ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரதவீதியை சுற்றிலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி, கேமராக்கள் பொருத்தப்பட்டது. ராமேஸ்வரம் கோயில், பக்தருக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறையினர் எச்சரித்ததும், 2014ல் கோயில் நான்கு ரதவீதியை சுற்றி வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர். மேலும் கோயில் மேற்கு, கிழக்கு வாசல், முதல் பிரகாரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கோயிலுக்குள் நுழையும் பக்தர்களை வெடிகுண்டு சோதனைக்கு பிறகு போலீசார் அனுமதித்தனர். இந்நிலையில், பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோயில் சார்ந்த பகுதியில் கூடுதல் கேமராக்கள் பொருத்த போலீஸ் உயர்அதிகாரி உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோயில் நான்கு ரதவீதி, அக்னி தீர்த்த கடற்கரை, மூன்றாம் பிரகாரத்தில் 38 புதிய சிசிடிவி, கேமராக்கள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இக்கேமரா செயல்பாடுகளை, கோயில் அலுவலகத்தில் உள்ள அறையில் போலீசார் கண்காணிக்க உள்ளதாக கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.