மெய், வாய், கண், காது, மூக்கு என்னும் ஐந்து புலன்களாலும் அறிய முடியாதவர் கடவுள். ஆனால் அவர் நமக்காக பலவித கோலங்களில் காட்சியளிக்கிறார். அவற்றை உருவம், அருவம், அருவுருவம் என மூன்றாகச் சொல்வர்.
பக்தியின் முதல்படியில் இருப்பவர்களுக்காகவே கடவுள் உருவம் தாங்கி நிற்கிறார். பக்தனின் மனம் எப்படி விரும்புகிறதோ, அந்த உருவத்திலேயே அவரும் அருள்புரிகிறார். அப்படி வழிபடுவதையே ‘‘இஷ்ட தெய் வழிபாடு’’ என்பர். அரிசி என்னும் ஒரு பொருள் அவரவர் விருப்பத்திற்கேற்ப தயிர்ச்சாதம், புளியோதரை, தேங்காய்சாதம், எலுமிச்சை சாதம் என பலவிதமாக சமைக்கப்படுவது போல, ஒரே கடவுள் வழிபடுவோரின் மனதிற்கேற்ப பல வடிவங்களைப் பெறுகிறார்.