பதிவு செய்த நாள்
22
ஆக
2012
05:08
சூரபத்மன், சிங்கமுகன், தாருகன் மூவரும் அசுரர்கள். இவர்களின் சகோதரி அஜமுகி. அஜம் என்றால் ஆடு. ஆட்டின் முகம் பெற்றிருந்ததால் அஜமுகி எனப்பட்டாள். இந்த அரக்கிக்கு வேடிக்கையான பொழுதுபோக்கு, முனிவர்கள் செய்யும் தவத்தைக் கலைப்பது; நிஷ்டையில் இருக்கும் ரிஷிகளை எட்டி உதைப்பது; எக்காளச் சிரிப்புடன் நக்கல், நையாண்டி, கிண்டல், கேலி, எள்ளல், ஏகடியம், இன்னபிற, இன்னபிற... இடைஞ்சல் இடையூறுகள் செய்வது. அஜமுகியும் நாளொரு மேனியும் பொழுதொரு பூதமும் போல் வளர்ந்து. காலதேவனின் கைங்கர்யத்தால் மணப்பருவத்தை அடைந்தாள். கட்டழகியானாலும் இந்தக் காட்டழகியின் கெட்ட குணம் பட்டுப் போகவில்லை. பக்கத்தில் ஒரு ஆசிரமம் அமைத்து அங்கே தவம் மேற்கொண்டிருந்த துர்வாச முனிவரிடம் அடிக்கடி போய் தகராறு செய்தாள். நிஷ்டை கலைந்த முனிவர் அடியே ராட்சசீ என்று ஆவேசமாக எழுந்தார். ஏன் என் தவத்தைக் கலைத்தாய்! என் கோபத்தால் சாபம் பெறாதே! போ, இங்கிருந்து! என்று சீறினார், தங்களை மணந்து நற்புதல்வர்களைப் பெற வேண்டும். அதுதான் எனது ஆசை! என்றாள் அஜமுகி. தவமிருந்து பெற்ற புதல்வன் தான் தவப் புதல்வனா? தவம் இருப்பவர் மூலம் பெற்ற பிள்ளையும் தவப்புதல்வன்தான் என்று அவள் எண்ணி விட்டாளோ, என்னவோ?
அஜமுகி சூரபத்மனின் சகோதரி என்பதை மகரிஷி அறிந்திருந்ததால், அஜமுகியின் விருப்பத்துக்கு மறுப்பு தெரிவித்தார். அஜமுகியோ அவருக்குப் பலவிதமான தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்து வந்தாள், முடிவில், அந்த அரக்கியின் விருப்பத்துக்கு இணங்கினார், மகரிஷி. அவர்களுக்கு வாதாபி, இல்வலன் என்ற இரு பிள்ளைகள் பிறந்தார்கள். வாதாபி தன் தாயைப் போல ஆட்டு முகத்துடன் பிறந்தான். இல்வலன் தந்தை துர்வாசரைப் போல இருந்தான். இவனை வில்வலன் என்றும் சொல்வார்கள். பிள்ளைகள் தந்தையிடம் அவரது தவபலத்தையெல்லாம் தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். துர்வாசரின் தவவலிமையைத் தாங்கள் பெற்றுக்கொண்டு, நாசகாரத் தலைவர்களாக ஆக வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்காத துர்வாசர், அடே, அரக்கி பெற்ற மக்களே! அநீதி வழியில் செல்லும் நீங்கள் அகத்திய முனிவரால் அழிபடுவீர்களாக என்று சாபம் இட்டுவிட்டார். சகோதரர்கள் இருவரும் சிறு பிராயம் முதலே முனிவர்களைத் துன்புறுத்தி அதில் மகிழ்ந்து வந்தனர். தாயைப்போல் பிள்ளை. முனிவர்களை முற்றாக ஒழிக்க விரும்பி, அவர்களை அழிப்பதற்கான வரம் வேண்டி பிரம்மாவைக் குறித்து தவம் செய்தனர். யாகம் வளர்த்தனர். ஆனால் எந்தப் பயனும் இல்லை. பிரம்மா அவர்கள் முன் தோன்றவில்லை. இதனால் இல்வலன் தன் சகோதரன் வாதாபி மீது கோபம் கொண்டான், நம் தவத்தை பிரம்மா ஏற்கவில்லை. எனக்கு ஏமாற்றம்; அவமானம்! என்று சீறினான். கோபத்தில் வாதாபியை வெட்டி, எரிந்து கொண்டிருந்த வேள்வித் தீயில் விட்டெறிந்தான். தன் குறித்து யாகம் செய்து சகோதரனையும் பலியிட்டுவிட்ட இல்வலனை ஏமாற்ற விரும்பாத பிரம்மா, அப்போதே அவன் முன் தோன்றினார், உன் தவத்தை மெச்சினோம் . என்ன வரம் வேண்டும்; கேள் என்றார். கோபத்தில் என் தம்பியை வெட்டி வேள்வி நெருப்பில் எறிந்துவிட்டேன். அவன் உயிருடன் திரும்பி வர வேண்டும். என்று கேட்டுக் கொண்டான், இல்வலன்.
பிரம்மாவும் வாதாபி! எழுந்து வா! என்றார் உடனே வாதாபி முன்போல எழுந்து வந்தான். இதைக் கண்ட இல்வலன், இதேபோல் வாதாபி எப்போது இறந்து போனாலும் நான் அழைத்த மாத்திரத்தில் அவன் எழுந்து வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டான், பிரம்மாவிடம் அவரும் அவ்வாறே இல்வலனுக்கு வரமளித்தார். அன்று முதல், வாதாபியும் இல்வலனும் முனிவர்களை அழிப்பதற்கு ஒரு நூதன வழியைக் கடைப்பிடித்தார்கள். சிவநெறியாளர்கள் போல் உருமாறி காட்டில் திரிவார்கள். ஏதாவது முனிவர்களைக் கண்டால் பணிந்து வணங்கி தங்கள் இல்லத்திற்கு பிட்சை ஏற்க வருமாறு அழைப்பார்கள். அப்படி அவர்கள் வந்ததும் இல்வலன் வாதாபியை வெட்டி சமையலில் சேர்த்து, முனிவரை உண்ணச் செய்வான். அவர் உண்டு முடித்ததும் வாதாபி! வெளியில் வா! என்று குரல் கொடுப்பான். முனிவரின் வயிற்றுக்குள் உணவாகச் சென்ற வாதாபி, உடனே முனிவரின் வயிற்றை வெடித்துக் கொண்டு வெளியே வருவான். இவ்வாறாக இருவரும் நாள்தோறும் முனிவர்களைக் கொன்று வந்தனர். இந்நிலையில் குடகு நாட்டுக்கு வந்தார் அகத்திய முனிவர் அவரை வாதாபியும் இல்வலனும் சந்தித்தனர். தங்கள் இல்லத்திற்கு வந்து உணவருந்தி தங்களை மகிழ்விக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இல்வலன் வழக்கம் போல் வாதாபியை வெட்டிச் சமைத்து முனிவருக்குப் படைத்தான், ஆனால் அகத்தியர் இறையருள் மிக்க முக்காலம் உணர்ந்த முனிவராயிற்றே! அவர் அரக்கர்களின் சூழ்ச்சியை அறிந்துகொண்டார். உணவை உண்டு முடித்து, வாதாபி! ஜீர்ணோபவ என்றார். வாதாபி அகத்தியர் வயிற்றுக்குள்ளேயே ஜீரணமாகிவிட்டான்! இதை அறியாத இல்வலன், வாதாபி! எழுந்து வா என்று பலமுறை குரல் கொடுத்தான். வாதாபி வராததைக் கண்டதும் ஆத்திரத்தில் முனிவரைக் கொல்லத் துணிந்தான் இல்வலன். அகத்தியர் தன் கையில் இருந்த தர்ப்பைப் புல்லை இல்வலன் மீது வீசி சிவபெருமானை மனதுள் நமஸ்கரித்தார். இல்வலனும் மாண்டு போனான்.