பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
01:07
கும்பகோணம் அருகிலுள்ள திருமங்கலக்குடி பிராணநாதர் கோயிலில் மங்களாம்பிகை அருள்புரிகிறாள். இந்த அம்மனை தரிசிப்பவர்கள் மாங்கல்ய பலத்துடன் வாழும் பேறு பெறுவர். ஒருசமயம் காலமாமுனிவர் விதிப்படி தொழுநோயால் அவதிப்பட வேண்டியிருந்தது. ஆனால் நவக்கிரகங்கள் அதை தடுத்ததால் பிரம்மாவின் சாபத்திற்கு ஆளாயினர். அவர்கள் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளிய சிவனை நோக்கித் தவமிருந்து விமோசனம் பெற்றனர்.
முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தவர் அலைவாணர். மன்னருக்கு தெரியாமல் இத்தலத்தில் இருந்த சுயம்பு லிங்கத்திற்கு வரிப்பணத்தில் கோயிலைக் கட்டினார். விஷயம் அறிந்த மன்னர் அமைச்சருக்கு மரண தண்டனை விதித்தார். அலைவாணர் தன் மரணத்துக்குப் பின்னர் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் செல்ல கேட்டிருந்ததால் அங்கேயே எடுத்துச் சென்றனர். இதனிடையே அமைச்சரின் மனைவி மாங்கல்ய பாக்கியம் அருளும்படி இத்தல அம்பிகையிடம் சரணடைந்தாள்.
அம்பிகையும் அமைச்சருக்கு உயிர்பிச்சை தரும்படி சிவனிடம் முறையிட அவரும் ஏற்றார். அமைச்சருக்கு உயிர் கொடுத்ததால் சுவாமிக்கு ‘பிராண நாதர்’ என்றும், அம்மனுக்கு ‘மங்களாம்பிகை’ என்றும் பெயர் ஏற்பட்டது.
இங்கு சிவலிங்கத்தின் பாணம், ஆவுடையாரை விட உயரமாக இருக்கும். நவக்கிரகங்கள் எருக்க இலையில் தயிர்சாதம் படைத்து சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம். ஞாயிறு தோறும் உச்சிகால பூஜையின் போது உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு படைக்கின்றனர். பிதுர் தோஷம் உள்ளவர்கள் தயிர்ச்சாதம் படைத்து வழிபட்டால் தோஷம் நீங்கும். நடராஜர் சன்னதியிலுள்ள மரகத லிங்கத்திற்கு தினமும் உச்சிக்காலத்தில் பூஜை செய்கின்றனர். மங்கள விமானம், மங்களாம்பிகை, மங்கள விநாயகர், மங்கள தீர்த்தம், திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. எனவே இத்தலம் ‘பஞ்ச மங்கள ேக்ஷத்ரம்’ எனப்படுகிறது. மங்காளாம்பிகை தெற்கு நோக்கி அருள்புரிகிறாள். அம்மனின் வலது கையில் சாத்திய தாலிக்கயிறுகளை பிரசாதமாக தருகின்றனர். பெண்கள் இதை அணிந்தால் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும்.
செல்வது எப்படி: கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ., துாரத்தில் ஆடுதுறை. அங்கிருந்து 3 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடிவெள்ளி, தைவெள்ளி, நவராத்திரி, மகாசிவராத்திரி