பதிவு செய்த நாள்
30
டிச
2018
12:12
இசை நிகழ்ச்சியில், இரண்டு பேர் பாடினால், ரசிகர்களுக்குத் தனி குஷிதான். ஏனெனில், இரட்டையர் கச்சேரிகளில், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. இயலாது. ஒருவர் பாடியதை வேறொருவரின் குரலில் உடனுக்குடன் கேட்டு ஒப்பிட முடியும்.இந்த வகையில், சென்னை, மியூசிக் அகாடமியில் நடந்த, ரஞ்சனி - காயத்ரி சகோதரிகளின் கச்சேரி, மிக சிறப்பாக அமைந்தது.வாசஸ்பதி ராக ஆலாபனையளித்தார் ரஞ்சனி. கோடீஸ்வர ஐயரின், இகபர சுக தாயக என்ற பாடலுக்கான நெரவலை நீயே கதியே க்ருபாநிதியே என்ற இடத்தில், இருவரும் பகிர்ந்து கொண்டனர். காயத்ரி, கானடா ராகம் பாடியதும், இருவரும், சுகி எவ்வரோ என்ற தியாகராஜரின் பாடலை பாடினர். ஆலாபனைகளில், இலக்கணப்படியுள்ள ப்ருகாக்கள், கார்வைகள், நிறுத்தல்கள் முழுமையாக நிறைந்திருந்தன.அன்னபூர்ணே என்ற சாமா ராக தீட்சிதர் பாடலையும், ஸ்பென்ஸர் வேணுகோபாலின் மாளவி ராகத்திலுள்ள, நீ தாசுடனே என்ற பாடல்களை, இவர்கள் பாடி, ரசிகர்களை மகிழ்வித்தனர்.பொதுவாக கச்சேரிகளின் தொடக்கத்திலேயே வரும் கணபதி ஸ்துதியானது நாட்டை அல்லது கவுளை ராகங்களில் அமைந்து விடுவதால், இந்த இரண்டையுமே பொதுவாகவே ராக விஸ்தாரத்துக்கு எடுப்பதில்லை.ஆனால், பல்லவிக்கு இந்த இரண்டு ராகங்களை, ரஞ்சனி -காயத்ரி தேர்வு செய்தது மிக சிறப்பு. இரண்டு ராகங்களுமே நல்ல கர்நாடக ராகங்கள். இவற்றில், த்விராக பல்லவி” ஒன்றை கண்டஜாதி திருபுட தாளத்தில் திஸ்ர நடையில் அமைத்திருந்தன. மாற்றி மாற்றி ராகங்களை, பல்லவியின் சாஹித்ய வடிவிலும், ஸ்வரங்களாகவும் அளித்தது, இவர்களின் சிறப்பம்சம்.வயலினில் சாருமதி ரகுராமன், மிருதங்கத்தில் மனோஜ் சிவா, கடத்தில், சந்திரசேகர சர்மா தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து, நிகழ்ச்சிக்கு மேலும் வலு சேர்த்தனர்.நிகழ்ச்சியை கேட்க வந்த ரசிர்கள் கூட்டம் பற்றி, சொல்லி மாளாது கூட்டம் சொல்லி மாளவில்லை. பலர் நின்று கொண்டும், டிவியில் செய்யப்பட்ட நேரடி ஒளிபரப்பை பார்த்தும், நிகழ்ச்சியை ரசித்தனர். -- எஸ்.சிவகுமார்