பதிவு செய்த நாள்
29
டிச
2022
05:12
புனர்பூசம் 4:
தன்னம்பிக்கையுடன் பணியாற்றும் உங்களுக்கு இந்த ஆண்டில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் உயர்வைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். கொக்குக்கு ஒன்றே மதி என்ற ரீதியில் குறிக்கோளை நோக்கி பயணப்படுவீர்கள். வருமானம் சீராக வந்தாலும் விரயங்களும் ஏற்படவே செய்யும். அதோடு பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்வீர்கள். சமூகத்தில் கவுரவம் கூடும். இழப்புகளை ஈடுசெய்யும் அளவுக்கு புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கண்களில் குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனம் புண்படும்படி பேசியவர்கள் வருத்தம் தெரிவித்து நட்பு கொள்வர். இல்லத்தில் சிறப்பான வாழ்க்கைச் சூழல் உண்டாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். புதுவீடு, வாகனம் வாங்குவீர்கள்.
பணியாளர்களுக்கு நீண்டகால விருப்பம் நிறைவேறும். உடலும் உள்ளமும் உற்சாக இருக்கும். அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். தனிப்பட்ட சலுகை மூலம் பொருளாதார நிலை உயரும். வேலை தேடி அலைந்து வந்த சிலர் இப்போது நல்லதொரு வேலையில் அமர்ந்து விடுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் இனிதாக நிறைவேற சூழல் சாதகமாக அமையும். யூனியன் லீடர் போன்ற கவுரவப் பதவிகள் தேடி வரும். தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கும் முன்னேற்றங்கள் உண்டாகும். சேமிப்புகளும் பெருகும்.
வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர் ஆதரவு பெருகும். திருப்திகரமான லாபம் உண்டாகும். பொருளாதார நிலையில் உண்டாகும் முன்னேற்றத்தின் காரணமாக சேமிப்புகளிலும் அசையா சொத்துகளிலும் முதலீடு செய்வீர்கள். வண்டி, வாகன வசதிகளையும் அமைத்துக் கொள்வீர்கள். தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும், வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதிலும் நேரடி கவனம் செலுத்துவது நல்லது. அதிக அளவில் எந்தப் பொருளையும் இருப்பு வைக்காமல் இருப்பது விரயம் ஏற்படாமல் இருக்க உதவும். புதிய கிளைகள் தொடங்கி வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுக்கச் சிலர் முனையக் கூடும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அதற்கேற்ப தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. சோர்வின்றி உழைத்து உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். இதனால் அனைவரின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் உயரும். எல்லாரிடமும் சுமூகமாகப் பழகி வருவதும் அவசியம். சிலர் அரசு, தனியார் அமைப்புகள் வழங்கும் விருதுகளுக்குத் தேர்வு செய்யப்படுவர்.
மாணவர்களுக்கு கல்வித்துறையில் சாதனை படைப்பர். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள் வழங்கும் கல்விச் சலுகைகள் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள். அறிவியல், மருத்துவம் பயில்வோர் கூடுதல் முன்னேற்றத்தைக் காண்பர். உயர்கல்வி பெற வெளிநாடுகளுக்குச் செல்லும் விருப்பம் நிறைவேறும். சிலர் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய நிலையும் அடைவர்.
அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு நாளுக்குநாள் பெருகும். தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் பாராட்டுவர். பொருளாதாரம் மேம்படும். பொது மக்களிடமும் உங்களுக்கு பெருமதிப்பு இருக்கும் என்பதால் அன்புத் தொல்லைக்க்கும் ஆளாக நேரும்.
பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் பிரச்னைகள் எதுவும் ஏற்படாது. சிலர் விரும்பியவர்களையே மணந்து கொள்ளும் இனிய வாய்ப்பை பெறுவர். திருமணமான பெண்களில் சிலர் மகப்பேறு பெற்று மகிழ்வர். மகளிர் அமைப்புகளில் பெருமைக்குரிய பதவிகளைச் சிலர் பெறுவர். சேமிப்புகள் பெருகும் என்றாலும் அதை நம்பகமற்ற சீட்டு கம்பெனிகளில் கொடுத்து ஏமாறாமல் வங்கிகளில் சேமிப்பது மிக அவசியம்.
பரிகாரம்: பைரவருக்கு மிளகு தீபம் ஏற்ற முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
நிறம்: வெள்ளை, நீலம்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கம் கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
பூசம்: மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படும் நீங்கள் இந்த ஆண்டு உங்கள் காரியங்களில் கூடுதல் அக்கறை தேவைப்படும். சந்தேகத்துக்கு இடமான விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது அவசியம்.
செய்தொழிலை விரிவுபடுத்த கடன் வாங்கவும் நேரலாம். உங்கள் பேச்சைத் திரித்து புரிந்துக் கொள்ள வாய்ப்புள்ளதால் பேசும் போது வார்த்தைகளை அளந்து பேசவும். நெடுநாளாக விற்பனை ஆகாமல் இருந்த சொத்துக்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகே விற்பனையாகும். ஆரோக்கியத்திலும் சிறுசிறு தொல்லைகள் வந்தாலும், மருத்துவச் சிகிச்சையால் அனைத்தும் சரியாகி விடும். சில நேரங்களில் கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வாய்ப்புள்ளதால் அவசியமற்ற பொருட்களை வாங்க வேண்டாம். வழக்குகளில் தீர்ப்பு வர தாமதமாகும். தேவையற்ற வாய்தாக்களால் வருத்தம் கொள்வீர்கள். வாழ்வில் நல்லது எது கெட்டது எது என்பதை அறிந்து கொள்வீர்கள். மற்றபடி சகோதர சகோதரிகளிடம் உள்ளன்போடு பழகி அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆரவாரமில்லாமல் சமூகத்திற்கு நன்மை தரும் காரியங்களைச் செய்யும் காலகட்டமாக அமையும்.
பணியாளர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது. அதிகாரிகளின் கண்டனங்களுக்கு ஆளாகாமல் தப்ப, உங்கள் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. உங்கள் வசம் உள்ள ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வர வேண்டியது அவசியம். சக பணியாளர்களாலும், தொல்லைகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அவர்களிடமும் பணிவாகவும் சுமூகமாகவும் நடப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சச்சரவுகள் தோன்றும் போதும் கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையாய் இருப்பது அவசியம்.
வியாபாரிகளுக்கு மிதமான லாபம் கிடைக்கும். எனவே சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பணியாட்களிடம் அணுசரனையாக நடப்பதன் மூலம் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். கூட்டுத்தொழில் புரிபவர்களுக்கு கூட்டாளிகளுடன் மனக்கசப்பு நேர வாய்ப்புண்டு.
கலைத்துறையினர் முயற்சி செய்தால் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். உங்களால் நேரடியாக செய்து முடிக்கக் கூடியவற்றை நீங்களாகவே செய்வது எதிர்கால குழப்பத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெருமை சேர்க்கும் நற்செயல்களில் ஈடுபடுவீர்கள்.
மாணவர்களுக்கு ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழல் நிலவும். விளையாட்டுகளில் கவனத்தைக் குறைத்து, பாடங்களில் கவனத்தைச் செலுத்துவது நல்லது. நினைவாற்றலை அதிகப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். நல்ல நண்பர்களை தேர்வு செய்து நட்பு கொள்வது எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
அரசியல்வாதிகள் பணிகளில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மேலிடத்தில் உங்களைப் பற்றி அவதுாறு கூறுபவர்கள் உங்களுடனே இருப்பார்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தலைமை உங்களைப் புரிந்து கொண்டு பொறுப்பான பதவி, பொருளாதார உதவி செய்வார்கள். தொண்டர்களுக்காக கூடுதல் செலவு செய்ய நேரிடும்.
பெண்களுக்கு குடும்பத்தில் சிறுகுழப்பம் ஏற்பட்டாலும் அவை தானாகவே நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும். வேலைக்குப் போகும் பெண்கள் நேர நிர்வாகத்தைச் சரிவர கடைபிடிப்பது அவசியம். உங்கள் ரகசியங்களை எவரையும் நம்பி வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் அக்கறை கொள்வீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வழிபட பிரச்னை தீரும். தினமும் மண்அகலில் இலுப்பை எண்ணெய் விட்டு விளக்கேற்றவும்.
அதிர்ஷ்ட எண்: 1, 4, 6, 9
நிறம்: நீலம், பச்சை, வெள்ளை
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஷம் சனைச்சராய நமஹ" என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
ஆயில்யம்: இரக்க சிந்தனை கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டில் நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும். பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து விட்டு நம்பிக்கையின் சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள். கோயில் திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழ் அடைவீர்கள். மனதிலும் வைராக்கியம் கூடும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். மனதிற்கினிய சமூக விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள். பயணங்கள் செய்து அதன்மூலம் நன்மைகள் பெறுவீர்கள். எதிர்மறையான எண்ணங்கள் மறைந்து நேராக சிந்திக்கத் தொடங்குவீர்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.
பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு கிடைக்கும். புத்திரப் பேறு, வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும். பணப்புழக்கம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணிகளில் அக்கறையுடனும், கவனமுடனும் செயல்படுவது அவசியம்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். போட்டியாளர்கள் முயற்சி செய்தும் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் ஈர்க்க முடியாது. அதேபோல் நீங்களும் வாடிக்கையாளர்களைத் திருப்திபடுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான கொள்முதல் செய்யும் போது கவனமுடன் இருப்பது அவசியம். கடன் தொகையை நிலுவையில் விடுவது சிரமத்தை ஏற்படுத்தலாம்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். வண்டி, வாகன வசதிகள் அமையக் கூடும். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். நேரத்திற்கு வேலைகளை முடித்துக் கொடுத்து நற்பெயர் எடுப்பீர்கள். சக கலைஞர்களிடம் பகை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர், ஆசிரியர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்பும் படிக்கும் போதே அமையும். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவர்.
அரசியல்வாதிகள் பிறர் பொறாமைப்படும் அளவிற்கு வளர்ச்சி பெறுவர். மேலிடத்திலிருந்து முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். மற்றவர் பிரச்னைகளில் தலையிடாமல் உங்களில் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
பெண்களுக்கு குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவரப் பெற்று மகிழ்வீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவர். சிலருக்கு திடீர் திருமண வாய்ப்பு, புத்திரப்பேறு உண்டாகும். சேமிப்புகள் தக்க நேரத்தில் உதவும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பரிகாரம்: சஷ்டியன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 2, 6, 9
நிறம்: வெள்ளை, மஞ்சள்
சொல்லவேண்டிய மந்திரம்: “ஓம் ஷம் ஷண்முகாய நம:” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.