பாண்டிய அரசன் மலயத்துவசன். இவன் சோழ மன்னனான சூரசேனின் மகள் காஞ்சனமாலையை மணந்து கொண்டான். ஆண்டுகள் பல ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் வேதனை அடைந்த அரசன் அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். 99 யாகங்களைச் செய்து விட்டான். இன்னும் ஒரு யாகத்தைச் செய்து முடித்துவிட்டால் இந்திர பதவியே அவனுக்குக் கிடைத்துவிடும். இந்திரனுக்குப் பயம் வந்துவிட்டது. பதவி பறிபோவதை யார் தான் விரும்புவர்? பாண்டியனிடம் வந்தான் இந்திரன். "உனக்கு குழந்தை வேண்டுமாயின் புத்திரகாமேஷ்டி யாகம் செய், உன் குறை தீரும்? என்றான். மலையத்துவச பாண்டியனும் உடனே புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தொடங்கினான். மந்திரங்கள் விண்ணைப் பிளந்து ஒலித்தன. வேள்வித்தீ வானைத் தொட்டு சுடர்விட்டெழுந்தது. யாக குண்டத்தில் இருந்து அழகான குழந்தை தோன்றியது. அக்குழந்தை அரசி காஞ்சனமாலையின் மடிமீது வந்தமர்ந்தது. குழந்தையைப் பார்த்தான் அரசன். மூன்று தனங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான்.
""கடவுளே! ஆண் வாரிசுக்காக யாகம் செய்தேன். நீ கொடுத்தது பெண் குழந்தை. அதுவும் மூன்று தனங்களுடன்! இதைக் கண்டு பகைவர்கள் கேலி செய்வார்களே. என் செய்வேன்! என்று வருந்தினான் அப்போது ""மலையத்துவசா! மனம் கலங்காதே! மகளை மகனைப்போலவே வளர்த்து முடிசூட்டு தக்க கணவன் வரும்போது ஒரு தனம் மறைந்து விடும்! என்று அசரீரி ஒலித்தது. அரசன் மகிழ்ந்தான். மக்கள் அனைவரும் களிப்படைந்தனர். விழா கொண்டாடினர். குழந்தைக்கு தடாதகை எனப் பெயர் இட்டனர். தடாதகை வளர்ந்தாள். சகல கலைகளையும் கற்றுத்தேர்ந்தாள் வீராங்கனையாய்த் திகழ்ந்தாள். ஒரு நல்ல நாளில் தடாதகைக்கு முடிசூட்டு விழாவும் நடைபெற்றது. அதன் பிறகு, சில நாட்களில் மலையத்துவசன் சிவனடி சேர்ந்தான். பாண்டிய நாடு பெண்ணரசியின் நல்லாட்சியில் தழைத்தது. தடாதகை என்ற கன்னிப்பெண்ணால் ஆளப்பட்ட பாண்டிய நாடு ""கன்னிநாடு எனப்பெயர் பெற்றது.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »