பதிவு செய்த நாள்
01
செப்
2017
12:09
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு துவக்கப்பட்ட பல பணிகள், விழா முடிந்து நான்கு மாதங்கள் ஆகும் நிலையில், முடிவு பெறாமல் கிடப்பிலேயே உள்ளன. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். கிடப்பில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர், வைணவ மகான் ஸ்ரீராமானுஜர். இவர், சமய, சமூக, சமுதாய சீர்திருத்தங்களை அந்த காலத்திலேயே ஏற்படுத்தியவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே, ராமானுஜர் உருவம் தாங்கிய செப்பு விக்ரகத்தை அவரது சீடர்கள் உருவாக்கினர். அது, தானுகந்த திருமேனி என, அழைக்கப்படுகிறது. அந்த செப்பு விக்ரகம்பல நுாறு ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு விழா, ஏப்., 22ல் துவங்கி, மே 1 வரை விமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவிற்காக, கோவிலை சுற்றியுள்ள சாலைகள் தார் சாலைகளாக மாற்றப்பட்டன. மேலும், மின் விளக்கு, குடிநீர், கழிப்பறை என, பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.ராமானுஜரின் ஆயிர மாவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட முன்கூட்டியே திட்டமிடப்பட்டாலும், சில அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால், கடைசி நேரத்தில் அவசர கதியிலேயே பணிகள் நடந்தன.
இந்நிலையில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா நிறைவடைந்து, நான்கு மாதங்கள் ஆகியும் பல பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, ராமானுஜரின் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
என்னென்ன சொதப்பல்கள்?: ஆதிகேசவப் பெருமாள் கோவில் வளாகத்தின் முன் சிறிய தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மிகவும் பழமை வாய்ந்த இந்த தேர், ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவிலின் முன்பகுதியை சீரமைக்கும் போது அகற்றப்பட்டது. விழா முடிந்த பின், ஏற்கனவே, இருந்த இடத்தில் அந்த தேரை நிறுத்தாமல், கோவிலுக்கு எதிரே சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். திறந்த நிலையில் உள்ளதால், மழையில் நனைத்து தேர் வீணாகி வருகிறது. அதுபோல, ஸ்ரீபெரும்புதுார் தேரடி சாலையில், பெரிய தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர் நிலையத்தின் மீது இரும்பு தகடால் ஆன கூண்டு அமைக்கப்பட்டிருந்ததால், தேர் மழையில் நனையாமல்பாதுகாப்பாக இருந்தது. விழாவை முன்னிட்டு சாலை விரிவாக்கம்செய்ததால் தேர் கூண்டு அகற்றப்பட்டது. தேரை சீரமைத்து கண்கவர் வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், திருவிழா முடிந்ததும் தேர் நிலையத்திற்கு மீண்டும் வந்தடைந்தது. ஆனால், அகற்றப்பட்ட தேர் கூண்டு மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால், தேர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வாகன புகையால் சேதமாகி வருகிறது.
கோவிலுக்கு எதிரே பள்ளம் தோண்டி, புதுமையான முறையில் சாலை அமைக்கப்பட்ட இடத்தில் மழை நீர் செல்ல வழி இல்லாததால், மழை பெய்யும் போது, கழிவு நீருடன் மழை நீர் கோவிலுக்கு முன் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால், கோவிலுக்கு உள்ளே செல்ல பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், கோவிலுக்கு முன்புறம் கட்டப்பட்ட மதில் சுவர் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது. இங்கு கட்டுமான கம்பிகள் ஆபத்தான வகையில் நீண்டி கொண்டிருக்கின்றன. இதனால், கோவிலுக்கு வரும் குழந்தைகள், வயதானவர்கள் இந்த கம்பிகள் மீது தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. கோவிலுக்கு பின்புறம், அனந்தசரஸ் குளத்தின் அருகே கழிப்பறை கட்டுமானம் பணி துவங்கியது. இதற்காக சுவர் எழுப்பிய நிலையில், முழுவதும் கட்டி முடிக்காமல் பணிகள் கிடப்பில் உள்ளன. இதனால், கழிப்பறை கட்ட ஒதுக்கிய நிதி வீணாகி உள்ளது. அதுபோல, ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரபல கார் தொழிற்சாலை சார்பில், கோவிலின் அருகே ஆண், பெண் பக்தர்களுக்கென தனித்தனியே நவீன வசதிகளுடன், பல லட்சம் ரூபாய் மதிப்பில் கழிப்பறை கட்டப்பட்டது. தற்போது, இந்த கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. பராமரிப்பும் அறவே இல்லை. தற்போது அந்த கழிப்பறையின் உள்ளே யாரும் செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதிய கழிப்பறை வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு அவரை சிறப்பிக்கும் வகையில், தமிழக சுற்றுலா துறை சார்பில், ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு, ஆறு கோடி மதிப்பில் மணி மண்டபம் கட்டி, அதில் ராமானுஜர் குறித்த வரலாற்று தகவல், நுாலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 2.70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பணிகளும் துவங்கவில்லை. ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான வனபோஜ மண்டபம், ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு வர்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டது. வனபோஜன மண்டம் அருகேஉள்ள இடத்தில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பணிகளும் துவங்கவில்லை. தற்போது பராமரிப்பு இல்லாததால், வனபோஜன மண்டபம், பகல் நேரத்திலேயே மது அருந்தும் இடமாக மாறிவிட்டது. மேலும், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்களும் அங்கு நடந்து வருகிறது.