பதிவு செய்த நாள்
17
ஜூலை
2020
01:07
ஆடியில் அம்பிகை வழிபாடு ஊரெங்கும் களைகட்டும். ஆதிபராசக்தியான அவளே இந்த உலகையே ஆட்சி செய்கிறாள். இந்த தருணத்தில் பராசக்தி என்பதற்குரிய விளக்கத்தை தெரிந்து கொள்வோமா!
ஆதி காலத்தில் ஒளி தோன்றியது. அந்த ஒளியில் ஆதிசக்தியான அம்பிகை தோன்றினாள். படைக்கும் கடவுளான பிரம்மாவையும், காக்கும் கடவுளாக மகாவிஷ்ணுவையும், அழிக்கும் கடவுளாக சிவனையும் படைத்தவள் சக்தியே. அந்த ஆதிசக்தியே கல்விக்குரிய கலைமகளாக, செல்வத்திற்குரிய அலைமகளாக, வீரத்திற்குரிய மலைமகளாகவும் அருள்புரிகிறாள். தாய்க்கெல்லாம் தாயாக இருக்கும் இந்த சக்தி உயர்ந்தவள் என்பதாலேயே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதன்மையாக வைத்தனர் நம் முன்னோர்கள். ‘அன்னையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை’ என்னும் சொல் வழக்கும் இதனால் தான் உண்டானது. இந்த ஆதிசக்தியை பராசக்தி என்றும் குறிப்பிடுவர். ‘பரா’ என்றால் அளவிட முடியாதது என்பது பொருள். அளவிடவே முடியாத சக்தியின் இருப்பிடமாகத் திகழ்வதால் பராசக்தி எனப்பட்டாள். இவளே ஒவ்வொரு திருத்தலங்களிலும் ஒவ்வொரு திருநாமங்களில் வழங்கப்படுகிறாள். மதுரையில் மீனாட்சியாக, காஞ்சியில் காமாட்சியாக, காசியில் விசாலாட்சியாக இருப்பவள் அவளே. மீன் போல கண் இமைக்காமல் இருந்து தன் கடைக்கண்களால் உயிர்களை காத்து கரை சேர்க்கிறாள் மீனாட்சி. தன்னை நாடி வரும் பக்தர்களின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுபவளாக காஞ்சியில் காமாட்சி என பெயர் பெறுகிறாள். விசாலமான பார்வையால் உயிர்களை எல்லாம் கடைத்தேற்றுவதால் விசாலாட்சி என காசியில் அழைக்கப்படுகிறாள். அவளை வணங்கும்போது,
‘‘தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!’’
என்று அம்பிகையின் திருவடிகளை ஆடியில் பாடி மகிழ்வோம்.