பதிவு செய்த நாள்
07
பிப்
2017
03:02
அறிவாற்றல், தைரியம், விவேகம், சாதுரியம், நற்பண்பு போன்ற அனைத்தையும் விரைந்து வழங்குபவர் அனுமன். அதனாலேயே அவருக்கு நாடெங்கும் கோயில்கள் உள்ளன. அத்தகைய சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்று பவன் புத்ர ரஞ்சித் அனுமன் கோயில். இது மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. பவன் புத்ர என்பதற்கு வாயுவின் மகன் என்று பொருள். ரன் என்றால் எதிரி, போட்டி என்றும், ஜித் என்றால் வெற்றி என்றும் பொருள்படும். ரஞ்சித் அனுமன் அனைத்திலும் வெற்றியைத் தருபவர். தேர்வில் வெற்றிப்பெற வழக்குகளில் வெற்றிபெற, தொழிலில் ஏற்படும் தடைகள் அகல, அதிக பகைவர்களைக் கொண்டவர்கள் அவர்களிடமிருந்து மீள என பல்வேறு வேண்டுதல்களுடன் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். ஒரே நாளில் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார். இந்த அனுமன் என்பது பக்தர்களின் கூற்று, பிரசாதமாக லட்டின்மீது துளசி இலை வைத்து சமர்ப்பிக்கிறார்கள்.
ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கனோர் இங்கு வந்து வழிபடுகிறார்கள். செவ்வாய், சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய்க்கிழமையன்று இக்கோயில் சென்று ஆஞ்சனேயரை ஒன்பதுமுறை சுற்றிவந்து வழிபட்டால் தோஷம் விலகுவதாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் எப்போது - யாரால் அமைக்கப்பட்டதென்று அறிய முடியவில்லை. ஒரு சம்பவத்தால் இவரது சக்தி வெளியுலகுக்குத் தெரியவந்தது. இரு மன்னர்களுக்கிடையே பகை இருந்தது. எப்போதும் போர் மூளலாம் என்ற சூழல். இதனால் நாட்டு மக்களிடையேயும் பதட்டம் இருந்தது. அப்போத ஒரு மன்னன், குகையில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு துறவியிடம் சென்று அவரை வணங்கி, போரில் தனக்கு வெற்றி தேடித் தரவேண்டுமென்று கேட்டான்.
அவர் ஒரு ரொட்டியை மன்னனிடம் கொடுத்து, இதை கொஞ்சம் கொஞ்சமாக பிட்டு கீழே போட்டுக்கொண்டே செல். கடைசி துண்டை கீழே போடும்போது அங்கு ஒரு கோயில் இருப்பதைக் காண்பாய். அங்கு சென்று வழிபடு. வழியில் திரும்பிப் பார்க்காதே என்று சொல்லி அனுப்பிவைத்தார். அவனும் அவ்வாறே செய்து கோயிலைக் கண்டான். உள்ளே சென்று வழிபட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தபோது, எதிரிநாட்டு மன்னன் படை அங்கே நின்றிருந்தது. அவர்களுடன் அந்த மன்னன் தீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றான். அதற்குக் காரணம் அந்தக் கோயிலில் இருந்த ஆஞ்சனேயர். அன்றிலிருந்துதான் இவர் ரஞ்சித் அனுமன் என்று அழைக்கப்பட்டு, பலராலும் வணங்கப்படலானார். இந்த ஆஞ்சனேயருக்கு மல்லிகை எண்ணெயில் செந்தூரத்தைக் கலந்து பூசிய பின்னரே மற்ற அலங்காரங்களைச் செய்கின்றனர். இக்கோயிலில் சீதா, லட்சுமணன் சமேத ராமருக்கும் சன்னிதி உண்டு. சனி, ஞாயிறுகளில் வெகு சிறப்பாக பஜனைகள் நடக்கும். இக்கோயில் உஜ்ஜயினி நகர மத்தியில், ஷிப்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற - ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான மகாகாளேஸ்வரர் கோயில் இதன் அருகிலேயே உள்ளது. கும்பமேளா சமயத்தில் பெருந்திரளாகக் கூடும் பக்தர்கள் இந்த அனுமன் கோயிலுக்கும் வந்து வழிபடுவார்கள். சென்னையிலிருந்து ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் பயணித்து உஜ்ஜயினி ரயில் நிலையத்தில் இறங்கிக்கொள்ளலாம். அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் ரஞ்சித் அனுமன் கோயில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையமான இந்தோர், ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. (இந்தோரிலும் இதே பெயரில் அனுமன் கோயில் உண்டு.)