பதிவு செய்த நாள்
01
நவ
2016
10:11
அழகர்கோவில்: கந்தசஷ்டியை முன்னிட்டு அழகர்கோவிலில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இக்கோயிலில் நேற்று காலை 8:30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, புண்யாக வாசனம், ரக் ஷாபந்தனம் முடிந்து, 9:00 மணிக்கு யாகசாலை பூஜையும், மூலவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. காலை 9:30 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் உற்சவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. சண்முகர் சன்னதி முன் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு கோயிலில் தங்கி விரதத்தை துவங்கினர். மஹா அபிஷேகம், ஆராதனைகள் முடிந்து அன்ன வாகனத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் கோயிலை வலம் வந்தார்.
நவ., 5 வரை தினமும் காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜையும், 9:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை முடிந்து முறையே காமதேனு, யானை, ஆட்டுக்கிடா, சப்பரம், குதிரை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. நவ., 5ல் மாலை 4:00 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், 4:45 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது.
நவ.,6ல் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 6:30 மணிக்கு மஹா அபிஷேகம், ஆராதனை முடிந்து காலை 11.00 மணிக்கு வள்ளி, தெய்வானைக்கு மங்கள நாண் சூட்டும் திருக்கல்யாணம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகம், பாவாடை தரிசனம், தீபாராதனை முடிந்து, பல்லக்கில் புறப்படும் முருகப் பெருமான் கோயிலை வலம் வருகிறார். மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை முடிந்து மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.