சபரிமலையில் தந்திரிக்கு தான் அதிகாரம்; மேல்சாந்தி நியமன வழக்கில் வாதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2022 07:12
சபரிமலை : சபரிமலையில் மேல்சாந்தி நியமன விஷயத்தில் தந்திரிக்குதான் இறுதி அதிகாரம் உள்ளது. இதில் குறுக்கிட முடியாது என கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல்சாந்தி நியமன வழக்கில் வாதிடப்பட்டது.
சபரிமலை மேல்சாந்தி நியமனத்துக்காக மனு செய்ததாகவும், ஆனால் தங்கள் மனுக்களை தேவசம்போர்டு பரிசீலிக்கவில்லை என்றும் கூறி சஜித், விஜிஷ், விஷ்ணுநாராயணன் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணையில் யோக ேஷம சபை சார்பில் வழக்கறிஞர் வாதிட்டதாவது: ஏராளமான ஆசாரங்களும், சம்பரதாயங்களும், பூஜை விதிகளும் உள்ளது சபரிமலை கோயில். இங்கு தந்திரி எடுக்கும் முடிவுதான் இறுதியானது. இந்த விஷயத்தில் யாரும் தலையிட முடியாது. மலையாள பூஜை விதிகளை பின்பற்றுபவர்கள் மட்டுமே சபரிமலையில் மேல்சாந்தியாக வரமுடியும். இதில் ஜாதி பாகுபாடு இல்லை என்றார்.சபரிமலை மாஜி மேல்சாந்திகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டதாவது: சபரிமலை மட்டுமல்ல குருவாயூரிலும் மலையாள பிராமணர் மட்டுமே பூஜாரிகளாக நியமிக்கப்படுகின்றனர். குருவாயூரை பொறுத்தவரை குறிப்பிட்ட இரண்டு கிராமங்களில் உள்ளவர்கள் மட்டுமே அந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற வழக்கம் உள்ளது. சபரிமலை மேல்சாந்தி என்பது பொது நியமனம் இல்லை. இந்த வழக்கில் தந்திரியை பிரதிநிதியாக சேர்க்கப்படவில்லை. சபரிமலை விசுவாசிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை.உச்சநீதிமன்றத்தில் சபரிமலை தொடர்பான வழக்குகள் முழு பெஞ்ச் விசாரணையில் உள்ளது. இதில் இறுதி தீர்ப்பு வந்த பின் இந்த மேல்சாந்தி நியமன வழக்கை விசாரிப்பது தான் நன்றாக இருக்கும் என வாதிட்டனர். இதன் தொடர் விசாரணை டிச., 28 நடைபெறும் என்று சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், பி.ஜி.அஜித்குமார் உத்தரவிட்டனர்.