பதிவு செய்த நாள்
10
பிப்
2017
03:02
சில நூற்றாண்டுகள் முன்பு வரைகூட நம்நாட்டில் ஹோமங்களும், யாகங்களும் மன்னர்களாலும், செல்வந்தர்களாலும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நன்மை கருதி செய்யப்பட்டு வந்தன. இப்பொழுது விழா, பண்டிகை நாட்களில் கோயில்களிலும் இதர சில இடங்களிலும் பலவிதமான யாகங்கள் நடக்கின்றன. ஆனால் அவற்றிற்கான ஏற்பாடுகளும், பொருட்செலவும், கடைபிடிக்க வேண்டிய ஆசார அனுஷ்டானங்களும் நம்மை அசர வைக்கிறது. அப்படி எந்தவிதமான பொருட்செலவோ, இதர முன் ஏற்பாடுகளோ இன்றி, அவரவர் வீட்டிலேயே ஒரு சில நிமிடங்களில், குறிப்பிட்ட ஹோமம் செய்து பெரும் பலன்களை அடைய வழி இருக்கிறது. இந்தக் கருத்து ஜெர்மனி, இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. நிரூபித்ததோடு அவர்கள் நிற்கவில்லை. தினந்தோறும் இந்த ஹோமத்தைச் செய்து நன்மைகளும் பெற்று வருகின்றனர். அது என்ன ஹோமம்? எப்படிச் செய்வது? பலன்கள் என்னென்ன?
1984-ல் போபாலில் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட இழப்புக்களை சற்று நினைவுபடுத்திக் கொள்ளுவோம். அன்று லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். உடனடியாக இறந்தவர்கள் எண்ணிக்கை 3787. இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கை 8,000 ஆகவும், ஒரு வருடத்தில் இந்நிகழ்வு தொடர்பாக மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 16,000 ஆகவும் உயர்ந்தது. 40,000 பேர் தீவிரமாகவும், மேலும் 3,900 பேர்கள் அதிதீவிரமாகவும் பாதிப்படைந்ததாக மாநில அரசு அறிவித்தது. இத்தனை அமர்க்களங்கள் நடந்தபொழுது, மிகவும் அருகிலிருந்த பகுதியில் வசித்து வந்த ஒரு குடும்பமும், அவர்கள் புண்ணியத்தில் அக்கம் பக்கத்தவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் துளியும் ஏற்படவில்லை. அவர்களைக் காப்பாற்றியது அந்தக் குறிப்பிட்ட பண்டிட்ஜி குடும்பம் தினசரி செய்து வந்த அக்னி ஹோத்ரம் எனும் ஹோமம் தான், இந்த ஹோமம் பற்றி மேலும் விவரங்கள். அக்னி ஹோத்ரம் ஹோமம் செய்ய தாமிரத்தினால் ஆன பிரமிட் வடிவ ஹோமகுண்டம் தேவை. தாமிரமே சக்தி வாய்ந்தது. பிரமிட் வடிவமும் மாபெரும் சக்தி உடையது. இரண்டு சேரும் பொழுது எனர்ஜி பற்றிக் கேட்கவே வேண்டாம்.
நெருப்பின் சக்தி அபரிமிதமானது. பஞ்சபூதங்களிலேயே மாசுபடுத்த முடியாத ஒரே சக்தி நெருப்புத்தான். நாம் தொடர்ந்து பாழ்படுத்தி வரும் இதோ நாலுசக்திகள் (காற்று மாசுபடுதல், ஓசோன் படலமும் குறைபாடு, நீர் நிலைகள் நச்சுமயமாவது, நிலத்தைப் பாழ்படுத்தி வரும் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் சேர்க்கை) சினமடைந்து இயற்கைச் சீற்றமாக வெளிப்படுகிறது. மனிதகுலத்தை நெருங்கி வரும், நெருக்கி வரும் இந்த இயற்கைப் பேரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசிய அவசர கடமை நமக்கு இருக்கிறது. எப்படி? மாசுபடுத்த முடியாத அக்னி, நெருப்பின் மூலம் மாசடைந்த இதர நான்கு சக்திகளை சரிசெய்வது சாத்தியந்தான். வெகு சரியாக, துல்லியமாக சூரியன் உதிக்கும் பொழுதும், அஸ்தமானத்தின்போதும் செய்ய வேண்டும் என்பது முக்கியமான கண்டிஷன். சற்றுக்கூட முன்பின்னமாக இருக்கக்கூடாது. உள்ளூர் வானொலி நிலைய நேரத்தின் அடிப்படையில், இந்த நேரத்தைச் சரியாகச் கணித்து, அதற்குப் பத்து நிமிடங்கள் முன்பாகவே தேவையான எல்லாப் பொருட்களோடும் அமர்ந்து ஹோமகுண்டத்தில் அக்னியை வளர்த்துவிட வேண்டும். இதற்குத் தேவையானது ஏற்கனவே சொன்னபடி தாமிர ஹோமகுண்டம். கவிழ்த்து வைக்கப்பட்ட அரை பிரமிட் வடிவத்தில் மேல் பக்க சதுரம் பதிநான்கரை செ.மீ # பதிநான்கரை செ.மீ. அளவிலும், கீழ்ப்பக்க சதுரம் ஐந்தரை செ.மீ.#ஐந்தரை செ.மீ அளவிலும் உயரம் ஆறரை செ.மீ ஆகவும், சரிந்து வரும் கோணம் 59.2 டிகிரி அளவிலும் இருக்க வேண்டும்! தாமிர உலோகத்தின் மூலக்கூறுகளும் பிரமிட் வடிவத்திலேயே அமைந்திருக்கின்றன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். ஹோமத்தில் பசுஞ்சாணத்தினால் ஆன வரட்டிகளைத்தான் பயன்படுத்த வேண்டும். நல்ல வெய்யிலில் காற்றோட்டமான இடத்தில் அன்றன்று திரட்டப்பட்ட பசுஞ்சாணம் பயன்பட்டிருக்க வேண்டும். பூஞ்சணம் வராமல் காய்ந்திருக்க வேண்டும் என்பதும் அவசியம்.
ஹோமத்தில் ஆஹுதியாக (தீயில் போடுவதற்கு) கொடுக்க முனை முறியாத அக்ஷதை - அதாவது முழு பச்சரிசி, கைக்குத்தல் அரிசி விசேஷம் - இரு சிட்டிகை அளவு போதுமானது. அக்னி நன்கு கொழுந்துவிட்டு எரிய பசுநெய் சிறிது. மேலும் ஒரு ஸ்பூன் நெய்யில் இரண்டு சிட்டிகை அரிசியையும் நன்கு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். ஆல், அத்தி, அரசு, புரசு, வில்வம் போன்ற ஏதாவது ஒரு மரத்தின் காய்ந்த சுள்ளிகள் - ஸமித்து என்று குறிக்கப்படும் சில தேவைப்படும். இவை எல்லாம் ஒன்று சேர்ந்து மந்திர உச்சரிப்புடன் அந்த அதிர்வுகளும் சேரும்பொழுது அக்னியிலிருந்து வெளிவரும் சக்தி அபரிமிதமானது. வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத எனர்ஜி வெளிப்படும். (மேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களும் இப்போது கிடைக்கின்றன.) இந்த ஹோமத்தை யார் வேண்டுமானாலும் ஆண், பெண் வேறுபாடு இன்றி, ஜாதி, மதம், இனம், மொழி, வயது என்று எந்த குறிக்கீடுமின்றி செய்யலாம். விதி விலக்கு என்று சொல்லப்போனால் நோயாளிகளும், உடலின் எந்த பாகத்திலிருந்தாவது ரத்தப்போக்கு இருப்பவர்களும்தான் செய்யக்கூடாது. நேரடியாக ஹோமம் செய்யக்கூடாதே தவிர, அங்கே அமர்ந்து கவனிக்கலாம்.
சூரிய உதய, அஸ்தமனத்திற்குப் பத்து நிமிடங்கள் முன்பாகவே எல்லாப் பொருட்களுடன் தயாராகி, வரட்டியில் கற்பூரம் வைத்து, அக்னி வளர்த்து, குண்டத்தில் வரட்டிகள், சமித்துக்கள் போட்டு, ஜ்வாலை எழுப்பி மிகச்சரியாக சூரியன் எழும் அல்லது மறையும் நேரத்தில் காலை நேரமானால் சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நமம, ப்ரஜாபதயே ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம என்றும் மாலை நேரத்தில் அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் நமம, ப்ரஜாபதயே ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம எனும் மந்திரங்களை (அவ்வளவுதான்) உச்சரித்தப்படி ஸ்வாஹா என்று சொல்லும் சமயங்களில் நெய்யில் தோய்த்த முழு அரிசியை ஹோமத்தில் இட வேண்டும். அக்னியில் இடப்பட்ட பொருட்கள் நன்கு எரிந்து சாம்பலாகும்வரை (சுமார் 10 நிமிடங்கள்) கண்களை மூடியபடியோ, ஜ்வாலையை உற்று நோக்கியபடியோ தியானம் செய்ய வேண்டும். ஹோமத்திலிருந்து எழும்புகை, வீடுமுழுவதும், பரவி, அந்த இடத்தையே தூய்மை செய்யும். ஹோமம் முடிந்த பிறகு ஒன்றரை மணிநேரத்திற்கு ஹோம குண்டத்தைத் தொடவோ, நகர்த்தவோ, இடம் மாற்றவோ கூடாது. வெளிவரும் அதிர்வுகள் அடங்க அத்தனை நேரம் பிடிக்கும். இவற்றை நிரூபித்துள்ளார் ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் எல்.மோனிகா, இந்தப் புகை சுவாசக்கோளாறு, ஜீரணக்கோளாறு, பி.பி. நாள்பட்ட காயம் ஆறுவது, மாதவிடாய் தொந்தரவு சர்ம நோய் மைக்ரேன் தலைவலி போன்றவற்றைச் சரி செய்வதாகச் சொல்கிறார்.
ஹோம குண்டத்திலிருந்து எடுக்கப்படும் சாம்பலும் மகத்துவம் வாய்ந்ததுதான். எந்தவிதமான ஜீவராசிகளோ, பயிர்ப் பச்சைகளோ முளைக்காத கட்டாந்தரையில் அக்னிஹோத்ர சாம்பலைத் தொடர்ந்து தெளித்து வரும் பொழுது மூன்றே மாதங்களில் மண் நல்ல ஜீவ சத்துக்களைப் பெற்று ஏராளமான மண்புழுக்கள் வளர ஆரம்பிக்கிறோம். காய்ந்திருந்த நிலமும் நல்ல ஈரப்பாங்காக மாறுகிறது. நார்மல் நிலத்தில் இடும்பொழுது, நோய் தாக்காத, செயற்கை ரசாயன உரங்கள் தேவைப்படாத, நல்ல மகசூல் கிடைக்கிறது. ஆர்கானிக் பொருட்களைவிட, அக்னி ஹோத்ர விளைபொருட்கள் சத்துக்களிலும், அளவில் பெரியதாகவும், அதிக நாட்கள் கெடாத தன்மையிலும் மேம்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர். இந்த சாம்பலைத் தண்ணீரில் கரைத்து சூரிய வெளிச்சத்தில் மூன்று நாட்கள் வைத்து, செடிகள் மீது தெளித்தால் அந்த ப்ராண சக்தி, தாவரங்களை மேலும் சக்தி பெறவைத்து, பிரமிக்கத்தக்க வளர்ச்சியைக் கொடுக்கிறது. இந்த தாவரங்களிலிருந்து சேகரிக்கப்படும் விதைகளும் அளவில் பெரியதாக, உடனடியாக நல்லபலன் தரும் விதத்தில் காணப்படுகிறது.
தொடர்ந்து போர்வெல்களின் அருகில் அக்னிஹோத்ர சாம்பல் தூவப்பட்டு வரும் பொழுது கிடைக்கும் தண்ணீர் தூய்மையான குடிநீர் தரத்தில் எந்தவிதமான நெகடிவ் குறைபாடுகள் இல்லாமல் உப்புக்கரிக்காமல், பிஎச் இல்லாமல் இருப்பதாகத் தண்ணீர் தரக்கட்டுப்பாடு ஆய்வகம் தரச்சான்றிதழ் கொடுத்துள்ளது. பசு நெய்யுடன் இந்தச் சாம்பல் கலந்து செடிகள், மிருகங்கள் ஏன் மனிதர்களுக்கு ஏற்படும் காயங்கள் மீது தடவும்போது சீக்கிரம் குணமாவதாகச் சொல்கின்றனர். மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது என்பது இந்த அக்னிஹோத்ர ஹோமப் பலன்களுக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.