பதிவு செய்த நாள்
19
மே
2017
12:05
திருத்தணி: மழை பெய்ய வேண்டி, திருத்தணி முருகன் கோவிலில், வருண பகவானுக்கு வேள்வி யாகம் நேற்று முன்தினம் இரண்டாவது முறையாக நடந்தது. திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலைய துறை ஆணையர் உத்தரவின் பேரில், மழை பெய்ய வேண்டும் என, வருண பகவானுக்கு சிறப்பு வேள்வி பூஜை, 30ம் தேதி நடந்தது. இந்நிலையில், இரண்டாவது முறையாக வருண பகவானுக்கு வேள்வி பூஜை, நேற்று முன்தினம், நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில், ஒரு யாகசாலை, ஒன்பது கலசங்கள் வைத்து வருண வேள்வி, வருண காயத்ரி ஜபம், வருண சூக்க பாராயணம் போன்றவை நடந்தது. காலை, 7:00 மணிக்கு, யாகம் துவங்கி, காலை, 10:00 மணி வரை நடந்தது. அந்த நேரத்தில், மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, ரூபா கல்யாணி, ஆனந்த பைரவி ஆகிய ராகங்களில் நாதஸ்வர குழுவினர் வாசித்தனர். பின், ஓதுவா மூர்த்திகள் மழை வேண்டல் தேவார பதிகம் பாடினர். முன்னதாக, நந்தி பகவான் சன்னிதியில் தற்காலிக சுவர் எழுப்பி, நீர் நிரப்பி அதன்பின், கலசங்கள் வைத்து, 108 விசேஷ மூலிகைகளை கொண்டு ஆண்டு வேள்வி நடத்தப்பட்டது.பின், மூலவர் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துர்க்கையம்மன் மற்றும் உற்சவர் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை மற்றும்தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, மற்றும் ஊழியர்கள் செய்து இருந்தனர்.