திருப்புல்லாணி பிரமோத்ஸவ விழா: சேதுக்கரை கடலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2017 11:04
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப்பெருமாள் கோயிலில் பங்குனி பிரமோத்ஸவ விழா,ஏப்., 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்களும் உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச திருமஞ்சனம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு கோவிந்தா கோஷம் முழங்க திருப்புல்லாணி கோயிலில் இருந்து உற்சவர் மூர்த்திகள் புறப்பாடாகி சேதுக்கரை கடற்கரைக்கு வந்தடைந்தனர். கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாதப்பெருமாளும், ஆஞ்சநேயர் வாகன சேவையில் பட்டாபிஷேக ராமரும், சேதுக்கரையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடலில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடந்தது. கோயில் பட்டாச்சாரியார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப்பாடல்கள் பாடினர். உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் நடந்தது. நிறைவுநாளான இன்று காலை 9:00 மணிக்கு உபயநாச்சிமார்களுடன் பெருமாள், அருகில் உள்ள வானமாமலை மடத்திற்கு எழுந்தருள உள்ளார். இரவில் பல்லாக்கில் வீதியுலா நடக்கும். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.