மாசி மாத பவுர்ணமியை ஒட்டி (மார்ச்13) வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி விடும். வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைத்து மகிழ்வர். பிரகலாதனின் தந்தை இரண்யனின் உறவுப் பெண்ணான ஹோலிகா என்பவள் குழந்தைகளைக் கொன்று தின்பாள். நெருப்பால் கூட தன்னை அழிக்க முடியாது என்ற வரம் பெற்றிருந்தாள். இரண்யன் தன் மகன் பிரகலாதனை இவளிடம் கொடுத்து, பெருமாளின் பெயரை உச்சரிக்கும் அவனைக் கொல்லச் சொன்னான். ஹோலிகா, பிரகலாதனைத் தூக்கிக் கொண்டு தீயில் குதித்தாள். பிரகலாதன் மட்டும் சாம்பலாவான். தான் வெளியில் வந்து விடலாம் என நம்பினாள். ஆனால், தனக்கு கிடைத்த வரத்தை தான் மட்டும் பயன்படுத்தாமல், அடுத்தவரை அழிக்க நினைத்த அவள் தீயில் எரிந்து போனாள். பிரகலாதன் பெருமாள் அருளால் உயிர் பிழைத்தான். இதனால் தான் ஹோலிகாவுக்கு கொடும்பாவி கட்டி எரிக்கும் வழக்கம் இருக்கிறது. ஹோலி என்றால் புனிதம். நல்லவர்களுக்கு அழிவும், தீயவர்களுக்கு வாழ்வும் கிடையாது என்பதை விளக்குவதே ஹோலி பண்டிகை. தீமை அழிந்து நன்மைகள் கிடைப்பதால், மனதில் மகிழ்ச்சி பொங்கும். இதனால் தான் கலர்பொடி தூவுதல், வண்ணநீரை வாரி இறைத்தல் ஆகியவற்றின் மூலம் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.