விசாகம் 4ம் பாதம் : மூன்றாம் இடமாகிய தைரிய ஸ்தானம் வலுப்பெற்றுக் காணப்படுவதால் மனதிற்குச் சரி என்று தோன்றும் விஷயங்களை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். அடுத்தவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் அதே நேரத்தில் தன்விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்வதில் உறுதியுடன் செயல்படுவீர்கள். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்ரன் பொருள்வரவிற்கு குறையில்லா நிலையை உண்டாக்குவார். மனதின் மூலையில் வருத்தம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது சதா புன்னகையை முகத்தில் தவழவிடுவீர்கள். மனதில் தியாக சிந்தனைகளையும், விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையையும் உருவாகும். அதே நேரம், மற்றவர்கள் மனம் கோணக்கூடாது என்ற எண்ணத்தில் எல்லா விஷயங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டால் பின்னர் நீங்கள்தான் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. வண்டி, வாகனங்களால் சிறிது செலவினங்களுக்கு ஆளாவீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்திற்கிணங்க வெளியூர் பிரயாணங்களுக்கும், சுற்றுலா செல்வதற்கும் திட்டமிட வேண்டியிருக்கும். பிரயாணத்தின்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. கடன்சுமைகள் கட்டுக்குள் இருந்து வரும். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி கண்டு வருவீர்கள். தொழில் முறையில் திறமையான பேச்சினை வெளிப்படுத்தி சிறப்பான தனலாபத்தினைக் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வார்கள். நீண்ட நாள் விருப்பம் ஒன்று பிப். முதல் வாரத்தில் நிறைவேறும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சிகளில் லேசான சுணக்கம் காண நேரிடும். புதிய நண்பர்கள் உதவிகரமாய் செயல்படுவார்கள். நன்மை தரும் மாதம் இது.
அனுஷம் : ராசிநாதன் செவ்வாய் மற்றும் நட்சத்திர அதிபதி சனி ஆகியோரின் ஆட்சி பலம் இந்த மாதத்தில் உங்களுக்கு கூடுதல் வலிமையைத் தருகிறது. மனதினில் தர்ம சிந்தனைகள் தோன்றும். தான, தருமங்களைச் செய்ய மனம் விரும்பும். பொருளாதார நிலை திருப்தி தரும் வகையில் இருப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை தவழும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். உங்கள் பேச்சுக்கள் மற்றவர்களுக்கு மன மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும். மூன்றாம் இடமாகிய தைரிய ஸ்தானம் வலுப்பெற்றுக் காணப்படுவதால் மன உறுதியுடன் செயல்பட்டு இறங்கிய காரியத்தில் வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தோரால் உதவிகரமான செயல்கள் நடைபெறும். ருசியான உணவு வகைகளை மனம் நாடும். வண்டி வாகனங்களால் செலவினங்களை சந்திக்க நேரிடும். அநாவசிய பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான வாய்ப்புகள் உண்டாகும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன்பிரச்னைகள் தலைதூக்கும் வாய்ப்பு உள்ளதால் கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் லேசான கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தொழில் முறையில் உங்களின் பேச்சுத் திறமையின் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்களின் நிலை அலுவலகத்தில் உயரும். வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது. மின்சார சாதனங்களை கையாளும்போது அதிக எச்சரிக்கை தேவை. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் முன்னோர் வழிபாடு ஒன்றினை செய்து முடிக்க கால நேரம் கூடி வரும். குடும்பத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். எத்தனை சோதனை வந்தாலும் மனோ தைரியத்துடன் செயல்பட்டு இறங்கிய காரியத்தில் வெற்றி காண்பீர்கள். நன்மை தரும் மாதம் இது.
பரிகாரம் : சரஸ்வதி தேவி வழிபாடு நன்மை தரும். சந்திராஷ்டமம் : ஜன. 26
கேட்டை : இந்த மாத கிரக நிலை உங்களை பொதுநலக் காரியங்களில் ஈடுபடச் செய்யும். சேவை மனப்பான்மை அதிகரிக்கும். அடுத்தவர்களின் நலனுக்காக அதிகம் பாடுபடுவீர்கள். எப்பொழுதும் சிக்கனம் பார்க்கும் நீங்கள் இந்த மாதத்தில் தான தரும காரியங்களுக்கு அதிகம் செலவழிப்பீர்கள். உடன்பிறந்தோரால் உபயோகம் உண்டாகும். இந்தவாரத்தில் தைரிய ஸ்தானம் ஆகிய மூன்றாம் இடம் மிகவும் வலுப்பெற்று இருப்பதால் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தோருடன் இணைந்து சொத்துப் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள். வாய்க்கு ருசியான உணவு வகைகளை உண்பதில் அலாதி பிரியம் கொள்வீர்கள். வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. முடிந்த வரை வாகனங்களை இயக்குவதைத் தவிர்க்கவும். வீட்டினில் ஆல்ட்ரேஷன் வேலைகளைச் செய்ய முற்பட்டு அதிக செலவிற்கு ஆளாவீர்கள். ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும் போதே மனம் வேறெங்கோ அலைபாய்வதைத் தடுக்க முடியாது. கடன்பிரச்னைகளில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். வாழ்க்கைத்துணையுடன் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கலாம். உத்யோக முறையில் உங்கள் கருத்துக்கள் அலுவலகத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகும். வியாபாரிகள் குறைந்த லாபத்திற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு தோன்றுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இயந்திரங்களை இயக்கும்போது கவனம் தேவை. அவ்வப்போது தோன்றும் மனக்குழப்பங்களினால் தொழில் முறையில் சிறிது சுணக்கம் தோன்றலாம். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். நற்பலன்கள் உண்டாகும் மாதம் இது.
பரிகாரம் : மாரியம்மனை வணங்கி வாருங்கள். சந்திராஷ்டமம் : ஜன. 26, 27
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »