பதிவு செய்த நாள்
13
ஜூன்
2019
01:06
காஞ்சிபுரம்:ஏகாம்பரர் கோவில் அருகில், புதிதாக கட்டப்பட்டுள்ள பொருட்கள் பாதுகாப்பு அறை கட்டடத்தை, அத்திவரதர் வைபவத்தை காண வரும், வெளியூர் பக்தர்களுக்காக திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மத்திய அரசு, 2014ல், காஞ்சிபுரத்தை பாரம்பரிய நகரமாக அறிவித்து, ஹெரிடேஜ் எனப்படும், புராதன நகர மேம்பாடு மற்றும் புனரமைப்பு திட்டத்தில், 23.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ், ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள், காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும் சாலை வசதி, நடை பாதை, நவீன கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், பக்தர்களின் உடைமைகள், காலணி பாதுகாப்பு அறை கட்டப்பட்டுள்ளன.
இருமாதங்களுக்கு முன், வரதராஜ பெருமாள் கோவில் அருகில், புதிதாக கட்டப்பட்ட நவீன கழிப்பறை திறக்கப்பட்டது. ஆனால், ஏகாம்பரநாதர் கோவில் அருகே கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்படவில்லை.இந்நிலையில், காஞ்சிபுரம் வரதர் கோவிலில், ஜூலை, 1ல், அத்திவரதர் வைபவம் துவங்க உள்ளது. தொடர்ந்து, 48 நாட்கள் நடைபெறும், இந்த வைபவத்தை காண காஞ்சிபுரம் நகருக்குள் வர ஏழு வழிகள் உள்ளன.
இதில், பெரிய காஞ்சிபுரம் வழியாக வரும், வெளியூர் பக்தர்களுக்காக, உடைமைகள் பாதுகாப்பு அறை, நவீன கழிப்பறை, காலணி பாதுகாப்பு அறை உள்ளிட்ட கட்டடங்களை திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.