சபரிமலையில் குவியும் பக்தர்கள்; மண்டல பூஜைக்கு கூடுதல் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2023 11:12
சபரிமலை: சபரிமலையில் மண்டல பூஜை பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இனிவரும் நாட்களில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க முன்னேற்பாடு நடக்கிறது.
சபரிமலையில் நடப்பு மண்டல காலம் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கார்த்திகை 1 ல் தொடங்கிய மண்டல கால பூஜைகள் டிச. 27ல் நிறைவு பெறுகிறது. டிச.26- ல் தங்க அங்கி சன்னிதானம் வந்தடையும். டிச. 27-ல் காலை 10:30 மணிக்கு மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு நடை அடைக்கப்பட்டு மண்டல காலம் நிறைவு பெறும்.
மண்டல பூஜை நாளில் சபரிமலை சன்னிதானத்தில் மட்டும் 2700 போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இதுவரை இங்கு 2150 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். 10 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 10 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. இதில் 35 இன்ஸ்பெக்டர்கள் 105 எஸ்.ஐ., ஏ.எஸ்.ஐ. ஆகியோர் பணிகளில் ஈடுபடுவர். இவர்களுடன் மத்திய அதிவிரைவுபடை போலீஸ், தேசிய பேரிடர் நிவாரண படையினர் ,அண்டை மாநில போலீசார் என 100-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து செயல்படுவர்.
சன்னிதானம் ஆடிட்டோரியத்தில் போலீசாரிடையே டி.ஐ. ஜி ராகுல் ஆர் நாயர் பேசியதாவது: பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் மிக கவனமாக செயல்பட வேண்டிய அவசியம். அவர்களுடன் மிகவும் கனிவுடன் பேச வேண்டும். பணியிடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர வேண்டும். அதுபோல மாற்று ஆள் வரும் வரை அந்த இடத்தில் தொடர்ந்து பணிபுரிய வேண்டும். தற்போது சபரிமலையில் வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என்பதால் போலீசாரின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது என்றார்.