பதிவு செய்த நாள்
11
மே
2017
12:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள்(அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில், பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் விண்ணை முட்ட ‘கள்ளழகர்’ பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.
பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் மே 5 ம் தேதி சித்திரைத் திருவிழா காப்பு கட்டுடன் துவங்கியது. மே 9 ல் காலை 8:30 மணிக்கு பெருமாள், கருப்பணசாமிக்கு கும்பதிருமஞ்சனம் நடந்தது. பின்னர் அதிகாலை 2.00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் பூப்பல்லக்கில் ‘கள்ளழகர்’ திருக்கோலத்தில் அருள்பாலித்தார். கோயில் வெளியில் வந்த அழகர் காவல் தெய்வம் கருப்பண்ணசாமியிடம், விடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தீவட்டிகள் வெளிச்சத்தில், வாண வேடிக்கைகள், மேள, தாளம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா’ கோஷம் முழங்க 3:18 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். ‘அழகர்’ பச்சை பட்டு உடுத்தி வந்தார்.
இதனால் நல்ல மழை பெய்து வளம் பெருகும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர். காட்டுப்பரமக்குடி, மஞ்சள்பட்டினம் வழியாக, ஆற்றுப்பாலம் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் மதியம் 2:30 மணிக்கு அருள்பாலித்தார். மேலும் பெரியபஜார், பெருமாள் கோயில் தெரு, எமனேஸ்வரம் வழியாக, இரவு 11 மணிக்கு காக்காதோப்பு பெருமாள் கோயிலை அடைந்தார். வழிநெடுகிலும் நுாற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் அழகரை வரவேற்றனர். விழா ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி அகஸ்தியன், டிரஸ்டிகள் மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.