அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலுக்கு சிவகங்கை பக்தர்கள் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க ஊஞ்சலை உபயமாக வழங்கினர்.\
அழகர்கோவில் மலை மீதுள்ள இக்கோயிலுக்கு 2007ல் கும்பாபிஷேகம், 2008ல் பள்ளியறை கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பள்ளியறை பூஜையில் சுவாமி எழுந்தருள, காரைக்குடி பக்தர்கள் 10 கிலோ எடையில் வெள்ளி ஊஞ்சலை உபயமாக வழங்கினர். தற்போது சிவகங்கை முருக பக்தர்கள் சபையினர் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு கிலோ எடையில் தங்க ஊஞ்சலை உபயமாக வழங்கியுள்ளனர். அதற்கான பூஜை நேற்று நடந்தது. பள்ளியறை, அர்த்தஜாம பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டது. நிர்வாக அதிகாரி மாரிமுத்து கூறியதாவது: ஊஞ்சலை மயிலாடுதுறை பொற்கொல்லர்கள் கலை நயத்துடன் செய்துள்ளனர். தாமிரத்தகடுகள் பதிக்கப்பட்டு, அதில் ஒரு கிலோ எடையிலான தங்க இழைகள் ஒட்டப்பட்டுள்ளன. ஏற்கனவே இருக்கும் வெள்ளி ஊஞ்சலை, இதே பக்தர்கள் கூடுதலாக 30 கிலோ எடை வெள்ளியில் இருபக்கமும் கால்கள், பட்டம், மேல் கூரை அமைத்து கொடுத்துள்ளனர். இதன் மதிப்பு 15 லட்சம் ரூபாய். இதில் குழந்தை வரம் கிடைக்கப்பெற்றவர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பயன்படுத்தப்படும், என்றார்.