பழநியில் இன்று திருக்கல்யாணம் : நாளை தைப்பூசத் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2017 12:02
பழநி: பழநி தைப்பூச திருவிழாவில் பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (பிப்.,9) இரவு திருக்கல்யாணமும், நாளை தைப்பூசத் தேரோட்டமும் நடக்கிறது.பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா பிப்.,3ல் துவங்கி பிப்.,12 வரை பத்துநாட்கள் நடக்கிறது. இவ்விழாவிற்கு பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மலைக் கோயிலில் மூன்று மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணிசுவாமியை தரிசனம் செய்கின்றனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.அதனை தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு வெள்ளிரதத்தில், முத்துகுமராசுவாமி வள்ளி,தெய்வானையுடன் வீதியுலா நடக்கிறது.தைப்பூச தேரோட்டம்: நாளை தைப்பூசத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு சன்னதி திறக்கப்படுகிறது. பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 10:30 மணிக்கு சுவாமி தேர் ஏற்றம் செய்யப்பட்டு, மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாவின் கடைசிநாள் பிப்.,12ல் தெப்போற்சவம் நடக்கிறது.