விதேகபுரியை ஜனகமகாராஜா ஆண்டு வந்த காலம் அது. விதேகம் என்ற சொல்லில் இருந்தே வைதேகி என்ற சொல் வந்தது. இதனால், ஜனகரின் மகள் சீதைக்கு வைதேகி என்ற பெயர் வந்தது. ஒருநாள், அஷ்டாவக்கிரர் என்ற பிரம்மஞானி ஜனகரின் அவைக்கு விஜயம் செய்தார். அஷ்டாவக்கிரர் என்றால் எட்டுக் கோணல் உடையவர் என்று பொருள். ஆம்... அவரது உடம்பு 8 இடங்களில் வளைந்திருக்கும். ஊனமுற்ற அஷ்டா வக்கிரரை கண்ட உடலுடன் அவைக்கு வந்த அவரை நோக்கி, அவையில் இருந்த பெரியவர்கள்கூட சிரித்தனர். ஜனகருக்கு அஷ்டாவக்கிரரின் மகிமை தெரியும். அவர் அஷ்டாவக்கிரரை அன்புடன் வரவேற்றார்.
சுவாமி! தங்கள் மகிமை அறியாமல், அவையிலுள்ளவர்கள் உங்களைப் பார்த்து சிரித்ததற்காக வருந்துகிறேன், என மன்னிப்பு கேட்டார். ஞானிகள் கோபப்படுவதில்லை. இந்த செயலுக்காக அஷ்டாவக்கிரரும் கோபிக்கவில்லை. ஜனகரும் தன் அவையோரை கோபிக்கவில்லை. ஏனெனில், ஜனகரும் கோபத்தை வென்ற ராஜதுறவியாகவே இருந்தார். அவரும் ஞானி என்றே பிறரால் மதிக்கப்பட்டார். அஷ்டாவக்கிரர் ஜனகரிடம், இதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டாம் ஜனகரே! உலக மக்கள் வெளித்தோற்றத்தைக் கண்டு தான் எள்ளி நகை யாடுகிறார்கள். அவர்களுக்கு தோலும், தோற்றமுமேமுக்கியமாக இருக்கிறது. உள்ளழகைப் பார்ப்பதில்லை, என்றார். இவர்களது பேச்சைக் கேட்டு அவையோர் தலைகுனிந்தனர். இந்த நிகழ்ச்சி ஜனகரின் அவையோர் மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன்பின் வந்த காலத்தில், அவரது அவையில் இதுபோன்ற சம்பவம் துளியளவும் நடக்கவில்லை.