதைப்போல் இங்கும் அலங்காரம் செய்யப்படுகிறது. பெருமாளுக்கு வெள்ளி கவசம் அணிவித்து, மலர் அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து மலர் மாலைகள் தனியாக வாகனத்தில் எடுத்து வரப்பட்டு, ஈரத்துணிகளால் பாதுகாக்கப்பட்டு, மறுநாள் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. விஷேச நாட்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.