பதிவு செய்த நாள்
14
அக்
2018
01:10
திருநெல்வேலி:நெல்லையில் தாமிரபரணி புஷ்கரத்தை யொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் தங்களது கட்சியினருடன் வந்து புனித நீராடினர். குருபெயர்ச்சியால் தாமிரபரணியில் அக். 11 முதல் 23 வரையிலும் மகாபுஷ்கர விழா நடக்கிறது. திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி பாயும் 130 கி.மீ.,துாரம் உள்ள பல்வேறு படித்துறைகள், தீர்த்தக்கட்டங்களில் மக்கள் நீராடுகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மும்பை போன்ற இடங்களில் இருந்தும் பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் நேற்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோதியது.குறிப்பாக நெல்லை தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை, பாபநாசம், கல்லிடைகுறிச்சி, முக்கூடல், முறப்பநாடு என பல்வேறு படித்துறைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லையில் புஷ்கர விழாவிற்கு வந்தவர்களுக்கு உணவு பற்றாக்குறை வரக்கூடாது என்பதற்காக பல்வேறு அமைப்பினர் 13 தினங்களும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்குகின்றனர்.
நிரம்பி வழியும் ஓட்டல்கள்: இதை தவிர நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓட்டல்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக நெல்லையின் பிரசித்தி பெற்ற அல்வா கடைகளில் போலீஸ் பாதுகாப்போடு வியாபாரம் நடக்கிறது. நெல்லையில் சிறிய தங்கும்விடுதிகள் முதற்கொண்டு பெரிய ஓட்டல்கள் வரையிலும் ரூம்கள் புக்காகி விட்டன. இதனால் குழுவாக வருபவர்கள் மண்டபங்கள், மடங்களில் தங்குகின்றனர். சிறிய வணிக நிறுவனங்களில் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆட்டோக்கள், வாடகை கார்கள், டெம்போ வாகனங்களில் டிரைவர்களும் பிசியாக உள்ளனர்.
புனித நீராடிய அமைச்சர்கள்: நெல்லை பாபநாசத்தில் நடந்த புஷ்கர விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கிவைத்தார்.தமிழக அமைச்சர்கள் யாரும் வரவில்லை.மாவட்ட நிர்வாகமோ, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளோ ஆரம்பத்தில் இருந்தே புஷ்கர விழாவிற்கு ஆதரவான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அறநிலையத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் பல்வேறு இந்து அமைப்புகள், துறவியர் சங்கங்களின் முயற்சியால் புஷ்கர விழாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். நேற்று துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நீராடினார்.நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தமது கட்சியினருடன் வந்து நீராடினார்.
தாமிரபரணி ஆரத்தி ஜீயர்கள் பங்கேற்பு: தாமிரபரணி மகாபுஷ்கர விழாவை முன்னிட்டு திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் ஜடாயு படித்துறையில் நேற்று இரவு நடந்த ஆரத்தியில் ஜீயர்கள் பங்கேற்றனர். திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் அக்.,11ல் துவங்கி 23ம் தேதி வரை மகாபுஷ்கர விழா நடக்கிறது. திருநெல்வேலி அருகே அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் கோயில் அருகே தாமிரபரணி, ஜடாயுப் படித்துறை தீர்த்தக் கட்டத்தில் ஆரத்தி நடந்தது. நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் எட்டெழுத்துப் பெருமாள், காட்டுராமர் உற்ஸவத்தில் எழுந்தருளினார். எட்டெழுத்து பெருமாள், காட்டுராமர் ஜடாயு படித்துறை தீர்த்தக் கட்டம் வந்ததும் தீபாராதனை நடந்தது. ஸ்ரீவானமாமலை ராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், கொங்கு மண்டல நாராயண ஜீயர் தலைமையில் நதியில் தீர்த்தம் சமர்ப்பிக்கப்பட்டது. காசி வேத விற்பன்னர்கள் ஆரத்தி எடுத்தனர்.