பதிவு செய்த நாள்
11
பிப்
2019
12:02
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா, ஐந்து கொடிமரங்களில் கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.மணிமுக்தா நதிக் கரையில் அமைந்துள்ள, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து நந்தி, பஞ்சமூர்த்திகள், ஐந்து பிரகாரம், ஐந்து தேர், பஞ்ச தீர்த்தம் என ஐந்தின் சிறப்புகளாக விளங்குகிறது.
இக்கோவிலில், 12 நாள் நடைபெறும் மாசி மகப்பெருவிழா, பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், ஐந்து கொடிமரங்களில் கொடியேற்றும் வைபவத்துடன் துவங்கியது. நேற்று (பிப்., 10ல்) காலை 9:00 மணியளவில், விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், மூலவர் எதிரிலுள்ள பிரதான கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்து, கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.
இதையடுத்து, பிரதோஷ நந்தி கொடிமரம் மற்றும் வன்னியடி பிரகாரத்திலுள்ள விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் கொடிமரங்கள் என ஐந்து கொடிமரங்களில் கொடியேற்றம் நடந்தது.விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.