பதிவு செய்த நாள்
07
பிப்
2017
03:02
கிருஷ்ணர், சத்யபாமாவிற்காக பாரிஜாதம் கொண்டுவந்தார். நான்தான் அழகு. அதனால்தான் கிருஷ்ணருக்கு என்மீது ப்ரியம் அதிகம் என்ற கர்வம் வந்தது, சத்யபாமாவிற்கு, சீதைக்காக ராமனாகக் காட்டிலும், மேட்டிலும் அலைந்ததை கேலி செய்தாள். என்னைவிட சீதை அழகியா? என்று கேட்டாள். கிருஷ்ணனின் ஆயுதம் சக்கரத்திற்கு வேறு விதமான கர்வம். இந்திரனின் வஜ்ராயுதத்தை நான் தானே தூளாக்கினேன் என்று கர்வப்பட்டது. என் உதவியினால் தானே இந்திரனை வெல்ல முடிந்தது. என்னைவிட வேகமாக யாராலும் பறக்க முடியாது என கர்வப்பட்டது கருடன். அனுமன் மூலம் இவர்களின் கர்வத்தை அழிக்க நினைத்தார், கிருஷ்ணர். துவாரகா எல்லையில் ஒரு தோட்டத்திற்கு வரச்செய்தார். அனுமனும் ராமநாமத்தை சொல்லிக்கொண்டு அங்கிருந்த பழங்களை சாப்பிட ஆரம்பித்தார். கருடனை அனுப்பி அனுமனை பிடித்துவரச் சொன்னார். சிறுபடையையும் அழைத்துப் போகச் சொன்னார். வானரத்தைப் பிடிக்க படையா? என்று தனியே போனார், கருடன். என்ன முயன்றும் முடியவில்லை. கருடனை தூக்கி கடலில் போட்டார் அனுமன். கிருஷ்ணனிடம் சென்று நடந்ததைக் கூறினார் கருடன். ராமன் அழைப்பதாகச் சொல், வருவார் என்றார் கிருஷ்ணர். கருடன் புறப்பட்டார்.
பாமாவை சீதை போல் உருவம் தாங்கி அலங்காரத்துடன் வரச் சொன்னார். சக்கரத்தை துவாரகா எல்லைக்கு அனுப்பி, யாரும் நுழையாமல் பாதுகாக்கச் சொன்னார். கருடன் சென்று ராமன் அழைப்பதாகச் சொன்னவுடன் பரவசமானார் அனுமன். கருடனை முன்னே போகச் சொன்னார். வேகமாகச் சுமந்து செல்கிறேன் என்று கருடன் சொன்னதையும் மறுத்தார். வேறு வழி இல்லாமல் பறக்க ஆரம்பித்தார் கருடன். அனுமன், ராமரை தரிசிக்கப் புறப்பட்டார். வழிமறித்த சக்கரத்தை தன் கையால் பிடித்து வாயில் போட்டுக் கொண்டார். அனுமன் வருகைக்காக ராமர் கோலத்தில் இருந்தார் பகவான். பக்கத்தில் அலங்காரமாய் பாமா. ராமரைக் கண்டு பரவசமாக வணங்கி நின்றான், அனுமன். சீதா மாதாவை வணங்கப் போனவன் முகத்தில் கோபம். என் அன்னை எங்கே? என் அன்னை இருக்க வேண்டிய இடத்தில் இந்த அலங்கோலப் பெண் இருக்கிறாளே... யார் இது? என்று அனுமன் கேட்டான். கிருஷ்ணர் ஏதும் பேசவில்லை. ஆனால் பாமா குனிந்த தலை நிமிரவில்லை. அவளின் கர்வம் தூளாகிக் கொண்டு இருந்தது.
சீதையை அழகியா என்று கேட்டோமே? இந்த வானரத்திற்கு கூட தான் அழகில்லை என்று தெரிகிறது. கணவனே தெய்வம் என்று வாழ்ந்த சீதாவின் அழகைவிட தான் அழகில்லை என்பதை உணர்ந்தாள். உன்னை யாரும் தடுக்கவில்லையா? என்று அனுமனைக் கேட்டார், கிருஷ்ணன். வாயில் இருந்த சக்கரத்தை எடுத்து வெளியே விட்டார். ஒளி இழந்து மங்கிய நிலையில் இருந்த சக்கரமும் தனி கர்வத்தை விட்டது. மூச்சிறைக்க வந்த கருடன் தனக்கு முன்னே அனுமன் அங்கே இருப்பதைப் பார்த்தார். தன்னை விட வேகமாக பறக்க ஒருவர் இருப்பதை அறிந்தார். கருடன் கர்வமும் அடங்கிப்போனது.