பதிவு செய்த நாள்
13
மே
2019
03:05
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆயுள்ஹோமம் செய்து, வழிபாடு நடத்தினார்.
நாகை மாவட்டம் திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் காலசம்ஹாரமூர்த்தி தனி சன்னதியில் எழு ந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மார்க்கண்டேயருக்காக, சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் 60, 70, 80, 90, 100 எட்டியவர்கள் சிறப்புஹோமங்களை செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுளைப்பெறுவார்கள் என்பது ஐதீகம். இதனால் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் ஆயில்ய நட்சத்திரத்துடன் கூடிய நாளான நேற்று ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த தருமபுரம் ஆதீனம் 26ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு 94வது வயது தொடங்கியது. அதனை முன்னிட்டு திருக்கடையூர் கோவிலுக் கு வந்த அவர் நந்தி மண்டபத்தில் நீண்ட ஆயுள் வேண்டி, ஆயுள்ஹோமம் செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டார். நந்தி மேடையில் 16 கலசங்கள் வைக்கப்பட்டு விஸ்வநாத குருக்க ள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மிருத்யுஞ்சயஹோமம், தன்வந்திரி ஹோமம், மகாவிஷ்ணு, மகாலட்சுமி ஹோம ம், துர்காஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் ஆயுள் ஹோமங்களை நடத்தி வைத்தனர். ஹோமத்தின் முடிவில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் தருமை ஆதீனம் குரு மகா சன்னிதானத்திற்கு கலசாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து குருமகாசன்னிதானம் கள்ள விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து மழை வேண்டி சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் தருமபுரம் ஆதீன இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மா சிலாமணி தேசிகர் ஞான சம்பந்த சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.