குருக்ஷேத்ரப் போர்க்களம். முரசுகளின் பேரொலி, யானைகளின் பிளிறல். வீரர்களின் ஆரவாரம் என எங்கும் அச்சமூட்டும் பேரோசை. போர்க்களத்தில் இருந்த மரத்தில் சிட்டுக் குருவி ஒன்று கூடி கட்டி, சில நாட்களுக்கு முன்னர்தான் அதற்குக் குஞ்சுகள் பிறந்து, பறக்க இயலாத நிலையிலிருந்தன. திடீரென்று அங்கே போர்க்கள ஓசையைக் கேட்ட அந்தக் குருவி நடுங்கியது. இறைவா! எங்களைக் காப்பாற்று என்று அலறியது. குருவியின் அபயக் குரல், கண்ணனின் செவிகளில் விழுந்தது. அந்த மரத்தின் அருகே வந்த கிருஷ்ணர், சின்னஞ்சிறு குருவியே! அஞ்ச வேண்டாம். இங்கே உனக்கு எந்தத் துன்பமும் நேராது என்று கூறி, அங்கே வந்த யானையின் கழுத்திலிருந்த மணியைக் கழற்றி குருவிக் கூட்டின் அருகில் கட்டித் தொங்க விட்டார். இந்த மணியைப் பார்க்கும் யாரும் உன் அருகில் வர மாட்டார்கள் என்று அவர் குருவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். போர் நிகழ்ந்த அந்தப் பதினெட்டு நாட்களிலும் அந்தக் குருவிக்கு எந்தத் துன்பமும் நேரவில்லை, அபயமளித்தது ஆண்டவனல்லவா.