ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் யானை சுட்டெரிக்கும் வெயிலில் தவிப்பதால் சவர் பாத், செயற்கை குளம் அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் யானை ராமலெட்சுமி, கோயில் நடை திறப்பு, பூஜை, விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கோயில் மூன்றாம் பிரகாரத்தில் யானை நிறுத்தி பராமரித்தனர்.
இங்கு நல்ல சுற்றுசூழல், காற்றோட்டம் இருந்ததால் யானைக்கு எந்த பாதிப்பும் இன்றி உற்சாகமாக இருந்தது. இந்நிலையில் கோயிலுக்குள் பக்தர்கள் புனித நீராட வடக்கு கோபுர வாசல் நுழைவு பகுதியாக மாற்றியதால், கடந்த 8 மாதமாக கோயில் வடக்கு நந்தவனத்தில் தற்காலிகமாக இரும்பு சீட்டில் கூடம் அமைத்து யானையை நிறுத்தி பராமரித்தனர்.
இக்கூடத்தில் மின் மோட்டார் குழாய் மூலம் தினமும் யானை குளிக்க வைத்தாலும், தற் போது சுட்டெரிக்கும் வெயிலில் இரும்பு சீட் கூடத்திற்குள் நிலவும் வெப்ப சலனத்தில் யானை ராம லெட்சுமி தவியாய் தவிக்கிறது. இதனால் யானைக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ள தால், இயற்கை சூழலுடன் கூடிய செயற்கை குளம், சவர் பாத் அமைக்க இந்து அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.