பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
சென்னை :ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில், சபரிமலை அய்யப்பன் பற்றி அவதூறு பரப்பிய, சுந்தரவள்ளி என்பவர் மீது, போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.கேரளாவில், கனமழை காரணமாக, ஆகஸ்டில், வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால், பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. சபரிமலை அய்யப்பன் கோவிலிலும், மழை நீர் சூழ்ந்தது. இதனால், பக்தர்கள் வர வேண்டாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.அப்போது, சென்னையை சேர்ந்த, சுந்தவள்ளி என்பவர், சபரிமலை அய்யப்பன் பற்றி, ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில், சில கருத்துகளை, பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார்; பலர் கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், சென்னையை சேர்ந்த, ஹிந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பின் நிர்வாகி, வி.ஜி.நாராயணன் என்பவர், ஆக., 20ல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:சமூக வலைதளமான, பேஸ்புக்கில், சபரிமலை அய்யப்பன் பற்றி அவதூறு பரப்பி உள்ள சுந்தரவள்ளி, பேராசிரியர் என, அறிகிறோம். அரசியல் கட்சி ஒன்றின், எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகியாகவும் உள்ளார்.
ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில், தொடர்ந்து பேசி வரும் அவர், மார்ச், 31ல், சென்னையில் நடந்த, இது தான் ராமராஜ்யம் என்ற நூல் வெளியீட்டு விழாவிலும் பங்கேற்றார். அங்கு, ராமர் பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் நேற்று, சுந்தவள்ளி மீது, நான்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து உள்ளனர். விரைவில், கைது செய்யப்படுவார் என, கூறப்படுகிறது.