பக்தர்களுக்காக எருமேலியில் சபரிமலை சர்வதேச விமான நிலையம்; அளவீடு பணி தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2023 05:11
சபரிமலை: எருமேலியில் அமைய உள்ள சபரிமலை விமான நிலையத்துக்கான நில அளவீடு பணி தொடங்கியது. முதற்கட்டமாக எல்லைகள் நிர்ணயிக்கப்படும்கிறது.
சபரிமலை வரும் பக்தர்களுக்காக எருமேலியில் சர்வதேச விமான நிலையம் அமைகிறது. எருமேலி ஓருங்கல் கடவு, சாருங்கவேலி மக்கள் வாழ்விடங்களில் இந்தப் பணி தொடங்கியுள்ளது. ரன்வேக்காக 307 ஏக்கர் தனியார் பூமி ஆர்ஜிதம் செய்ய திட்டமிட்டு இருந்தாலும் 200 ஏக்கர் போதுமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எல்லை நிர்ணயிக்கப்பட்ட பிறகு மக்கள் வாழ்விடங்களில் எவ்வளவு நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டி இருக்கும் என்பது இறுதி முடிவு செய்யப்படும். செறுபள்ளி எஸ்டேட்டில 2263 ஏக்கர் நிலமும் ஆர்ஜிதம் செய்யப்படும்.
எருமேலி பஞ்சாயத்தில் ஓருங்கல் கடவு முதல் மணி மலை பஞ்சாயத்தில் சாருவேலி வரை கிழக்கு- மேற்கு திசையில் 3500 மீட்டர் நீளத்தில் ரன்வே அமைகிறது. ரோடு, வடிகால், பாதுகாப்பு மண்டலம் உட்பட 110 மீட்டர் அகலம் தேவைப்படுகிறது. எருமேலி நகரத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ரன்வேயின் முதல் சிக்னல் அமையும்.
எர்ணாகுளம் மெரிடியன் சர்வே அண்ட் மேப்பிங் நிறுவனம் இந்தப் பணியை செய்து வருகிறது.இரண்டு மாதத்துக்குள் அளவீடு பணி முடிவடையும். ஆர்ஜிதம் செய்ய வேண்டிய நிலங்களின் விபரங்களை உட்படுத்தி இந்த நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்த பின்னர் நில ஆர்ஜிதம் செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிடும் . பின்னர் விமான நிலையத்துக்கான டெண்டர் விடப்படும். அளவீடு செய்யும் பணியை கேரளா அரசின் முதன்மை கொறடா என். ஜெயராஜ் எம்.எல்.ஏ., செபஸ்தியார் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.