பதிவு செய்த நாள்
17
மே
2012
12:05
குருத்ருகன் என்னும் பெயருள்ள வேடன் குடும்பம் ஒரு சமயம் பசிக்கொடுமையால் துன்பப்பட்டது. வேட்டையிலும் விலங்குகள் கிடைக்கவில்லை. அன்று பொழுது விடிந்ததும் அவனது குடும்பத்தினர் எப்படியாவது வேட்டையாடி அன்றைய உணவுக்கு வழி செய்யுமாறு குருத்ருகனிடம் வலியுறுத்தினர். அன்று சிவராத்திரி தினம். வேடன் வில் அம்புடன் காட்டிற்குள் சென்றான். பொழுது சாயும் நேரம் வந்துவிட்டது. வெறும் கையுடன் வீடு திரும்ப அவனுக்கு விருப்பம் இல்லை. வீட்டில் தன்னை எதிர்பார்த்துப் பசியுடன் அனைவரும் இருப்பார்கள் என்பதை எண்ணி வேதனை அடைந்தான். ஒரு குளத்தைக் கண்டு அங்கு சென்று இரு கைகளாலும் தண்ணீரை வாரிப் பருகினான். குடுவையில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு ஒரு வில்வ மரத்தில் ஏறிப் பதுங்கிக் கொண்டிருந்தான். அன்றிரவு பசியோடு தூக்கம் இல்லாமல் வேட்டைக்காக காத்திருந்தான். முதல் ஜாமம் வந்தது. பெண்மான் ஒன்று நீர் அருந்த அங்கே வந்தது. வேடன் மகிழ்ச்சி அடைந்து வில்லில் அம்பைப் பொருத்தினான். அந்த அசைவில் அவனிடமிருந்த குடுவையிலிருந்து நீர் தளும்பி ஒரு துளிநீர் மரத்தினடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தது. அதே சமயம் அவன் அமர்ந்திருந்த கிளையின் அசைவால் அதிலிருந்து ஓரிரு வில்வ இலைகள் உதிர்ந்து சிவலிங்கத்தின் மீது விழுந்தது. கிளை அசைவால் ஏற்பட்ட ஒலியைக் கேட்ட பெண்மான் வேடனை நோக்கி, வேடனே! நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டது. மானே ! என் குடும்பம் கடும் பசியால் துடிக்கிறது. அவர்களுக்காக உணவு தேடி வந்த எனக்கு ஒரு சிறிய பறவை கூடக் கிடைக்கவில்லை. எப்படியும் தாக சாந்திக்காக எந்த மிருகமாவது குளத்திற்கு வருமென்று காத்திருந்தேன். நீ இங்கு வந்தாய். உன்னைக் கொன்று கொண்டு சென்று வீட்டிலுள்ளவர்களின் பசியைப் போக்கப் போகிறேன் என்றான்.
வேடனே! என் மாமிசம் கொண்டு உனது குடும்பம் பசியாறப் போகிறார்கள் என்றால் அது நான் செய்த புண்ணியம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரோபகாரம் செய்வதால் அடையும் பலனைப்பற்றி எவ்வளவோ கூறுகிறார்கள். எனது குட்டிகள் இன்னும் இரை தேடும் அளவிற்கு வளரவில்லை. அவற்றைத் தவிக்க விட வேண்டியுள்ளது. எனக்குச் சிறிது நேரம் அவகாசம் தந்தால் எனது குட்டிகளுக்கு உதவிசெய்ய ஒரு பெண்மானை என் கணவனுக்கு துணையாக்கி விட்டுத் திரும்பி வருவேன். அதன்பின் உன் விருப்பப்படி செய்யலாம் என்று மான் கூறியது. மானின் வார்த்தைகளை கேட்டு வேடன் சிரித்தான். சிரிப்பது ஏன்? என்று மான் கேட்டது. இவ்வளவு சாமார்த்தியமாக நீ பொய் கூறுவதைக் கேட்கும் போது சிரிக்காமல் என்ன செய்ய முடியும். உன் பேச்சை நம்பி உன்னை விட்டு விட்டுச் சென்றால் நீ திரும்பியா வரப் போகிறாய்? என்றான் வேடன். வேடன் உறுதியாக கூறிய மானின் வார்த்தைகளை முழுமையாக நம்பிச் சென்றுவர அனுமதித்தான். மான் நீர் அருந்திவிட்டு வேகமாகச் சென்றது. இரண்டாவது சாம வேளையில் வேறொரு பெண்மான் அங்கு வந்தது. அந்தமான் முதல் ஜாமத்தில் வந்திருந்த மானின் சகோதரி. முன் மான் - இன்னும் திரும்பி வரவில்லையே என்று தேடி வந்தது. அதனைக் கண்டதும் வேடன் முன்போலவே வில்லை எடுத்தான். முன்போலவே அவன் வைத்திருந்த பாத்திரத்திலிருந்து சில துளிகள் நீரும், கிளையிலிருந்து வில்வ தளமும் சிவலிங்கத்தின் மீது விழுந்தன. முன்பு வந்த மான் கூறியதுபோலவே இந்த மானும் கூறியது. வேடனும் நம்பி அதை விட்டுவிட்டான்.
மூன்றாம் ஜாமம் தொடங்கியது. குளக்கரைக்கு வந்து சென்ற இரண்டு பெண்மான்களின் கணவனான ஆண்மான் அவற்றைத் தேடிக்கொண்டு அங்கே வந்தது. மிகவும் கொழுத்திருந்த அதனைக் கண்டதும் இன்றைக்கு நல்ல வேட்டை என்று மகிழ்ந்த வேடன் வில்லை எடுத்து அம்பைப் பூட்டினான். அப்போதும் அவனுடைய குடுவையிலிருந்து நீர் அசைவினால் தளும்பி ஒரு துளி சிவலிங்கத்தின் மீது விழுந்தது. மரக்கிளையிலிருந்து வில்வதளமும் அதன்மேல் விழுந்தன. வேடன் அம்பு எய்ய இருப்பதைக் கண்ட ஆண்மான், வேடனே! என்னைக் கொல்லப்போகிறாயா? என்று கேட்டது. வேடன் ஆம் என்று கூறினான். முன்பு இரண்டு பெண்மான்கள் கூறியதைப் போன்றே ஆண் மானும் காரணம் கூறியது. ஆனால் வேடன் இம்முறை சம்மதிக்கவில்லை. மானே முன்பு இரண்டு பெண்மான்கள் சொல்லிவிட்டுச் சென்றன அவை சொன்னபடி வரவில்லை. உன்னிடமும் ஏமாற நான் தயாரில்லை என்று கூறினான். வேடனே! உன்னை ஏமாற்றிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. எப்படி வேண்டுமானாலும் சத்தியப் பிரமாணம் செய்கிறேன் என்றது. வேடன் அந்த மானையும் சென்றுவர அனுமதித்தான். மான் தனது இருப்பிடம் சென்றது. முன்னரே இரண்டு பெண் மான்களும் ஆண் மானுக்காக காத்திருந்தன. அது வந்ததும் மூத்த பெண்மான் தனது சகோதரியான பெண்மானிடம், சகோதரியே! நீ இங்கிருந்து கொண்டு நமது குட்டிகளையும், ஆண்மானையும் பாதுகாத்துக்கொள். நான் முதலில் வாக்களித்ததால் வேடனுக்கு இரையாகச் செல்கிறேன் என்று கூறியது.
இளையமான் அதனை மறுத்து, அது முறையல்ல. உங்களுக்குப் பணிவிடை செய்வதே எனது வேலை. நீ இங்கிருந்து ஆண்மானையும் குட்டிகளையும் கவனித்துக்கொள். நான் போகிறேன் என்றது. அதற்கு ஆண்மான் தானே செல்வதாகக் கூறியது. நீண்ட யோசனைகள் செய்தபின் தங்கள் மூன்று குட்டிகளைப் பாதுகாக்கும்படி வேறொரு மானிடம் ஒப்படைத்துவிட்டு மூன்று மான்களும் வேடன் இருக்குமிடம் வந்தன. இதற்குள் மூன்றாம் ஜாமம் முடிந்து இறுதி ஜாமம் வந்து விட்டது. ஏமாந்து விட்டதாக எண்ணி வருந்திய வேடன் மூன்று மான்களும் வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான். அப்போதும் அவன் வைத்திருந்த குடுவையிலிருந்த நீர்த்துளியும், வில்வதளங்களும் சிவலிங்கத்தின் மேல் விழுந்தன. அன்றைய தினம் சிவராத்திரி ஆகையால் சிவபெருமானை நான்கு ஜாமங்களிலும் உபவாசம் இருந்து விழிமூடாமல் வழிபாடு செய்தமையால் அதற்குரிய பலன் அவனை வந்து சேர்ந்து அக்கணமே வேடனுக்கு நல்ல புத்தி வந்துவிட்டது. மிருகங்களின் குணத்தை உணர்ந்து தெளிந்து கையிலிருந்த வில்லை எடுத்து ஒடித்து எறிந்தான். மான்களைப் பார்த்து வேடன், தெளிவு கிடைத்தது. நீங்கள் திரும்பிச் செல்லுங்கள் என்று கனிவுடன் கூறினான்.
அந்த வேளையில் வானத்திலிருந்து ஐந்து முகத்தோடு இறைவன் கயிலாய நாதர் அங்கே காட்சியளித்தார். அவர் வேடனைப் பார்த்து, அன்பனே! தெரிந்தோ தெரியாமலோ சிவராத்திரி வழிபாடு செய்தவர்கள் எத்தகைய பாவங்கள் செய்தவர்கள் என்றாலும் மோட்சத்தை அடைவார்கள். நான்கு ஜாமங்களிலும் உன்னால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு வில்வதளத்தால் அர்ச்சிக்கப்பட்டேன். நீ வேண்டும் வரத்தைத் தயங்காமல் கேள் என்றார். பிரபோ ! தங்கள் திவ்விய தரிசனம் கிடைத்த பிறகு எனக்கு வேறெதும் வேண்டாம். என் பாவங்கள் அகலத் தாங்கள் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினான். இதைக்கேட்ட சிவபெருமான் பேருவகை அடைந்து வேடனைப் பார்த்து, வேடனே! நீ இன்று முதல் குகன் என்ற திருநாமத்தோடு திகழ்வாய். உன் புகழ் எங்கெங்கும் பரவும். அனைவரும் உன்னைப் போற்றுவர். அயோத்தி மன்னன் தசரதனின் மைந்தனாகத் திருமால் பிறந்து, அவர் இராமபிரானாகத் தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வனத்துக்கு வருவார். அவரது நட்பால் உனக்கு மேன்மை கிடைக்கும் என்று திருவாய் மலர்ந்தருளினார். குருத்ருகன் சிவராத்திரி பூஜையால் குகனானான்.