பதிவு செய்த நாள்
07
பிப்
2017
03:02
இறைவனை அடைய பலவிதமான வழிமுறைகள், சடங்குகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் உண்ணாமல் - உறங்காமல் இறை சிந்தனையில் ஈடுபட்டு ஞானம் பெறுதல். முன்பு காடுகளிலும் மலைகளிலும் ரிஷிகள் உண்ணாமல், உறங்காமல் தவத்தை மேற்கொண்டனர். இந்த வகையான வழிபாடு இந்து மதத்தில் மட்டுமின்றி ஜைன மதம் இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம் ஆகியவற்றிலும் உண்டு. உதாரணத்திற்கு, இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் விரதமிருப்பார்கள். துறவிகள் தவம் செய்வது போன்று இல்லறத்தில் ஈடுபடுவோரால் செய்ய முடியாது. அதற்காகவே எளிய முறையில் வழிபட ஏகாதசி விரதத்தை முன்னோர்கள் கடைப்பிடித்தனர். எத்தனையோ விரதங்கள் இருந்த போதிலும் அவை எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலானது ஏகாதசி விரதம்.
காயத்ரி மந்திரத்திற்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்கு நிகரான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமுமில்லை என்பது பெரியோர்களின் அருள்வாக்கு. இந்த ஏகாதசி விரத மகிமையைப் பற்றி சிவபெருமான் பார்வதிதேவிக்கு உபதேசிக்கும்போது, சகல பாவங்களையும் போக்கும் சக்தியுடையது ஏகாதசி விரதம். அஸ்வமேதயாகத்திற்கு சமமானது. தேவர்களும் ரிஷிகளும் இந்த விரதத்தை முறைப்படி அனுசரித்து நற்கதியை அடைந்தனர் எனக் கூறினார். இதிலிருந்து இந்த விரதத்தின் மகிமையையும் சிறப்பையும் உணரலாம். ஏகாதசி திதியானது ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வரும். பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, கடைசியாக அமாவாசை அல்லது பவுர்ணமி என்று பதினைந்து திதிகள் உள்ளன. அமாவாசை அல்லது பவுர்ணமி திதியிலிருந்து பத்தாவது நாள் தசமி எனப்படும். (தசம் என்றால் பத்து). அதற்கு அடுத்தநாள் ஏகாதசி. (ஏகம் என்றால் ஒன்று.) 10+1=11 ஏகாதசி எனப்படுகிறது.
அமாவாசையைத் தொடர்ந்து பவுர்ணமிக்கு முன்தினம் வரை இருக்கும் நாட்களை சுக்ல பட்சம் (வளர்பிறை) என்று அழைப்பார்கள். பவுர்ணமியைத் தொடர்ந்து அமாவாசை முன்தினம்வரை இருக்கும் நாட்களை கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) என்று அழைப்பார்கள். இவ்விரண்டு பட்சங்களிலும் ஏகாதசி வரும். ஏகாதசியன்று உணவுண்ணாமல் உபவாசமிருந்து இறைவழிபாட்டில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏகாதசி விரதமிருக்கும்முன், தசமியன்று ஒரு வேளைமட்டும் உணவுண்ணும் வழக்கம் முன்பிருந்தது. ஏகாதசி நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல், தேவைப்படும்போது துளசி தீர்த்தத்தை மட்டும் பருகவேண்டும். அடுத்தநாள் துவாதசியன்று விடியற்காலை சூரிய உதயத்திற்குமுன்பு பாரணை (<உணவருந்தல்) செய்யவேண்டும். துவாதசி பாரணையில் அகத்திக்கீரை, நெல்லிக் காய், சுண்டைக்காய் போன்றவற்றை சேர்க்க வேண்டும். ஏகாதசி விரத நாளில் இறை சிந்தனையில்தான் கவனத்தை செலுத்த வேண்டும்.
கிருத யுகத்தில், முரன் என்ற பெயரில் முரண்பாடான அசுரன் ஒருவன் இருந்தான். அவன் தான் பெற்ற தவ வலிமையால் தேவர்களையும் ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்திக்கொண்டே இருந்தான். இதனால் கலக்கமடைந்த தேவர்களும் ரிஷிகளும் இந்திரன் தலைமையில் வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். தேவர்களின் கோரிக்கையை ஏற்று மகாவிஷ்ணு முரனுடன் கடும் போர்புரிந்தார். பல நாட்கள் போர் நடைபெற்றது. அதனால் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாசிரமத்தில் இருக்கும் ஓர் குகையில் சற்று ஓய்வெடுத்தார். அந்த சமயத்தில் முரன் அங்குவந்து மகாவிஷ்ணுவைக் கொல்லத் துணிந்தபோது, மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து ஒர் பெண்ணுருவம் தோன்றி முரனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள். அந்தப் பெண்ணின் வீரதீரத்தை மகாவிஷ்ணு பாராட்டி ஏகாதசி என பெயரிட்டார். இப்படி ஒரு கதை இந்த ஏகாதசிக்கு உண்டு.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கண்ணபரமாத்மா கூறியதால், மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியை பெரிய ஏகாதசி எனக் கூறுவார்கள். காரணம், அன்றுதான் பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்படும். எனவே இது வைகுண்ட ஏகாதசி எனப்படும். மற்ற ஏகாதசியில் விரதமிருக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் வைகுண்ட ஏகாதசி நாளிலாவது உண்ணாமல், உறங்காமல் இருக்கவேண்டும். சமீபகாலங்களில் வைகுண்ட ஏகாதசி நாள் இரவில் உறங்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. அது முற்றிலும் தவறு கேளிக்கைகளில் ஈடுபடுதல் பலன் தராது. இறை சம்பந்தப்பட்ட வேலைகளில் மட்டுமே (அதாவது பூஜை, பஜனை, உபன்யாசம் கேட்டல், ஜெபம் செய்தல்) ஈடுபடவேண்டும். அப்போதுதான் விரதப் பலன் கிட்டும்.
ஓராண்டில் வரும் ஒவ்வொரு ஏகாதசிகளுக்கும் தனித்தனி பெயர்கள் உள்ளன. மார்கழி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். இதே மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி) என்று பெயர். தை மாத தேய்பிறை ஏகாதசிக்கு சபலா ஏகாதசி என்றும்; இதே மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்றும் பெயர். மாசி மாத தேய்பிறை ஏகாதசி ஷட்திலா ஏகாதசி எனவும்; இதே மாத வளர்பிறை ஏகாதசி ஜயா ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது. பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி விஜயா ஏகாதசி எனவும்; இதே மாத வளர்பிறை ஏகாதசி ஆமலதீ ஏகாதசீ எனவும் பெயர் பெறுகின்றன. இந்த ஏகாதசியன்று பூஜை முடிந்தபின்பு நெல்லி மரத்தை வணங்குதல் நன்று. சித்திரை மாத தேய்பிறை ஏகாதசிக்கு பாபமோசனிகா ஏகாதசி என்றும்; இதே மாத வளர்பிறை ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்றும் பெயர்.
வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி வருதிநீ ஏகாதசி எனப்படும். இந்த ஏகாதசியன்று தானங்கள் செய்வது அதிக பலனைக் கொடுக்கும். இந்த மாத வளர்பிறை ஏகாதசிக்கு மோஹினி ஏகாதசி எனப்பெயர். ஆனி மாத தேய்பிறை ஏகாதசிக்கு அபார ஏகாதசி எனப் பெயர். இதே மாத வளர்பிறை ஏகாதசிக்கு நிர்ஜலா (பீம ஏகாதசி) ஏகாதசி எனப் பெயர். ஆடி மாத தேய்பிறை ஏகாதசிக்கு யோகிநீ ஏகாதசி எனவும்; இதே மாத வளர்பிறை ஏகாதசிக்கு சயிநீ ஏகாதசி எனவும் பெயர். ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனவும்; இதே மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி எனவும் அழைக்கப்படுகின்றன. புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு அஜா ஏகாதசி எனப்பெயர். இதே மாத வளர்பிறை ஏகாதசிக்கு பத்மநாபா ஏகாதசி எனப் பெயர். ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா ஏகாதசி என்றும்; இதே மாத வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்றும் பெயர் பெறுகின்றன. கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்றும்; இதே மாத வளர்பிறை ஏகாதசிக்கு ப்ரபோதினீ ஏகாதசி என்றும் பெயர். ஒரு ஆண்டுக்கு பொதுவாக இருபத்து நான்கு ஏகாதசிகளே வரும். சில சமயங்களில் கூடுலாக ஒரு ஏகாதசி வரும். அதற்கு கமலா ஏகாதசி என்று பெயர். பரம்பொருளான இறைவனுக்குப் பிடித்த திதி ஏகாதசி. இதை ஒரு புண்ணிய நாளாகவும் கூறலாம். இந்தநாளில் திருமாலை முறைப்படி பூஜித்து விரதத்தை அனுஷ்டிக்கவேண்டும். ஏகாதசி நாளில் செடியிலிருந்து துளசியைப் பறிக்கக்கூடாது. முதல் நாளே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினெண் புராணங்களுள் ஒன்றான பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இந்த விரதம் மேற்கொண்டு நற்கதியடைந்த ருக்மாங்கதன், அம்பரீஷன் சரித்திரத்தைக் கேட்டால் நல்ல பயன் கிட்டும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
என திருவள்ளுவர் சொன்னதுபோல், தக்க அளவு உணவை, பசித்தபின் உண்டால் நோய் வராது. மருத்துவரீதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை உணவருந்தாமல் இருந்தால் நம்முடைய வயிறு, குடல் போன்ற பாகங்களுக்கு சற்று ஓய்வு கிட்டும். மேலும் அவை அதற்குப்பின்பு சுறுசுறுப்புடன் உண்மையை அறிந்துதான் நம் முன்னோர்கள் ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள். உடலும் உள்ளமும் தூய்மைபெற ஏகாதசி விரதம் கடைப்பிடித்தல் வேண்டும்.