பதிவு செய்த நாள்
02
டிச
2017
11:12
திருத்தணி:பழுதடைந்து, பராமரிப்பின்றி இருக்கும் ஈஸ்வரன் கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.திருத்தணி ஒன்றியம், செருக்கனுார் கிராமத்தில் உள்ள, இருளர் காலனி பகுதியில், பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட, ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலை, முறையாக பராமரிக்காததால், தற்போது பழுதடைந்து உள்ளது.கோவில் மண்டபம், சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை.
இக்கோவிலில் தினமும், கிராமத்தின் சார்பில், ஒரு வேளை மட்டும், பூஜை நடந்து வருகிறது.மகா சிவராத்திரி, ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் உட்பட, முக்கிய திருவிழாக்களின் போது, இக்கோவிலில், வெகுவிமரிசையாக பூஜைகள் நடக்கின்றன. கிராம பொதுமக்களின், பங்களிப் புடன் இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன.கோவிலை பராமரிக்க, போதிய நிதியுதவி இல்லாததால், ஆண்டுக்கு ஆண்டு, கோவில் பழுதுஅடைந்து வருகிறது.எனவே, இந்து அறநிலை துறையினர், இக்கோவிலை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பராமரிக்க வேண்டும். மேலும், கோவிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, செருக்கனுார் கிராம பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.