பதிவு செய்த நாள்
17
மே
2012
01:05
ராவணன் மண்டோதரியின் மகனாகப் பிறந்தவன், மேகநாதன். இந்திரனையே வென்றவன் என்பதால் இந்திரஜித் ஆனான். ஓர் நாள் அந்தி மயங்கும் வேளையில் அத்தாணி மண்டபத்தில் அமர்ந்திருந்தான் இந்திரஜித். அருகில் அவள் இளம் மனைவி சுலோசனா. இந்திரனை அவன் வென்ற பராக்கிரமத்தைப் பற்றி அவள் கேட்டபோது, இந்திரஜித் சொன்னான். தெய்வ பலம் என்பது தனியொரு மனிதனின் உடமை அல்ல, கண்ணே! மூன்று கடவுளரையும் வழிபட்டு, அவர்களுடைய அருள் பார்வை பெற்ற பெருமை எனக்கும் என் குலத்துக்கும் உண்டு. எத்தனையோ அஸ்திரங்களைப் பெற்றிருக்கிறேன், நான்! சிவபெருமானிடமிருந்து ஸமாதி என்னும் அஸ்திரம் பெற்று, அதன் சக்தியால் இருந்த இடத்திலேயே மறையும் ஆற்றல் பெற்றிருக்கிறேன். இந்திரனையே பணியச் செய்திருக்கிறேன். அவன் என்னிடம் சரணடைந்த பின், அவனை மன்னித்து, அவன் அதே பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதித்திருக்கிறேன். ஸமாதி அஸ்திரத்தின் மகிமையை நீயும் நேரில் காண விரும்பினால், சொல்! இப்போதே மாயமாய் மறைந்து... வேண்டாம், வேண்டாம். பல நாட்களுக்குப் பிறகு இன்றுதான் தனிமையில் அமர்ந்து களிப்பாகக் பேசிக் கொண்டிருக்கிறோம். அதையும் கெடுப்பதா! இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தான் வீதியில் பறை ஒலி முழங்கியது. அறிவிப்பாளன் உரத்த குரலில், நாளை போருக்கு ராவணரே தலைமை தாங்கிச் செல்லப் போகிறார்! என்று அறிவித்தான். இந்திரஜித் பரபரப்புடன், நான் இருக்க, அவர் ஏன்?! என்று கூறி, புயலெனப் புறப்பட்டான்.
போர்க்கோலம் பூண்டு ராவணனிடம் சென்று, தானே படை நடத்திச் செல்வதாகக் கூறினான். அன்றைய போர் வரையில் தோல்வியையும் துயரத்தையுமே கண்ட ராவணேசுவரன் இதற்கு உடனே சம்மதிக்கவில்லை. சுலோசனாவும் தாய் மண்டோதரியும் இந்திரஜித்தே படைத் தலைமை ஏற்கட்டும் என்று வற்புறுத்த, அவன் படைத் தலைவன் ஆனான். மாலைக்குள் பகைவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வேன், சுலோசனா! வெற்றி வாகை சூடி வரும் என்னை வரவேற்கத் தயாராக இரு! என்று மனைவியிடம் கூறி, விடைபெற்றான். கணவனின் வீரத்தில் பலத்த நம்பிக்கை கொண்ட சுலோசனா, அவன் வெற்றித் திருமுகத்துடன் திரும்பி வரும் நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அருகிலேயே அவள் தோழி வாஸந்தி. மணாளன் இன்னமும் திரும்பவில்லையே என்று அவள் நெடுமூச்சும் குறுமூச்சும் விட்டு, நிலை கொள்ளாமல் தவித்தாள். ஒரு வேளை அவரைச் சிறைப்பிடித்திருப்பார்களோ? தோழியின் கேள்வி சுலோசனாவின் இதயத்தை சுக்கு நூறாக்கியது. அவள் பெண்மை விழித்துக் கொண்டது. வீரத்தில் பெண் ஆணுக்கு இளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்க மனம் துடிதுடித்தது. நிலைக் கண்ணாடி எதிரே போய் நின்றாள். போர்க்கோலம் பூண்டாலும் பெண்மை அழகுடனேயே பூணும் என்பதை நிரூபிப்பதே போல, ஆடையை வரிந்து கட்டிக் கொண்டு, மதர்த்த மார்பகத்திலே கவசம் பூண்டு போர்க்களப் பெருந்தேவியாக உருமாறினாள்.
இலங்கேசுவரனின் மருமகள், இந்திரஜித்தின் மனைவி என்கிற இறுமாப்புடன் வெளியே வந்தாள். குதிரை மீது தாவி ஏறி அமர்ந்து அந்த ராமனை வெற்றி கொண்டு இந்திரஜித்தை மீட்டு வருவேன் என்று சபதம் எடுத்துவிட்டு. ஆவேசமாகக் புறப்பட்டாள். பாசறை வாசலில் நின்ற அனுமன், தன் எதிரே போர்க்கோலம் பூண்ட வீராங்கனையைக் கண்டதும் வியந்து போனார். இரவோடு இரவாக இப்படி ஒரு பெண் புலி தாக்குவதா? என்று வெகுண்டார். பாசறைக்குள் புக முயன்ற அவளைத் தடுத்தார். தன்னோடு போரிட்டு வெற்றி கண்ட பின்னரே, உள்ளே புக முடியும் என்று சூளுரைத்தார். ஆனால் சுலோசனாவின் சொற்கள் சுடச்சுட வந்தன. என்னை என்ன, சாதாரணப் பெண் என எண்ணிவிட்டாயா? இலங்கேஸ்வரனின் மருமகள் நான்; இந்திரஜித்தின் மனைவி! என்னோடு போரிட நீ யார்? வரச் சொல், அந்த ராமனை! என்றாள், சீற்றத்துடன்! ஒரு பெண்ணின் வீராவேசத்தைக் கண்ட அனுமனே அதிர்ந்து போனார். சுலோசனா சொன்னாள். உன் ராமன் உண்மை வீரன் என்றால், என்னை எதிர்த்துப் போரிட முன்வரட்டும். இல்லையேல், வாளைப் போட்டுவிட்டு, இலங்கையை விட்டு வெளியேறட்டும்! என்றாள். சொல்லின் செல்வரான அனுமனே அவளுக்கு மறுமொழி சொல்ல முடியாமல் நின்றார். பின்னர், பாசறைக்குள் சென்று ராமனிடம் விஷயத்தைக் கூறினார்.
ராமன் ஆச்சரியத்துடன், இந்திரஜித்தின் மனைவி இப்படியான ஓர் வீர வனிதையா! இரவென்றும் பாராமல் கணவனை விடுவிக்க வந்த அந்த கற்பரசியிடம் நான் போரிடாமலே தோற்றேன் என்று சொல்! அந்தத் தோல்வியில் எனக்குப் பெருமைதான்! என்றார். போர்க்களத்தில் லட்சுமணன் இந்திரஜித்தை எதிர்த்துப் போரிட்டான். ஆயினும் வெற்றி; அல்லது வீர மரணம் என்ற உறுதியோடு பொருதிய இந்திரஜித்தை லட்சுமணனால் எளிதில் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் இந்திரஜித் - லட்சுமணனை வெல்ல வேண்டுமானால் தனக்கு இன்னும் சற்று வலிமை தேவை என்று கருதி நிகும்பலை என்ற யாகம் செய்ய, திடீரென மாயமாய் மறைந்தான். அவன் நிகும்பலை யாகம் செய்து திரும்பினால், அதன் பின் அவனைக் களத்தில் போரிட்டு வெல்வது கடினம் என்று புரிந்து கொண்டான் லட்சுமணன். உடனே யாகசாலைக்குச் சென்று, அங்கே நிராயுதபாணியாக இருந்த இந்திரஜித் மீது பாய்ந்து லட்சுமணன் சண்டையிட்டான். இருவருக்கும் கடுமையான மற்போர். இறுதியில் வீரமரணம் எய்தினான், இந்திரஜித். இந்திரஜித் மாண்டான் என அறிந்து மண்டோதரி கதறிப் புலம்பினாள். கணவன் ராவணனை நோக்கி, நீ மாற்றான் மனை நோக்காமல் இருந்திருந்தால் இந்த விபரீதம் நடந்திருக்குமா? என்று சீறினாள்.
களத்தில் கணவனைக் காண வந்த சுலோசனா, கடைசி முறையாகக்கூட அவன் முகத்தைக் காணக் கொடுத்து வைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் அவன் நிகும்பலை யாகம் செய்யப் போயிருந்தான். அவள் காதல் வாழ்க்கை தொடர இயலாமல் ஊழ்வினை கெடுத்துவிட்டது. ஆயினும், இந்திரஜித்தை வென்ற லட்சுமணன் பின்னர், சுலோசனா தன் மகள் என்கிற உண்மை அறிந்து நிலை குலைந்து போனான். ஆம், ஆதிசேஷனின் அவதாரம் லட்சுமணன். ஆதிசேஷனின் மகள் சுலோசனா. மாப்பிள்ளை இந்திரஜித். என் மகளின் மாங்கல்யத்தை நானே பறித்துவிட்டேனா? அவளை கைம் பெண்ணாக்கிய பாவி நானேதானா! என்று மணம் கலங்கினான் லட்சுமணன். மாற்று வழி சொல்லி தேற்று மொழி கூற யாரால் இயலும்? மேகநாதனாகிய இந்திரஜித் தன் தந்தைக்கு ஆற்றும் உதவியை ஆற்றி, மரணத்திலும் பெருமையுற்றான்!