பதிவு செய்த நாள்
18
ஜன
2018
11:01
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் கீழக்கோயில்பட்டி கிராமத்தில் பூ எருவாட்டி திருவிழா நடந்தது. தைப்பொங்கலை அடுத்து சந்தி மறித்து பொங்கல், சப்த கன்னி பொங்கல், தைநீராடல், ’சிறுவீட்டு’ பொங்கல் ஆகியவை நடந்துள்ளதாக சங்க இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வத்தலக்குண்டு அருகே கீழக்கோயில்பட்டியில் ’சிறுவீட்டு’ பொங்கல், ’பூ எருவாட்டி’ திருவிழாவாக பரிணாமம் பெற்று நடந்து வருகிறது.
வாசலிலே பூசணிப் பூ : இக்கிராமத்தில் பெண் வாரிசுகள் உள்ள வீடுகளில் மார்கழி மாதம் வாசலில் கோலமிட்டு, பூசணி பூக்களை சாண உருண்டையில் சொருகி, கோலத்தின் நடுவே வைப்பர். சில மணி நேரத்திற்குப்பின், சாண உருண்டைகளை எருவாட்டியாக்கி, அதிகாலை வைத்த பூசணி பூக்களை நான்காக கிழித்துஎருவாட்டி மீது ஒட்டி காய வைத்து, ’பூ எருவாட்டி’யாக்குகின்றனர். இவ்வாறு ’பூ எருவாட்டி’களை சேமித்து வைத்திருக்கும் பெண்கள் நேற்று முன் தினம் மாலையில் தப்பாட்டத்துடன் அழைத்து வரப்பட்டனர். பகவதி அம்மன் கோயில்,மருதாநதி கரையில் வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை, பாக்குடன், பூ எருவாட்டிதட்டுகளை வைத்து இளம் பெண்கள்கும்மி அடித்தனர். கும்மியில் ஊரும், ஊர் மக்களும், விவசாயமும் செழிக்கவேண்டினர். அனைவரது தட்டுக்களிலும் உள்ள தேங்காய் உடைக்கப்பட்டு பூஜை நடந்தது.பின், மருதாநதியில் எருவாட்டி மீது வெற்றிலையை வைத்து சூடமேற்றி குலவையிட்டு நீரில் விட்டனர்.
இது குறித்து கிராமத்தினர் கூறுகையில், “எங்களது தாத்தா காலத்தில் இருந்து ’பூ எருவாட்டி’ நிகழ்ச்சி நடந்து வருகிறது. பொங்கல் திருவிழாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக முன்னோர்கள் இவ்வழக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக நினைக்கிறோம்” என்றனர்.