ஆடை, ஆபரணம் போலவே, மருதாணியும் பெண்களுக்கு பிடித்தது. கையில் மருதாணி இட்டு, காய வைத்து கழுவும் போது கொஞ்சம் கொஞ்சமாக மருதாணி கரைந்து, அந்தி வானம் உள்ளங்கைக்கு வந்தது போன்ற மகிழ்ச்சி, பெண்களுக்கு அளவில்லாதது. கால மாற்றத்தில் மருதாணி மட்டும் விதிவிலக்கா என்ன? அதுவும் மாறிவிட்டது, மெஹந்தியாக. மருதாணியில் இருக்கும் அறிவியல் அலாதியானது. மருதாணி, உடல் சூட்டை தணிக்கும். தோல், நகக்கண்களில் இருக்கும் கிருமிகளை கொல்லும். மேலும், மருதாணி இலையை நிழலில் காய வைத்து பொடியாக்கி, தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது குறையும், தலையில் அரிப்பு, பொடுகு கட்டுப்படும். மருதாணி மங்கலம் மட்டுமல்ல, உடல் காக்கும் மந்திரமும் தான்.