பதிவு செய்த நாள்
26
ஜூலை
2018
04:07
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம்
அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் சுருக்கம்
வேதியா வேதா கீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்குநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்: படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆல வாயில் அப்பனே அருள் செய்யாயே!
தேவாரம் 4ஆம் திருமுறை - திருஆலவாய்!
வேதங்களிலும் உபநிடதங்களிலும் புராணத்தின் சிறப்புச் சொல்லப்பட்டள்ளது. புராணங்கள் வேதங்களோடு தோன்றிய காரணத்தால் புராணத்தை வேதம் என்றே வடமொழி நூல்கள் தெரிவிக்கின்றன. புராணங்கள் பதினெட்டாகும் என வரையறுக்கப்பட்டுள்ளன. பத்தாம் நூற்றாண் டில்தான் தனியாகப் புராணங்கள் தனது தோற்றத்தை வெளிப்படுத்தின. ஆரம்பகாலப்புராணங்கள், சாந்தி புராணம், அட்டாதசப் புராணம், கன்னிவனப்புராணம் போன்றவை. கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு தல புராணங்களுக்குரிய காலமாகும் என உரைக்கின்றார். வேதங்களிலும் உபநிடதங்களிலும் புராணச் சிறப்புகள்பற்றி சொல்லப்படுகிறது. புராணங்கள் வேதங்களோடு தோன்றிய காரணத்தால் புராணத்தையும் வேதம் என்ற வடமொழி நூல்கள் தெரிவிக்கின்றன. மஹா புராணங்கள் பதினெட்டு என்ற வரையறையும் ஏற்பட்டது.
ஆரம்பகாலத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இறைவன் மீது பக்திப் பாடல்களைப் பாடினர். அதன் பிற்காலத்தில் தல புராணங்கள் பாடப்பட்டன. புராண இலக்கியங்களுள் பெருங்காப்பிய இலக்கணம் பொருந்தியிருக்கும். நாடு, நகரம், ஆறு, மலை என வர்ணனைகள் அவற்றில் இடம் பெற்றிருக்கும். மூர்த்தி, தலம், தீர்த்தம் போன்றவற்றின் பெருமைகளோடு விழா, வேள்வி, வழிபட்டோர் வரலாறு அவர்கள் அடைந்த சிறப்புப் பயன்கள் ஆகியவைகள் இடம் பெற்றிருக்கும். இவை அனைத்தையும் ஒரு சேர இத்திருவிளையாடற்புரணாம் உள்ளடக்கியது.
திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் ஆவார். ""பரஞ்சோதி என்ற பெயரில் பரஞ்சோதியர்களை மு. அருணாசலம் என்பவர் கூறுகிறார். (இவர் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்). ஆவர் தெரித்தவை.
1. பரஞ்சோதியார் : இவர் 63 நாயன்மார்களுள் ஒருவர். கிபி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரே பின்னாளில் சிறுத்தொண்டர் என்ற பெயரில் திகழ்ந்து இறையருள் பெற்றவர்
2. பரஞ்சோதி மாமுனிவர் : இவர் காலம் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு காலத்தியவர். இவர் கைலாயத்திலிருந்து திருவெண்காட்டிற்கு ஆகாய வழியில் செல்லுகையில் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டு அக்குழந்தைக்கு உபதேசம் செய்து ""மெய்க்கண்டார் என்ற திரு நாமம் சூட்டிச்சென்ற யோகியார்.
3. பரஞ்சோதி :- சிதம்பர புராணம் பாடிய பராணத்திருமலை நாதரின் புதல்வர். கி.பி. 16ம் நூற்றாண்டினர். தத்துவஞானப்பிரகாசரின் மாணவர்.
4. பரஞ்சோதி முனிவர் :- திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர். முந்தைய மூவருக்குப் பிற்பட்டவர். இத்திருவிளையாடற்புராண நூலை அம்மை ஸ்ரீ மீனாக்ஷி தனது கனவில் வந்து எம்பெருமானின் திருவிளையாடல்களைப் பாடுவாய் என பணித்தார் என்பதால் அதனை சிரமேற்கொண்டு இந்நூலைப் பாடிமுடித்து சொக்கேசர் சந்நிதியில் அறுகாற் பீடத்திலிருந்து பாடல் 21 இதனை அடியவர்களும் புலவர்களும் இருப்ப அரங்கேற்றினார். இவர் இயற்றிய இதர நூல்கள் வேதாரணிய புராணம், திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தாந்தி போன்றவைகளாகும். இவர் காலம் பலரின் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 16ம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கூறுகின்றனர்.
5. திருவிளையாடற்புராணத்தின் பாடல்களின் எண்ணிக்கை 3367 என்றும் பல பட்டடைச் சொக்கநாதப் புலவர் இந்நூலிற்கு இரண்டு சிறப்புப் பாயிரங்கள் எழுதியவர். ""அருச்சுணை ஈருய் யாப்பின் விரி மூவாயிரத்து முன்னூற்றுபத்தேழின் மதுரைப் புராணம் என்று பாடியுள்ளார். தற்போது கிடைத்திருப்பதில் 3363 மட்டுமே. மற்ற 4 பாடல்களும் இடையில் மறைந்திருக்கக் கூடுமென கூறுகின்றனர்.
6. திருவிளையாடற் புராணத்தின் மூலநூல் என்பது அறுதியிட்டுக் கூற முடியவில்லை. சிலர் வடமொழி நூலின் ஒரு பகுதி என்றும் சிலர் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில் தமிழ் நூல்களில் இப்புராணம் பற்றி ஏற்கனவே இந்நூலக்கு முன்நூல் சில தொகுப்புகளோடு வந்ததென்றும் கூறுகின்றனர்.
7. அவ்வாறு நோக்கில் இந்நூல் முழுதும் வானவர், தெய்வங்கள் என பலருடன் தொடர்புபடுத்தப்பட்ட ஒரு காப்பியம். இத்திருவிளையாடற்புராணம் முருகப் பெருமானால் அகத்தியருக்கு அருளப்பட்டு பின் அகத்தியப் பெருமானால் பிற முனிவர்கள் அறிந்தனர் என்றாகி, அவர்கள் அனைவரும் சொக்கேசனை வழிபட்டுப் பூசனைகள், ஆராதனைகள் செய்தார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்நூலின் காப்பு, கடவுள் வாழ்த்து, பாயிரம், சிறப்புப் பாயிரம், அவையடக்கம் நாட்டுச்சிறப்பு, நகர்ச்சிறப்பு, கைலாயச் சிறப்பு, புராண வரலாறு, தலச்சிறப்பு, தீர்த்தச் சிறப்பு, மூர்த்திசிறப்பு, பதிகம் இவற்றிடன் அறுபான் நான்கு திருவிளையாடல்களையும் தனித்தனிப் படலங்களாக விளக்குகிறது. அத்தோடு நூல் முடிவில் அருச்சுனை சிறப்பும் இடம் பெற்றுள்ளது 11+64+1 = 76 படலங்கள் எனப் பொதுவாகப் பகுக்கலாம். இதில் சைவத் திருமுறைகள், சைவ சித்தாந்த சித்திரங்கள் சங்க இலக்கியங்கள் ஆகியவற்றின் கருத்துக்கள் இடையிடையே இடம் பெற்றுள்ளன. மேலும் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடிப் பரவசப்படுத்தும் தன்மையுடையது. சொல்லழகு, கவி நயம், பொருள் ஆழம், இனிய சந்தங்கள் என தமிழ்மொழிக்குச் சிறப்புச் சேர்க்கப்பட்டுள்ளது. சைவப் பெருமக்களால் தினமும் பாராயணம் செய்யப்பட்டு வந்த உயர்ந்த தன்மையுடையது. அச்சுருக்கம் பார்ப்போம்.
திருவிளையாடல் புராணம்
சிவபெருமான், தன் அடியார்களை ஆட்கொள்வதற்காகப் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியுள்ளார். சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அறுபத்தி நான்கு. திருவிளையாடல் களை நிகழ்த்திய இடம் மதுரை மாநகர். இவற்றை பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் என்ற நூலாக எழுதி அருளி உள்ளார். இந்நூல் உயர்ந்த இலக்கிய நடையில் மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்க் காண்டம் - என்ற மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருவாலவாய்க் காண்டத்தில் 16 படலங்களும் என்று 64 படலங்களில் 64 திருவிளையாடல்கள் கூறப்பட்டுள்ளன. கடம்பவனம், திருவாலவாய், கூடல் மாநகர் என்பன மதுரைக்குப் பழங்காலத்தில் இருந்த வேறு பெயர்களே. இப்பெயர்கள் மதுரைக்கு அமைய காரணமான நிகழ்ச்சிகளும் இதில் கூறப்பட்டுள்ளன.
முதலில் மதுரையின் புண்ணியத் தீர்த்தமான பொற்றாமரைக்குளம் தோன்றிய வரலாறு. அங்கே "கடம்பவனம் என்னும் பெயரில் பிற திருவிளையாடல்களும் கூறப்படுகிறது. அவற்றை இச்சிறு கட்டுரையின் மூலம் சுருக்கமாகக் காண்போம்.