மதுரை தோன்றுவதற்கு முன், பாண்டிய மன்னன் "மணவூர் என்னும் ஊரைத் தலைநகரமாக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். அவ்வூரில் வாழ்ந்த வியாபாரிகளில் ஒருவன் தனஞ்செயன் என்பவன் இவன் ஒரு சிறந்த சிவபக்தன். ஒருநாள் மேற்குத்திசையில் உள்ள பல ஊர்களுக்குச் சென்று வியாபாரம் செய்து திரும்பிக் கொண்டிருந்தான். அவன், கடம்பவனத்தை அடையும்போது இருட்டிவிட்டது. அச்சமயம் விண்ணில் இருந்து ஒளிமயமான விமானம் ஒன்று இறங்கி வருவதை பார்த்தான். அவ்விமானத்தில் சிவலிங்கமும் இருப்பதைக் கண்டான். பிரமிப்புடன் இறைவனை வணங்கினான். அன்று திங்கட்கிழமை நடுஇரவு தேவர்கள் வந்தனர். நான்கு யாமங்களிலும் சொக்கலிங்க மூர்த்தியை பூஜை செய்தனர்.
மறுநாள் பொழுது விடிந்ததும் தேவர்களைக் காணவில்லை. விமானமும் சிவலிங்கமும் மட்டுமே இருந்ததைப் பார்த்தான். ஊர்திரும்பி பாண்டிய அரசனிடம் தான் கண்டவற்றைக் கூறினான். மகிழ்ச்சி அடைந்த குலசேகரப் பாண்டியன் அதே நினைவுடன் இரவில் உறங்கச் சென்றான். அரசனின் மூடிய இமைகளுக்கு இடையே கனவில் நிழல் படர்ந்தது. அக்கனவில், சித்தராக வந்த சிவபெருமான், ""குலசேகரப் பாண்டியா! கடம்பவனக் காட்டைத் திருத்தி, அழகிய நகரத்தை உண்டாக்குக! என்று கட்டளையிட்டார். தெய்வக் கட்டளையாயிற்று. வாளாவிருக்க முடியுமா? மறுநாளே அமைச்சர்களுடன் கடம்பவனக் காட்டிற்குச் சென்றான் குலசேகரப்பாண்டியன் பலநாள் பலரின் உழைப்பில் கடம்பவனக் காட்டை ஓர் அழகிய நகரமாக மாற்றி அமைத்தான். நகரம் பூர்த்தி ஆனதும் சாந்தி செய்ய விரும்பினான் அரசன். இதை அறிந்த சொக்கலிங்கக் கடவுள், தம் சடையில் உள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தினான். "மதுரமயமான தன்மையால் மதுரா நகர் எனப்பெயர்பெற்று நாளைடைவில் "மதுரை நகர் என்று மருவிற்று.
மேலும்
ஸ்ரீ ராஜ மாதங்கி
8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »