பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
12:07
மயிலாடுதுறை: பழமைவாய்ந்த மயூரநாதர் கோவிலில் உள்ள, சித்தர் சன்னிதியில் வழிபாடு நடத்திய வெளிநாட்டினர் காது குத்திக் கொண்டனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், பிரசித்திப்பெற்ற, மயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு, மலேசியா, ஸ்வீடன், ஸ்பெயின், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து, 80க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், ஆன்மிக பயணமாக நேற்று வந்தனர். சாமி தரிசனம் முடிந்த பின், குதம்பை சித்தர் சன்னிதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு யாகத்தில், கலந்து கொண்டனர். சித்தருக்கு நடத்தப்பட்ட அபிஷேகத்தை தொடர்ந்து, சித்தர் சன்னிதி எதிரில் அமர்ந்து, 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் காது குத்திக் கொண்டனர். தமிழகத்தில் அமைந்துள்ள சித்தர் கோவில்களில் வழிபாடு நடத்துவதற்காக, ஆன்மிக பயணமாக வந்துள்ளதாக, வெளிநாட்டு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ‘பல நாடுகளில், சித்தர் வழிபாட்டு மன்றங்களை நடத்தி வருவதாகவும், இந்த மன்றங்களில் வெளிநாட்டினர் ஆர்வமுடன் சேர்ந்து வழிபாடு நடத்துகின்றனர்’ என, வெளிநாட்டினரை அழைத்து வந்த, மலேசியாவை சேர்ந்த தியான் விமல் தெரிவித்தார்.