ரதியைவிட அழகானவள் புஷ்பவந்தி. இனிய குரல் வளம் கொண்டவள். அவள் கணவன் மால்யவான். கந்தர்வ தம்பதியான இருவரும், தேவேந்திர சபையில் ஆடிப்பாடி தேவர்களை மகிழ்வித்தனர். ஒருநாள், அவர்கள் நடனத்தின்போது ஒருவர் மீது ஒருவர் மோகப் பார்வையை வீசிக் கொள்ளவே, பாடல் தவறி நடனத்தில் இடறல் ஏற்பட்டது. இதைப் பார்த்த இந்திரனுக்கு கோபம் ஏற்பட்டது. தொழில் செய்யும் நேரத்தில், நீங்கள் மோகவசப்பட்டதால் பேயாகி, பூமியில் திரியுங்கள்! என்று சாபம் கொடுத்தான். அவர்கள் பேய் வடிவுடன் பூமியில் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள். ஒருநாள் பசியுடன் அரச மரத்தடி ஒன்றில் தங்கினார்கள். நமது வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே! என்று புலம்பியபடி, இரவு முழுவதும் அவர்கள் துõங்கவில்லை. மறுநாள் பேய்களாக இருந்த அவர்கள், மீண்டும் கந்தர்வ வடிவத்தை அடைந்தார்கள். காரணம்? பட்டினியாக, துõங்காமல் இருந்த அந்த நாள் ஜயா ஏகாதசி. அந்த விரதத்தின் பலனே, அவர்களின் பேய்த் தன்மையை நீக்கியது. இது மாசி மாதம் (மார்ச்8) வரும் வளர்பிறை ஏகாதசியன்று அனுஷ்டிக்கப்படும். மனிதனிடம் நற்குணம் வளர, பெருமாளை நினைத்து இந்த விரதம் இருக்கலாம்.